அலசல்
Published:Updated:

“தினமும் நாப்கின் பயன்படுத்துவீங்களா?”

“தினமும் நாப்கின் பயன்படுத்துவீங்களா?”
பிரீமியம் ஸ்டோரி
News
“தினமும் நாப்கின் பயன்படுத்துவீங்களா?”

திருச்சி ஜெயில் திகில்

“தஞ்சாவூரிலிருந்து கதிராமங்கலம் செல்வதற்காக பஸ்ஸில் ஏறினோம். அப்போது போலீஸார் எங்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். ‘இது ஜனநாயக நாடு. நாங்கள் பஸ்ஸில் பயணம் செய்யக் கூடாதா?’ என்று கேட்டோம். அதைக் கண்டுகொள்ளாமல், எங்களை வலுக்கட்டாயமாக இழுத்து ஆட்டோவில் ஏற்றினர். அதில், வளர்மதியின் உடை கிழிந்தது. உடலில் காயங்கள் ஏற்பட்டன. எங்களைத் தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குக் கூட்டிச்சென்று இரவு 10 மணி வரை விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீஸார், என்னிடம் தனியாக ஆறு முறை விசாரணை நடத்தினர். ‘கைக்குழந்தையுடன் இருக்கும் உங்களை மட்டும் விட்டுவிடுகிறோம்’ என்றார்கள். ‘வழக்கு போட்டால், என்னையும் என் மூன்று வயது மகனையும் சேர்த்து ஆறு பேர்மீதும் வழக்கு போடுங்கள். இல்லையெனில், எந்தத் தவறும் செய்யாத எங்களை விடுவியுங்கள்’ என்றேன். ஆனால், என்னையும் என் குழந்தையையும் தவிர மற்ற நான்கு பேரை நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி, அவர்களைச் சிறையில் அடைத்துவிட்டனர்” என்கிறார் மகாலட்சுமி.

“தினமும் நாப்கின் பயன்படுத்துவீங்களா?”

மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த வளர்மதி, சட்டக் கல்லூரி மாணவி குறிஞ்சித்தேன், இயற்கைப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த மகாலட்சுமி, வழக்கறிஞர் மனோகரன் மற்றும் பால்சாமி ஆகியோர் மீத்தேன் திட்டத்துக்கு எதிராகப் போராடிவரும் கதிராமங்கலம் மக்களைச் சந்திக்க, ஏப்ரல் 7-ம் தேதி சென்றனர். அவர்களைத் தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இவர்களில் மூன்று வயது குழந்தையுடன் இருந்த மகாலட்சுமியைத் தவிர மற்றவர்கள்மீது கலகத்தைத் தூண்டுதல், பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்பட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, திருச்சி மத்தியச் சிறைகளில் அடைத்துள்ளனர்.

வழக்கறிஞர் ராஜாவிடம் பேசினோம். “இதற்குமுன் இதே திருச்சியில் அடைக்கப்பட்ட வளர்மதியை நிர்வாணச் சோதனைக்கு உட்படுத்தச் சிறைக் காவலர்கள் முயற்சி செய்தனர். அதைக் கடுமையாக எதிர்த்தோம். இந்த முறையும் வளர்மதி உள்ளிட்டோரை நிர்வாணச் சோதனைக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளனர். கடந்த முறையே எதிர்ப்பு தெரிவித்ததை நினைவூட்டியதால், அதைத் தவிர்த்தனர். உறவினர்களிடமும் வழக்கறிஞர்களிடமும் தொலைபேசியில் பேசுவதற்குச் சிறைக்கைதிகளுக்கு அனுமதி உள்ளது. ஆனால், வளர்மதி உள்ளிட்டவர்களுக்கு அந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்களைச் சிறையில் தள்ளி, உளவியல்ரீதியாக டார்ச்சர் செய்வதை அரசு தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. காவிரிக்காகப் போராடியதால், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பைச் சேர்ந்த பாடகர் கோவனின் தங்கை பாடகி லதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், மாதவிடாய்க்குப் பயன்படுத்தும் நாப்கின் வேண்டுமென்று சிறை நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். அதற்கு, ‘தினமும் நீங்கள் நாப்கின் பயன்படுத்துவீங்களா? நாப்கின் ஸ்டாக் இல்லை’ என்று கூறியிருக்கிறார்கள்’’ என்றார் ஆதங்கத்துடன்.

“தினமும் நாப்கின் பயன்படுத்துவீங்களா?”

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துச் சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “சிறை விதிமுறைப்படிதான் சோதனை நடத்துகிறோம். சிறைக்குள் தங்களைச் சித்ரவதை செய்ததாக அவர்கள் சொல்வதில் துளியும் உண்மையில்லை” என்றனர்.

- சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: வீ.சதீஷ்குமார்