சமூகம்
Published:Updated:

ஆழியாறுக்குப் போராட்டம்... சிறுவாணியில் ரகசிய அணை!

ஆழியாறுக்குப் போராட்டம்... சிறுவாணியில் ரகசிய அணை!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆழியாறுக்குப் போராட்டம்... சிறுவாணியில் ரகசிய அணை!

மிரட்டும் கேரளா... பணிந்துபோகும் தமிழகம்

பொள்ளாச்சி... மீண்டும் போராட்டக் களமாகியிருக்கிறது. ஆழியாறில் தண்ணீர் கேட்டு கேரள மக்கள் ஆரம்பித்துவைத்த வன்முறைப் போராட்டம், இப்போது இரு மாநிலங்களுக்குமான ‘தண்ணீர் யுத்தமாக’  உருவெடுத்திருக்கிறது. ‘ஆழியாறிலிருந்து கேரளா வுக்குத் தண்ணீர் திறந்துவிடக்கூடாது’ என்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். பதிலுக்கு சிறுவாணி தண்ணீரைத் தமிழகத்துக்கு விடாமல் தேக்குவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது கேரளா. நம் எதிர்காலம் எவ்வளவு மோசமாக மாறப்போகிறது என்பதற்கான முன்னோட்டம் இது.

காவிரியில் நமக்குச் சேர வேண்டிய 14.75 டி.எம்.சி தண்ணீர் கர்நாடகத்திற்கு தாரைவார்க்கப்பட்டதால் தகித்துக் கொண்டிருக்கிறது தமிழகம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கதையாக, கேரளாவும் தன் பங்குக்கு,  தமிழகத்துக்கு ஆப்பு வைக்கப் பார்க்கிறது. தமிழ்நாட்டில் உருவாகும் சிறுவாணி, 25 கி.மீ தூரம் கேரளாவுக்குள் பாய்ந்து மீண்டும் தமிழகம் திரும்புகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களின் முக்கியமான நீர் ஆதாரம், சிறுவாணிதான். தமிழகத்தில் உருவானாலும் சிறுவாணி அணை அமைந்துள்ள பகுதி கேரளாவுக்குச் சொந்தமானது என்பதுதான் நமக்கு உள்ள சிக்கல். ‘‘இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஏற்கெனவே இரண்டு இடங்களில் தந்திரமாக தடுப்பணை கட்டி முடித்துவிட்ட கேரளா, இப்போது நியாயமே இல்லாமல் ஆழியாறு பிரச்னையைக் கிளப்பி அடுத்த தடுப்பணைக்கு அஸ்திவாரம் போடுகிறது’’ என்று பதறுகிறார்கள் தமிழக விவசாயிகள்.

ஆழியாறுக்குப் போராட்டம்... சிறுவாணியில் ரகசிய அணை!

ஆழியாறிலிருந்து கேரளாவுக்கு இப்போது தண்ணீர் திறக்கக்கூடாது என்று போராடிவரும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் பரமசிவத்திடம் பேசினோம். ‘‘ஆனைமலையாறு, சோலையாறு, நீராறு, பரம்பிக்குளம் மற்றும் கிளை நதிகளான பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய நதிகளை இணைத்து, தமிழகமும் கேரளாவும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டம். இதன் மூலம் தமிழகத்தில் கோவை, திருப்பூர் மாவட்டங்களின் பல பகுதிகளும், கேரளாவின் பாலக்காடு மற்றும் திருச்சூர் உள்ளிட்ட பகுதிகளும் பயனடைகின்றன. ஒப்பந்தப்படி, ஆழியாறிலிருந்து 7.25 டி.எம்.சி தண்ணீரை நாம் கேரளாவுக்கு ஆண்டுதோறும் தர வேண்டும். ஒவ்வொருமுறையும் அவர்களுக்குச் சேர வேண்டிய தண்ணீரை நாம் ஒழுங்காகக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு தர வேண்டியதில், இன்னும் ஒரு டி.எம்.சி தண்ணீர்தான் பாக்கி இருக்கிறது. அதைக் கொடுப்பதற்கு இன்னும் நான்கு மாத கால அவகாசம் இருக்கிறது.

ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த கேரள எம்.எல்.ஏ-வான கிருஷ்ணன் குட்டி, ‘இந்தத் தண்ணீரை உடனே திறந்துவிட வேண்டும்’ எனக் கேட்டு வன்முறையில் ஈடுபட்டார். தன் ஆதரவாளர்களைத் திரட்டி, தமிழகத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் சரக்கு வாகனங்களைத் தடுத்து நிறுத்தி மறியல் செய்தார். வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி அட்டூழியம் செய்தார்கள். ஆனால், ‘இப்போது தண்ணீர் திறக்க முடியாது’ என்று முதலில் மறுத்துவிட்டது தமிழக அரசு. உண்மையும் அதுதான். கேரளாவுக்குத் திறந்துவிடும் அளவுக்கு ஆழியாறில் தண்ணீர் இல்லை.

ஆழியாறுக்குப் போராட்டம்... சிறுவாணியில் ரகசிய அணை!

