Published:Updated:

”அரசியல்சாசன விரோதமாகச் செயல்படும் கலெக்டர்கள்!" - கொந்தளிக்கும் விவசாயிகள்

”அரசியல்சாசன விரோதமாகச் செயல்படும் கலெக்டர்கள்!" - கொந்தளிக்கும் விவசாயிகள்
”அரசியல்சாசன விரோதமாகச் செயல்படும் கலெக்டர்கள்!" - கொந்தளிக்கும் விவசாயிகள்

”அரசியல்சாசன விரோதமாகச் செயல்படும் கலெக்டர்கள்!" - கொந்தளிக்கும் விவசாயிகள்

ட்டுவழிச் சாலைக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து வட தமிழகத்தில் தொடர் போராட்டம் நடந்துவருகிறது. இந்நிலையில், பாதிக்கப்படும் விவசாயிகளின் அடிப்படை ஜனநாயக உரிமையை நசுக்கும் வகையில், மாவட்ட நிர்வாகங்கள் உட்பட அரசு இயந்திரம் நடந்துகொள்வதாக வலுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்துக்கு முன்னரே, விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்தது. மேற்கு தமிழகப் பகுதிகளில் உயரழுத்த மின்கோபுரம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் கடந்த மாதம் முழுவதும் நடந்தது. பல மாவட்டங்களில் விவசாயிகளின் எதிர்ப்பால் பயிர்நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைப்பது நிறுத்தியும்வைக்கப்பட்டது. அது தற்காலிகம்தான் என்பது கடந்த மாதக் கடைசியில் நடந்த நிகழ்வுகள் காட்டின. 

விளைநிலங்களில் அல்லாமல் வேறு பகுதிகள் வழியாக இத்திட்டத்தைச் செயல்படுத்தலாம் என வலியுறுத்தி, கடந்த மாதம் 25-ம் தேதி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது. அதற்கு அனுமதிதராத போலீஸ், அந்தத் தகவலையும் கடைசிநேரத்தில் தெரிவித்தது. இது தொடர்பாகத் தகவல் தெரிவிப்பதற்காக ஈரோட்டில் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைச்செயலாளர் ஏ.எம்.முனுசாமி போராட்டம் அறிவிக்கப்பட்ட இடத்துக்குச் சென்றபோது, போலீஸ்காரர்கள் அவரிடம் கடுமையாக நடந்துகொண்டனர். ஊடகத்தினருக்கு பேட்டி அளித்துக்கொண்டிருந்தவரிடம் கடுமைகாட்டி கைதுசெய்து போனார்கள். 

தொடர்ந்து, எட்டுவழிச் சாலைப் பிரச்னையில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 26-ம் தேதியன்று விவசாயிகளின் வீடுகள், வயல்வெளிகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். அன்றைய போராட்டத்தில் பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லிபாபு, ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது, தேடப்படும் குற்றவாளியிடம் நடந்துகொள்வதைவிட மோசமாக அவரை இழுத்துச்சென்று வாகனத்தில் ஏற்றியது, போலீஸ் படை. 

நேற்று திருவண்ணாமலையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், எட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று கோரிக்கை வைத்ததற்காக, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் பலராமன் உட்பட ஆறு விவசாயிகள் கைதுசெய்யப்பட்டனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் எட்டுவழிச் சாலை குறித்து பரப்புரைப் பயணம் நடத்திக்கொண்டிருந்த பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 18 பேர் கைதுசெய்யப்பட்டு, வேலூர் மையச் சிறையில் அடைக்கப்பட்டனர். துண்டுப்பிரசுரம் மூலம் கருத்துப்பரப்பல் செய்ததற்காக அவர்கள் மீது பத்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது, இவர்கள் போராட்டம்கூட நடத்தவில்லை; அரசின் குறிப்பிட்ட ஒரு திட்டத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து பரப்புரைப் பயணம் மட்டுமே மேற்கொண்டவர்கள். 

