Published:Updated:

`சொன்னதை நம்பித்தானே ஓட்டுபோட்டோம்!’ - ஜெயக்குமாரிடம் கொந்தளித்த ஜாக்டோ ஜியோ

இது எங்களுக்கு வாழ்வா? சாவா போராட்டம். 58 வயதுவரை வேலைபார்த்த பின் ஓய்வூதியம் இல்லைனா எப்படி? உயிரே போனாலும் நாங்கள் விடமாட்டோம். கடந்த காலங்களிலும் பல்வேறு உயிரிழப்புகளை சந்தித்துள்ளோம். உயிர்தியாகம் செய்துதான் சலுகைகளை பெற்றுள்ளோம். எங்கள் அடுத்த தலைமுறைக்கான உரிமைகளை பெற்று தருவோம்.

`சொன்னதை நம்பித்தானே ஓட்டுபோட்டோம்!’ - ஜெயக்குமாரிடம் கொந்தளித்த ஜாக்டோ ஜியோ
`சொன்னதை நம்பித்தானே ஓட்டுபோட்டோம்!’ - ஜெயக்குமாரிடம் கொந்தளித்த ஜாக்டோ ஜியோ

தமிழக அரசுடன் ஜாக்டோ-ஜியோ சார்பில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து டிசம்பர் 4-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுவது உறுதி என  ஜாக்டோ-ஜியோவினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் ஒரு பிரிவான ஜாக்டோ-ஜியோ அமைப்பு புதிய ஓய்வு ஊதியம் முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வுக்குப் பிறகு வழங்கப்படாமல் இருக்கும் 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பது உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமாரிடம் பேசினோம். ``ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கூறிதான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், 110விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் ஜெயலலிதா. அதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம். அதற்காகக் குழு அமைக்கப்படும் என்றார். மேலும், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கப்படும். ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். இன்றைய ஆட்சி ஜெயலலிதா பெயர் சொல்லிக்கொண்டுதான் நடைபெற்று வருகிறது. அப்படியிருக்க ஜெயலலிதா சொன்னதை நிறைவேற்றுங்கள் என்று கூறிதான் தொடர்ந்து போராடி வருகிறோம்.

2016 ஜூலை 13-ம் தேதி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2 வருடமாக நீள்கிறது எங்களின் போராட்டம். ஓய்வூதியம் வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைபாடு. அப்படியில்லையென்றால் எங்களிடம் 2003-லிருந்து பிடித்தம் செய்த 25,000 கோடி எங்க இருக்கு என்று அரசு தெரிவிக்க வேண்டும். அந்தக் காசை என்ன செய்தார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், அரசு ஊழியர்களை நீக்கிவிட்டு, சட்டசபைக் கூட்டம் நடந்தப்படும்போது, அரசு ஊழியர்களைத் தவிர்த்துவிட்டு வெளியிலிருந்து தனியார் ஆட்களை களமிறங்கி வேலைபார்க்க வைக்கலாம் என்றும் தொடர்ந்து அடுத்து அரசு வேலை என்பதை நீக்கி தேவைப்படும்போது மட்டும் தனியார் ஆட்களை வைத்து வேலை வாங்கி பின் அனுப்பிவிடலாம் என்று முடிவுசெய்துள்ளனர். மோடியின் வழிகாட்டுதலின்படிதான் தமிழக அரசு இப்படிச் செய்கிறது.  

கஜா புயல் பாதிப்புகள் காரணமாகப் போராட்டத்தைத் தள்ளிவையுங்கள் என்கின்றனர். ஆனால், எங்கள் பாதிப்புகளைக் கேட்க அவர்கள் தயாராக இல்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய ஸ்ரீதர் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த அறிக்கையில் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்வதற்கான முகாந்திரம் அதிக அளவில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை எங்களிடம் காட்டுங்கள், நாங்கள் போராட்டத்தைத் திரும்ப பெறுவது குறித்து பரீசிலிக்கிறோம் என்றோம். ஆனால், அவர்கள் அதை

கேட்கவில்லை. எங்கள் கோரிக்கையை அவர்கள் செவிமடுக்கவேயில்லை. எங்கள் போராட்டம் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் அஞ்சுகின்றனர். எங்கள் கோரிக்கையால் அவர்களுக்கு நிதிச்சுமையும் ஏற்படப்போவதில்லை. பின்னர், ஏன் நிறைவேற்ற தயக்கம் எனத் தெரியவில்லை. வரும் தேர்தலில் ஜெயிக்க வேண்டும். அதற்கு ஜாக்டோ-ஜியோ போராட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் அரசு தரப்பில் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். பேச்சுவார்த்தையில், ஜெயலலிதா சொன்ன வாக்குறுதியை நம்பித்தான் அவர்களுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தோம். ஆனால், எங்களை ஏமாத்திவிட்டீர்களே என்றோம்.

அப்போது, `கோபத்தை தணிக்க வேண்டும்’ எனக் கூறினார்களே தவிர கோரிக்கையைக் கேட்க தயாராக இல்லை. 2003-ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு எதிராக எஸ்மா, டெஸ்மா சட்டத்தை போட்டு வன்முறையை அ.தி.மு.க கட்டவிழ்த்ததன் விளைவுதான் அவர்களால் 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட்டுகூட வெல்ல முடியவில்லை. 2006-ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. மீண்டும் அதுபோல ஒரு நிலை வராமல் இருக்க அவர்கள் எங்களிடம் போராட்டத்தைக் கைவிடும்படி கூறுகின்றனர். ஆனால், திட்டமிட்டபடி டிசம்பர்-4ம் தேதி வேலை நிறுத்தம் தொடங்கும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்வார்கள். ஊதியத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் உதவுவோம். இது எங்களுக்கு வாழ்வா? சாவா போராட்டம். 58 வயதுவரை வேலைபார்த்த பின் ஓய்வூதியம் இல்லைனா எப்படி? உயிரே போனாலும் நாங்கள் விடமாட்டோம். போனவருடம் நடந்த போராட்டத்தில் 6-பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த காலங்களிலும் பல்வேறு உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளோம். உயிர் தியாகம் செய்துதான் சலுகைகளைப் பெற்றுள்ளோம். எங்கள் அடுத்த தலைமுறைக்கான உரிமைகளைப் பெற்று தருவோம்'' என்றார் சாந்தகுமார்.