
நீண்ட பயணத்தில் வென்ற விவசாயிகள்!
மும்பை மக்களுக்கு எல்லா மொழிகளிலும் பிடிக்காத வார்த்தை, ‘போராட்டம்’. இந்தியாவின் பிஸியான பிசினஸ் தலைநகரம் எந்தத் தொந்தரவையும் விரும்புவதில்லை. அதிலும், திங்கள்கிழமை காலை என்பது டென்ஷன் நேரம். குறிப்பாக, மார்ச் 12 அன்று பள்ளி மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு வேறு. மும்பையின் புறநகர் மைதானம் ஒன்றில் முகாமிட்டுத் தங்கியிருந்த போராட்டக்காரர்கள் 50 ஆயிரம் பேர், அந்தத் திங்கள்கிழமையில்தான் ஆர்ப்பரித்து நகருக்குள் நுழைந்து சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். அவர்களின் நியாயமான கோரிக்கைகளைவிட, ‘தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறதே’ என்பதுதான் மும்பை மக்களின் ஆதங்கம். ‘‘தேர்வு எழுதும் மாணவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்’’ என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வேண்டுகோள்விடுத்திருந்தார்.
பொதுவாக, பட்டப்பகலில் பிஸியான சாலைகளில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திப் பேரணி நடத்துவதையே கட்சிகளும் அமைப்புகளும் விரும்புகின்றன. ‘யாரையும் தொந்தரவு செய்யாமல் ஒரு போராட்டம் நடத்தினால், அரசின் கவனம் நம் பக்கம் திரும்பாது. நம் கோரிக்கைகளை மீடியாக்களும் கவனிக்காது’ என்ற நினைப்பு இங்கே ஆழமாக இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்கம் இந்த நினைப்பைப் புரட்டிப்போட்டுவிட்டது. அவர்கள் செய்த காரியம், யாரும் எதிர்பாராதது. மும்பை புறநகரில் சோமையா மைதானத்தில் தங்கியிருந்த அவர்கள், தங்கள் தூக்கத்தைத் துறந்து திங்கள்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு எழுந்து பேரணியாகப் புறப்பட்டனர். 15 கி.மீ தூரத்தை இருட்டிலேயே கடந்து, அதிகாலை ஐந்து மணிக்கு ஆசாத் மைதானத்துக்கு வந்துவிட்டனர். மும்பை மக்கள் விழித்தெழுந்தபோது, அவர்களுக்கு எந்தத் தொந்தரவும் இல்லை.

‘‘நாங்கள் பள்ளிக்கூடம் போனதில்லை. ஆனால், கல்வியின் அவசியம் எங்களுக்குப் புரியும். தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கோ, அலுவலகம் போகிற மக்களுக்கோ எங்களால் எந்தத் தொந்தரவும் ஏற்படக் கூடாது என்பதால் தான் இப்படி ஒரு முடிவை எடுத்தோம்’’ என எளிய விவசாயிகள் பொறுப்புடன் சொன்னதில் நெகிழ்ந்துவிட்டனர் மும்பை மக்கள். அவர்கள் அத்தனை பேரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்தியாவின் கரன்சி அச்சிடப்படும் நாசிக் நகரத்தை ஒட்டிய பகுதிகளில்தான், இந்தியாவிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை நிகழ்கிறது என்பது சோக முரண். விவசாயக் கடன் தள்ளுபடிக்கு ஏகப்பட்ட விதிமுறைகளை வகுத்து, யாருக்கும் பயனில்லாமல் செய்துவிடுகிறது அரசு. விளைபொருளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை என ஒன்றை அரசு அறிவிக்கிறது. அதை வியாபாரிகள் மதிப்பதே இல்லை. கரும்புக்கான விலையைச் சர்க்கரை ஆலைகள் கொடுப்பதில்லை. அரசுத் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படும்போது முதல் பாதிப்பு விவசாயிகளுக்கே ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்ற ‘நீண்ட பயணம்’ செல்ல முடிவெடுத்தனர் மகாராஷ்டிர விவசாயிகள். அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஏற்பாடு செய்த இந்தப் பயணம், நாசிக் நகரிலிருந்து 200 கி.மீ தூரத்திலிருக்கும் மும்பையை நோக்கி ஒரு வாரம் நடைபெற்றது. 20 ஆயிரம் பேருடன் ஆரம்பித்த இந்தப் பேரணி மும்பையை அடைந்தபோது, 50 ஆயிரம் பேராக எண்ணிக்கை உயர்ந்திருந்தது. ‘‘எங்கள் கோரிக்கை களுக்குத் தீர்வு கிடைக்கும்வரை ஊர் திரும்ப மாட்டோம்’’ என ஆசாத் மைதானத்தில் அவர்கள் அமர்ந்து விட்டனர்.
