
“இது முதுகெலும்பு இல்லாத அரசு!” - முகிலன் காட்டம்
அணு உலை எதிர்ப்பு, காவிரிப் பாதுகாப்பு, ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிர்ப்பு, தாதுமணல் கொள்ளைக்கு எதிர்ப்பு என எல்லாப் போராட்டக் களங்களிலும் வீரியத்துடன் நின்றவர் முகிலன். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்மீது ஏராளமான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, 2017 செப்டம்பர் 18-ம் தேதி கூடங்குளம் போலீஸார் முகிலனைக் கைதுசெய்தனர். தன்மீதான வழக்குகளுக்கு ஜாமீன் கேட்காமல், கடந்த 10 மாதங்களாக பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகிலன், ஜூலை ஒன்றாம் தேதி திடீரென மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு தனிமைச் சிறையில் அடைத்து வைத்து சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழலில், முகிலனிடம் அவரின் வழக்கறிஞர் சரவணகுமார் மூலம் சில கேள்விகளை முன்வைத்தோம். அவற்றுக்கு முகிலன் அளித்த பதில்கள் இதோ...

‘‘உங்கள்மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன, அந்த வழக்குகளின் தற்போதைய நிலை என்ன?’’
‘‘கூடங்குளம் போராட்டம் தொடர்பாக 380 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகளைத் திரும்பப் பெறுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதால், தமிழக அரசு 2014 மே 8-ம் தேதி 248 வழக்குகளைத் திரும்பப் பெற்றது. மீதமுள்ள 132 வழக்குகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குகள் அனைத்திலுமே என் பெயரும் உள்ளது. ‘எந்தெந்த வழக்குகளில் என்னைக் கைது செய்திருக்கிறீர்கள்’ என்று போலீஸாரிடம் கேட்டுவருகிறேன். அந்தத் தகவலை வழங்க காவல்துறை மறுத்து வருகிறது. வழக்குகளுக்காக 23 முறை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறேன். விரைந்து வழக்குகளை நடத்தக் கோரி, 60-க்கும் அதிகமான மனுக்களைக் கொடுத்தும் விசாரணை தொடங்கப்படவில்லை. கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த இடிந்தகரை ரோசலின், கூடங்குளம் ராஜசேகர் ஆகியோர் இறந்து ஐந்து வருடங்களாகிவிட்டன. அவர்களுக்குக்கூட காவல்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது.’’
‘‘போலீஸார் வழக்கைத் தாமதப்படுத்துவதற்குக் காரணம் என்ன?’’
‘‘கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு லட்சம் மக்கள்மீது தொடரப்பட்ட வழக்கைக் கைவிடுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்து 1,500 நாள்கள் கடந்த பின்னரும், தமிழக அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு உள்நோக்கம் உள்ளது. 2017-ல் கூடங்குளத்தில் 3-வது, 4-வது அணு உலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது, மக்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பினார்கள். அணு உலைக்கு எதிரான போராட்டம் மீண்டும் தொடங்கிவிடும் என்கிற அச்சம் காரணமாகவே, வழக்குகளைக் கைவிடாமல் பொதுமக்களை போலீஸார் அச்சுறுத்தி வருகிறார்கள்.’’
‘‘உங்கள்மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. திடீரென மதுரை சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறீர்கள். இவற்றின் பின்னணியில் ஏதேனும் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகிக்கிறீர்களா?’’
‘‘நிச்சயமாக. போராட்டங்களைக் கண்டு மத்திய, மாநில அரசுகள் அஞ்சி நடுங்குகின்றன. ஸ்டெர்லைட் ஆலை, சென்னை- சேலம் எட்டுவழி பசுமைச் சாலை போன்ற மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிர்ப்பு கிளம்புவதைக் கண்டு அச்சப்படும் தமிழக அரசு, போராடுபவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளுகிறது. சிறையில் இருக்கும் நான் வெளியில் வந்துவிடக் கூடாது என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரவக்குறிச்சி பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக, இப்போது என்னைத் தேசத்துரோக வழக்கில் கைது செய்துள்ளனர். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யும் முயற்சியும் நடக்கிறது.
பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோது, ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைதானவர்களைச் சந்தித்துப் பேசினேன். ‘போராட்டங்களை அரசு எப்படியெல்லாம் முறியடிக்க முயற்சி செய்யும்... அவற்றை எப்படி சமாளிக்க வேண்டும்’ என்பது பற்றி அவர்களிடம் பேசினேன். இது சிறை நிர்வாகத்துக்கும் அரசுக்கும் அச்சுறுத்தலாக இருந்துள்ளது. அதனால், என்னை மதுரை சிறைக்கு மாற்றிவிட்டார்கள். இங்கு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். அறையில் காற்று வரக்கூட வழியில்லை. அறையின் பின்பகுதியில் கழிவுநீர்க் குழாய் உடைந்து கிடக்கிறது. இதனால், அறையின் உள்ளே தாங்கமுடியாத அளவுக்கு துர்நாற்றம். கொசுக் கடி தொல்லை வேறு. சிறைக் கண்காணிப்பாளரிடம் சொன்னதும், ஒரு போர்வை கொடுத்தார்கள். கொசுக்கள் கடித்துக் கடித்து என் சட்டை முழுவதும் ரத்தமாகிவிட்டது. இரவு தூங்கவே முடியவில்லை. டெங்கு, சிக்குன் குன்யா போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்தும் எனக்கு இருக்கிறது. அரவக்குறிச்சி நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும்போது, அந்தச் சட்டையை நீதிபதியிடம் காட்ட முடிவு செய்திருந்தேன். அதனை அறிந்த அதிகாரிகள் என்னை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்திவிட்டார்கள்.’’

‘‘மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் பற்றி?”
“தமிழகத்தில் மட்டும் அல்லாமல் நாடு முழுவதுமே அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுகிறது. தமிழகத்தில் முதுகெலும்பு இல்லாத அரசு செயல்படுகிறது. வளர்ச்சி என்கிற பெயரில் நாசகாரத் திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதற்குத் தமிழக அரசும் துணைபோகிறது. மக்கள்விரோத அரசின் திட்டங்களுக்கு எதிராக மக்களிடம் உருவாகியிருக்கும் கோபம் விரைவில் வெளிப்படும். அதற்கான நாள் வெகுதொலைவில் இல்லை.’’
- பி.ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்