அலசல்
Published:Updated:

“நிரந்தரமாக மூடத் தயங்குவது ஏன்?”

“நிரந்தரமாக மூடத் தயங்குவது ஏன்?”
பிரீமியம் ஸ்டோரி
News
“நிரந்தரமாக மூடத் தயங்குவது ஏன்?”

ஸ்டெர்லைட் போராட்டக்குழு கேள்வி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் கிராமத்தைத் தொடர்ந்து இப்போது எட்டுக் கிராமங்களில் போராட்டம் விரிவடைந்துள்ள நிலையில், ஆலையின் உரிமம் புதுப்பித்தல் மனுவைத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது. இதை மிகப்பெரிய சாதனையாகத் தன் ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.

“நிரந்தரமாக மூடத் தயங்குவது ஏன்?”

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த பிரபுவிடம் பேசினோம். ‘‘ஸ்டெர்லைட் ஆலைக்கான தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி, மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. அனுமதியைப் புதுப்பிப்பதற்காக ஆலை நிர்வாகம் கொடுத்த மனு, இப்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்தால், புதுப்பித்தல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல. கடந்த 23 வருடங்களில் மக்கள் போராட்டங்கள், சுற்றுச்சூழல் பிரச்னை, நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவற்றால் ஒன்பது முறை இதேபோலப் புதுப்பித்தல் அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது. மனுவை நிராகரிப்பதும் பிறகு போராட்டத்தைத் திசைதிருப்பிவிட்டு மீண்டும் அனுமதியை வழங்குவதும் வாடிக்கையான ஒன்றுதான்.

‘பராமரிப்புப் பணிக்காகத் தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது’ என ஆலைத் தரப்பு கூறுகிறது. பிறகு ஏன் ஆலைக்குள் தாமிரத்தாது மணல் எடுத்துச் செல்லப்படுகிறது? பகலில் எடுத்துச் செல்லாமல், இரவில் ஏன் அதை எடுத்துச் செல்கிறார்கள்? தாமிரத்தாது மணல் ஏற்றிச்சென்ற மூன்று லாரிகளை இரவில் சிறைப்பிடித்தோம். இந்தத் தாதுமணலை ஆலைக்குள் கொண்டுசேர்க்கும் தனியார் ஏஜென்சியின் அலுவலகத்தை முற்றுகை செய்துள்ளோம். 1996-ல், தாமிரத்தாது மணல் இறக்குமதி செய்ய வந்த இரண்டு கப்பல்களை விசைப்படகுகள், நாட்டுப்படகுகள்மூலம் முற்றுகையிட்டு விரட்டியடித்தது போன்ற போராட்டத்தை மீண்டும் நடத்தவுள்ளோம். இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். இது தற்காலிகமான தடை உத்தரவுதான் என்பதும், சில நாள்களில் மீண்டும் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுவிடும் என்பதும் மக்கள் அனைவருக்குமே நன்கு தெரியும். மக்களுக்குத் தெரிந்த விஷயம் முதல்வருக்குத் தெரியாதா? இதுபோலக் கண்துடைப்பு நடவடிக்கைகளை விட்டுவிட்டு, ஆலையை நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

“நிரந்தரமாக மூடத் தயங்குவது ஏன்?”

ஸ்டெர்லைட் ஆலையின் பி.ஆர்.ஓ-வான ஜிஜோவிடம் பேசினோம். “ஒவ்வொரு வருடமும் ஆலையின் இயக்குதல் அனுமதியைப் புதுப்பிப்பது வழக்கம். புதுப்பித்தலுக்காக ஜனவரி மாதம் விண்ணப்பித்தோம். ஒருசில காரணங்களால் புதுப்பித்தல் அனுமதியை ரத்து செய்துவிட்டார்கள். என்னென்ன காரணங்களுக்காக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதற்கான கடிதம் இன்னும் வந்து சேரவில்லை. மீண்டும் அனுமதி கிடைக்கும் வரை உற்பத்தி நடைபெறாது” என்றார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கேட்டதற்கு, “ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்துள்ளது. அனுமதி மறுக்கப்பட்டது என்றாலே ஆலை இயங்காது. ஆலை மூடப்பட்டுவிட்டது என்றுதான் அர்த்தம். எனவே, போராட்டத்தை மக்கள் கைவிட வேண்டும்” என்றார்.

‘‘ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என உத்தரவாதம் அளிப்பதற்கு ஆட்சியாளர்கள் தயங்குவது ஏன்?” - இதுதான் போராடும் தூத்துக்குடி மக்களின் கேள்வி.

- இ.கார்த்திகேயன்
படங்கள்: ஏ.சிதம்பரம்