அவர்களை மும்பை மக்கள் எதிர்கொண்ட விதம் நெகிழ வைத்தது. ‘நமக்குச் சோறுபோடும் விவசாயிகள் நம் நகரத்துக்கு வந்து பசியுடன் இருக்கிறார்கள். அவர்களை உபசரிப் போம்’ எனச் சமூக வலைத்தளங்களில் பலரும் அழைப்புவிடுத்தனர். அவர்கள் வந்த வழியெங்கும் உணவு, பிஸ்கெட், தண்ணீர் என வழங்கினர். மும்பையின் சில பகுதிகளில் மலர்தூவிக் கொடுக்கப்பட்ட வரவேற்பு, விவசாயிகளை நெகிழ வைத்தது. பலரும் செருப்பு இல்லாமல் வெறுங்கால்களில் நடந்து வந்து பாதங்கள் ரணமாகின. அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டன. பலரும் அந்த எளிய விவசாயிகளுக்காகச் செருப்புகள் வாங்கிக்கொண்டு போனார்கள். அதனால், மும்பை நகரில் செருப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. பிரபல டாக்டர்கள் பலரும் தாங்களாகவே அந்த மைதானத்துக்குக் கிளம்பிச்சென்று, நீண்ட பயணக் களைப்பிலிருந்த விவசாயிகளுக்குச் சிகிச்சை தந்தனர். தங்கள் பாக்கெட் மணியில் பிஸ்கெட் வாங்கிக்கொண்டு வந்து முதிய விவசாயிகளுக்குக் கொடுத்து, அன்பு முத்தங்களைப் பரிசாகப் பெற்றுக்கொண்டு போனார்கள் சிறுவர்கள். பொதுவாகத் தொழிலதிபர்கள், போராட்டங்களை விரும்பமாட்டார்கள். ‘வெடிப்புகண்ட பாதங்களுடன் முதிய விவசாயிகள் இவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கிறார்கள். இவர்களைவிட உறுதியான மனிதர்களைப் பார்க்க முடியாது’ எனத் தொழிலதிபரான ஆனந்த் மஹிந்த்ரா ட்விட்டரில் புகழ்ந்திருந்தார். இப்படி எல்லாத் தரப்பினரும், விவசாயிகளுக்காகப் பேசும் நிர்பந்தத்தை இந்தப் பேரணி ஏற்படுத்தியது.

அதைவிட முக்கியமாக, இந்த விஷயத்தில் அரசு தனிமைப்படுத்தப்பட்டது. விவசாயிகளை எதிர்க்கட்சிகள் ஆதரிப்பது இயல்பு. ஆனால், ஆளும் கூட்டணியில் இருக்கும் சிவசேனாவும்கூட விவசாயிகள் பக்கம் நின்றது. ‘விவசாயிகள் சிவப்புக்கொடி ஏந்தி வருகிறார்கள். இது கம்யூனிஸ்ட்களின் அரசியல் சதி. மாவோயிஸ்ட்கள் அரசியல் ஆதாயத்துக்காக விவசாயிகளைப் பயன்படுத்துகிறார்கள்’ என பி.ஜே.பி-யின் எம்.பி-யான பூனம் மகாஜன் சொன்னார். அதற்குக் கடுமையாகப் பதில் சொன்னார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே. ‘‘எனக்கும் சிவப்பு தெரிகிறது. அது, கொடி இல்லை. அவர்களின் பாதங்களிலிருந்து வழியும் ரத்தம். நம் உடலிலும் அந்த ரத்தம்தான் ஓடுகிறது. அவர்களின் அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும், அவர்களின் பிரச்னைகளை அரசு காதுகொடுத்துக் கேட்க வேண்டும்’’ என்றார் ஆதித்ய தாக்கரே.
அரசு உடனடியாக இறங்கிவந்தது. அமைச்சர்கள் குழு ஒன்றை அமைத்து, விவசாயிகளுடன் பேசி, அவர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என எழுதிக்கொடுத்துள்ளார் முதல்வர் ஃபட்னாவிஸ். மக்கள் மனங்களை வென்று, அரசைத் தனிமைப்படுத்தினால் வெற்றியை வசப்படுத்தலாம் எனப் போராட்ட இலக்கணம் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள் இந்த எளிய விவசாயிகள்.
- தி.முருகன்