தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து தே.மு.தி.க சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடைபெற்ற 100 வது நாள் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில்
13 பேர் உயிரிழந்தனர். அன்று நடந்த கலவரம் மற்றும் தடியடியால் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் எனப் பலரும் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன்னர், தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தே.தி.மு.க சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம், 13 பேரின் உயிரைப் பறித்த காவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல் பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தே.மு.தி.க தொண்டர்கள் கலந்துகொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். இதனால் ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும்” எனத் தெரிவித்தார்.