எட்டுவழிச் சாலைத் திட்டத்தைக் கைவிடக்கோரி ஜூலை 6-ம் தேதியன்று விவசாயிகள் சங்கங்களின் சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட அளவில் அந்தத் திட்டத்தின் நகல் எரிப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்று காவல்துறை மூலம் அரசுத்தரப்பு நெருக்கடி தந்துவருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்ட அறிவிப்பு ஒன்று, இதன் உச்சகட்டம் என்கிறார்கள், விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள். காஞ்சிபுரம் ஆட்சியர் 2-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பின் விவரம் இது:

” சென்னை முதல் சேலம்வரை அமைக்கப்படும் 8 வழி பசுமைச்சாலைக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59.1 கிமீக்கு நிலம் எடுக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 26-ம் தேதி வெளியிடப்பட்டது. நாளிதழ்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. நில எடுப்பில் நில உரிமையாளர் இல்லாதவர்கள், குறிப்பாக வெளியூர் நபர்கள் ஊடுருவி நில உரிமைதாரர்களுக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்பட்டாலும், அமைதிக்கு பங்கம்விளைவிக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும்வகையிலும் செயல்பட்டால் அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகப் பயன்படுத்தப்படும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன உரிமம் ரத்து செய்யப்படும்” என்பது காஞ்சிபுரம் ஆட்சியரின் எச்சரிக்கை!

இந்த அறிவிப்பின் கடைசிப் பகுதியை, குடிமக்களுக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படைச் சட்ட உரிமையை அப்பட்டமாக மீறுவதாக இருக்கிறது என்கிறார்கள், போராடும் விவசாயிகள். 

விவசாயிகள் மீதான தொடர்ச்சியான இந்த கடும் நடவடிக்கைகள்; மாநிலத்தின் போலீஸ் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறப்பதையே காட்டுகின்றன என்கிறார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.சண்முகம். 

“ காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை எஸ்.பி. ஆகியோரும் நேரில் பேசும்போது எங்கள் அமைப்பினரிடம் இதைச் சொல்லியிருக்கின்றனர். வெளி மாவட்ட ஆட்கள் வரக்கூடாது எனக் கூறிய ஒரு எஸ்.பி.யிடம், நீங்கள் மட்டும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருக்கிறீர்களே எனக் கேட்டோம். அதற்கு, ‘நீங்கள் எல்லாம் பிரச்னை இல்லை; யார்யாரோ வந்துவிடுகிறார்கள்’என்று பதில்கூறினார். அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், வெளிமாவட்டங்களிலிருந்து வரக்கூடாது என இவர்கள் கூறுவது, அரசியல் சாசனவிரோதமாகும். அரசமைப்புச்சட்டத்தின்படி குடிமக்கள் யாரும் நாட்டின் எந்தப் பகுதிக்கும் போகலாம்; தொழில்செய்யலாம். எதைப் பற்றியும் சிந்திக்க, பேச, எழுத அரசமைப்புச் சட்டத்தின் 19-ம் பிரிவு அனுமதி வழங்குகிறது. இதைத்தான் பேசணும், எழுதணும் என்று சொல்லமுடியாது; அரசாங்கம் தன்நிலையை விளக்கிப் பிரசாரம் செய்யலாம்.

முன்பெல்லாம் சட்டவிரோதச் செயல்களை காவல்துறை போன்றவற்றில் மறைமுகமாகச் செய்வார்கள். இப்போது அதை பகிரங்கமாக செய்யத் துணிந்திருக்கிறார்கள். இந்த மிரட்டலானது சிவில் சமூகத்துக்கு பெரும் சவாலை விடுத்திருக்கிறது. போராடிப்பெற்ற சிவில் உரிமைகள் மீது கொடூரமான தாக்குதலை ஏவியிருக்கிறது, அரசாங்கம். போலீஸை ஏவி, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கப்பார்க்கிறது. இது ஏதோ குறிப்பிட்ட அமைப்பின் மீதானது மட்டும் அல்ல. எளிய மக்களின் அமைப்புகளுக்கு பிரசாரத்துக்காக வாகனங்கள் தருவோரையும் மிரட்டிப் பார்க்கிறார்கள். சிவில்சமூகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என விரும்பும் ஒவ்வொருவரும் இந்த உரிமைப்பறிப்பைத் தடுக்க குரல்கொடுக்கவேண்டும்” என வேண்டுகோளும் விடுக்கிறார், பெ. சண்முகம். 

அடுத்த கட்டுரைக்கு