கேரளாவும் இதைத்தான் நம்மிடம் எதிர்பார்த்தது. உடனே சிறுவாணி அணையில் கை வைத்துவிட்டது. இதைத் தடுக்கமுடியாத தமிழக அரசு, பயந்துகொண்டு ஆழியாறிலிருந்து கேரளாவுக்குத் தண்ணீர் திறந்துள்ளது.  அந்தத் தண்ணீரை நம்பி தமிழகத்தில் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக் கின்றன. வருடத்துக்கு நான்கு மண்டலங்களாகப் பிரித்து, இரண்டு சுற்றுகளாக தண்ணீர் திறக்கிறது தமிழக அரசு. இப்போது முதல் மண்டலத்துக்கு இரண்டாவது சுற்று தண்ணீர் திறக்க அரசாணை வெளியிட்டிருந்தார்கள். அதை நம்பி பயிர் செய்த விவசாயிகள் தலையில் இடியை இறக்கியிருக்கிறது தமிழக அரசு. கேரளாவுக்குத் தண்ணீர் திறந் திருப்பதை உடனடியாக நிறுத்தவில்லையென்றால், நாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம்’’ என்றவரின் குரலில் கோபம் தெறிக்கிறது.

சிறுவாணியின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணனிடம் பேசினோம். ‘‘ஆழியாறுக்கும் சிறுவாணிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஆழியாறில் தண்ணீர் தரவில்லை என்று நியாயமே இல்லாத நாடகமாடி, சிறுவாணி தண்ணீருக்கு வேட்டு வைக்கப் பார்க்கிறது கேரளா. சிறுவாணி அணையிலிருந்து வனவிலங்குகளுக்கும், பழங்குடிகளின் குடிநீர் தேவைக்கும் எனக் கேரள அரசு தினமும் 5 கன அடி தண்ணீர் திறந்துகொள்வது நடைமுறை. அவர்கள் கேட்டதுமே ஆழியாறிலிருந்து நாம் தண்ணீர் தரவில்லை என்று சொல்லி, 5 கன அடிக்குப் பதிலாக, கேரளப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 80 கன அடி தண்ணீரைத்  திறந்துவிட்டுக் கொண்டார்கள். மூன்று, நான்கு நாள்கள் அப்படிச் செய்திருக்கிறார்கள். இதனால், பில்லூர் அணைக்குத் தண்ணீர் வரத்து வெகுவாகக் குறைந்துபோய் பதற்றச்சூழல் உருவானது. வேறுவழியின்றி தமிழக அரசு ஆழியாறிலிருந்து உடனடியாகத் தண்ணீர் திறந்துள்ளது. இப்போது இங்கிருந்து தண்ணீர் திறந்தாயிற்று. கேரள அரசு சிறுவாணியிலிருந்து வீணாக்கிய தண்ணீரை யார் திருப்பி கொடுப்பார்கள்?’’ என்று கேட்கும் ராமகிருட்டிணன், ‘‘தமிழகத்தை மிரட்டி தண்ணீர் வாங்குவது மட்டுமே கேரளாவின் நோக்கம் இல்லை’’ என்று கேரளாவின் உள்நோக்கத்தை விவரிக்க ஆரம்பித்தார். 

ஆழியாறுக்குப் போராட்டம்... சிறுவாணியில் ரகசிய அணை!

‘‘ஏற்கெனவே சிறுவாணியின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சு கண்டி உள்ளிட்ட நான்கு இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி முடித்துள்ளது கேரள அரசு. ஒவ்வொரு அணையும் 5 அடி உயரத்திலும், ஒரு கிலோ மீட்டர் தூரம்வரை தண்ணீரைத் தேக்கும் வகையிலும் கட்டப் பட்டுள்ளது. இந்தத் தடுப்பணைகள் கோடையில் நமக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுவிட்டால், சிறுவாணி அணையும் அந்த வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அதன்பின் இப்படியான தடுப்பணைகளைக் கட்ட முடியாது. அப்படி ஏதாவது நடந்துவிட்டால், ஆறு தடுப்பணைகள் கட்டவேண்டும் என்ற தங்களின் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்று தவிக்கிறது கேரளா. அதனால், அவசர அவசரமாக சோலையூர் என்கிற இடத்தில் சிறுவாணியின் குறுக்கே தடுப்பணையைக் கட்ட ஆரம்பித்துள்ளார்கள். இதற்குத் தமிழக அரசு இதுவரை எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை’’ என்று சொல்லி அதிர வைக்கிறார் அவர்.

ஆழியாறுக்குப் போராட்டம்... சிறுவாணியில் ரகசிய அணை!

தடுப்பணை கட்டப்படுவதாகச் சொல்லப்படும் கேரளப்பகுதியான சோலையூர் பஞ்சாயத்தைத் தேடிப் போனோம். கேரளப் பகுதிக்குள் நுழைந்ததுமே தமிழக வாகனங்களை ‘வெறி’த்துப் பார்க்கிறார்கள். தடுப்பணை கட்டுவது பற்றிக் கேட்டால், அடிக்காத குறையாகப் பதில் சொல்கிறார்கள். சோலையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோட்டைத்துறையில்தான் தடுப்பணைக்கான வேலைகள் நடைபெறுவதாகத் தகவல் கிடைத்து, அங்கு போனோம். ஆற்று நீரை மறித்து, ஆரம்பகட்டப் பணிகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அங்கு செல்வதற்குச் சாலை வசதிகூட இல்லை. தற்காலிகமாகக் கட்டுமானப் பணிகளுக்கு வாகனங்கள் செல்வதற்கு வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதுகுறித்துக் கேட்டதற்கு அருகில் இருந்தவர்கள் யாரும் பேச முன்வரவில்லை. மணி என்ற விவசாயி, ‘‘உங்க ஊர்ல ஆத்துத் தண்ணீரை கூல்டிரிங்ஸ் கம்பெனிக்குக் கொடுக்குறீங்க. காசுக்கு விக்கிறீங்க. நாங்க அப்படி கிடையாது. விவசாயம்தான் பண்றோம்’’ என்று முகத்தில் அறைந்தார்போல் பதில் சொல்லிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தார்.

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்