Published:Updated:

``செப்டம்பர் 28-ம் தேதி கடை அடைப்புப் போராட்டம்!’’ - விக்கிரமராஜா

``செப்டம்பர் 28-ம் தேதி கடை அடைப்புப் போராட்டம்!’’ - விக்கிரமராஜா

பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு எதிராக நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றுவரும் முழு அடைப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் மட்டும் பிசுபிசுத்துப் போயிருக்கிறது!

``செப்டம்பர் 28-ம் தேதி கடை அடைப்புப் போராட்டம்!’’ - விக்கிரமராஜா

பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு எதிராக நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றுவரும் முழு அடைப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் மட்டும் பிசுபிசுத்துப் போயிருக்கிறது!

Published:Updated:
``செப்டம்பர் 28-ம் தேதி கடை அடைப்புப் போராட்டம்!’’ - விக்கிரமராஜா

ரிபொருள் விலை உயர்வு மற்றும் மத்திய பி.ஜே.பி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து இன்றைய தினம் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய பந்த்தை அறிவித்தது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு இடதுசாரி அமைப்புகளும் தங்களது ஆதரவைத் தெரிவித்ததையடுத்து, பி.ஜே.பி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், இன்றைய தினம் 'பாரத் பந்த்' வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழகத்தில், பி.ஜே.பி ஆட்சியில் இல்லாத சூழலிலும்கூட 'பாரத் பந்த்' பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

தி.மு.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் அனைத்தும் இந்தப் 'பாரத் பந்த்'துக்கு தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன. ஆனாலும்கூட சாலைகளில் ஆட்டோ, கார், பேருந்து என வழக்கமான போக்குவரத்து தொடர்கிறது. வணிகர் சங்கங்களின் பேரவையினர் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் காரணத்தால், ஆங்காங்கே கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு முழு அடைப்புப் போராட்டத்துக்கு வெளிப்படையான ஆதரவைத் தெரிவிக்கவில்லை. எனவே, பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வணிகர் சங்கப் பேரமைப்பு இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளாதது பொதுமக்கள் மத்தியில் பலத்தக் கேள்விகளை எழுப்பியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், வியாபாரிகள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், வணிகர் சங்கப் பேரமைப்பின் 'பந்த் புறக்கணிப்பு'ப் பின்னணியைத் தெரிந்துகொள்ளும் நோக்கில், அவ்வமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவைத் தொடர்புகொண்டு பேசினோம்...

''இன்றைய தினம் நடைபெற்ற பாரத் பந்துக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தார்மிக ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. ஆனால், எங்களால் நேரடியாக முழு அடைப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. காரணம் வருகிற 28-ம் தேதி அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பில், மத்திய பி.ஜே.பி அரசைக் கண்டித்து நாடு தழுவிய கடை அடைப்புப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. இது ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டத்தில் வியாபாரிகளைப் பாதிக்கும் வண்ணம் உள்ள விதிகளைத் திருத்தம் செய்யக் கோரி பல ஆண்டுகளாக வணிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனாலும், மத்திய அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்றும் நெடுநாள்களாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனாலும் மத்திய பி.ஜே.பி அரசு, மறைமுகமான வழிகளில் அந்நிய முதலீட்டை இந்தியாவுக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறது. மேலும் ஜி.எஸ்.டி வரி கட்டிவரக்கூடிய வணிகர்களுக்கு நியாயமான சலுகைகளைக்கூட இந்த அரசு தர மறுக்கிறது. இவற்றையெல்லாம் கண்டித்துதான் வருகிற 28-ம் தேதி நாடு முழுக்க முழு கடை அடைப்புப் போராட்டம் நடத்தவிருக்கிறோம். இன்னும் சில நாள்களில் கடை அடைப்புப் போராட்டம் நடத்த வேண்டிய இந்தச் சூழலில், இன்றைக்கும் கடைகளை அடைப்பதென்பது முடியாத காரியம். 

அதுமட்டுமல்ல... இன்றைக்கு வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை. கடைகளில் பொருள்கள் வாங்கிய நிறுவனங்களுக்கு நாங்கள் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை தேதியிட்டுத்தான் காசோலைகள் கொடுத்திருப்போம். எனவே, இன்றைய தினம் கட்டாயம் நாங்கள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியாக வேண்டும். மேலும், நேற்றுதான் விடுமுறை தினம். மறுபடி இன்றும் கடைகளை அடைத்தால், பல்வேறு சிக்கல்களும் எழும். இந்த நடைமுறைச் சிக்கல்கள் எல்லாவற்றையும் கருத்தில்கொண்டே நாங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க இயலவில்லை. ஆனாலும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டதற்கிணங்க எங்கள் பேரமைப்பு நிர்வாகிகளைச் சர்வ கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கச் செய்துவிட்டோம்'' என்கிறார் விக்கிரமராஜா விளக்கமாக!