அலசல்
Published:Updated:

“தண்ணீர் விடு... இல்லாவிட்டால்?”

“தண்ணீர் விடு... இல்லாவிட்டால்?”
பிரீமியம் ஸ்டோரி
News
“தண்ணீர் விடு... இல்லாவிட்டால்?”

“தண்ணீர் விடு... இல்லாவிட்டால்?”

காவிரி நீருக்காக நெய்வேலியில் கூடிய போராட்டக்காரர்கள், ‘தனியே விடு’ என்று பேசி மத்திய அரசை மிரட்டியிருக்கிறார்கள்.

“தண்ணீர் விடு... இல்லாவிட்டால்?”

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மத்திய அரசின் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்திருந்தார். ஏற்கெனவே, சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டத்தின்போது உளுந்தூர்ப்பேட்டையில் நடைபெற்ற விபரீதத்தால் விழித்துக்கொண்ட காவல்துறை, நெய்வேலிப் போராட்டத்துக்கு முந்தைய நாளே வேல்முருகனை அழைத்துப் பேசியது. நெய்வேலி டி.எஸ்.பி அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், ‘போராட்டத்தில் அசம்பாவிதம் எதுவும் நடக்கக் கூடாது’ என்ற வாய்மொழி ஒப்பந்தம் போடப்பட்டது. அதற்கு வேல்முருகன் தரப்பு ஒப்புக்கொண்டிருந்தபோதிலும், 700-க்கும் மேற்பட்ட போலீஸாரைக் குவித்து டவுன்ஷிப்பைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது காவல்துறை.

நெய்வேலி அரசுப் பொது மருத்துவமனை முன் காலை 9 மணி முதலே தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், காவிரி உரிமை மீட்புக் குழுவினர், அனைத்து விவசாயிகள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் குவியத் தொடங்கினர். காலை 11.30 மணிக்கு அங்கு வந்த வேல்முருகன், அய்யாக்கண்ணு, கொளத்தூர் மணி, திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வேனில் ஏறினர். 12 மணிக்குப் பேரணியைத் தொடக்கி வைத்த பழ.நெடுமாறன், “காலம் காலமாக காவிரிக்காகத் தமிழக விவசாயிகள் போராடிவருகிறார்கள். காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு, இடைக்காலத் தீர்ப்பு என எதையும் மதிக்காமல் இருந்தபோது, பிரதமர்கள் வேடிக்கை பார்த்தார்கள். கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில், ஒன்பது பிரதமர்கள் மாறிவிட்டார்கள். ஆனால், அனைவரும் காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு துரோகத்தை மட்டும்தான் செய்தார்கள். அந்த வழியில்தான், மோடியும் செயல்படுகிறார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றமும் மதிக்கவில்லை. மத்திய அரசும் மதிக்கவில்லை’’ என்றார்.

“தண்ணீர் விடு... இல்லாவிட்டால்?”

மேடையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பேசினர். வேல்முருகன் பேசியபோது, ‘‘எங்களுக்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு எங்கள் மண்ணிலிருந்து எடுக்கும் மின்சாரத்தை ஏன் வழங்க வேண்டும்? இந்தியர்கள் என்று சொல்லித்தான் மத்திய அரசு நம்மைச் சுரண்டிவருகிறது. 1985 முதல் 1996 வரை தமிழ்நாடு விடுதலைப் படைக்கும் வேல்முருகனுக்கும் என்ன தொடர்பு என்பதை மத்திய அரசும், என்.எல்.சி நிர்வாகமும் தெரிந்துகொள்ள வேண்டும். கட்சிகளுக்கிடையே நிலவும் சில முரண்பாடுகளால் வேறுபட்டிருந்த நம்மை, மத்தியில் இருக்கும் மோடி அரசு இணைத்து வைத்திருக்கிறது. ஒருமித்த கருத்துடன் நம்மைப் போராடத் தூண்டியிருக்கிறது. இதே ஒற்றுமை உணர்வுடன் நாம் இருந்தால் பல தலைவர்களை இந்த மேடையில் ஒன்றிணைக்க முடியும். இங்கு திரண்டிருக்கும் கூட்டம், மத்திய அரசின் இடுப்பு எலும்புகளை உடைக்கப்போகும் கூட்டம்’’ என்றார் ஆவேசத்துடன்.

அவர்கள் அத்தனை பேருடைய உரையின் சாராம்சமும் ‘தண்ணீர் விடு... இல்லாவிட்டால் தனியே விடு’ என்பதுதான்.

- ஜெ.முருகன்
படம்: எஸ்.தேவராஜன்