Published:Updated:

தூக்குக் கயிறு; ஒப்பாரி! - திருப்பூரில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்

தூக்குக் கயிறு; ஒப்பாரி! - திருப்பூரில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்
தூக்குக் கயிறு; ஒப்பாரி! - திருப்பூரில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்
தூக்குக் கயிறு; ஒப்பாரி! - திருப்பூரில் நீடிக்கும் விவசாயிகள் போராட்டம்

விவசாய நிலங்களின் வழியாக உயர் மின்அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகள் நடத்தி வரும் காத்திருப்புப் போராட்டம் 3-வது நாளை எட்டியுள்ளது. 

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பாக விவசாய விளை நிலங்களின் வழியே உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருப்பதுடன், திட்டத்தைக் கைவிடக்கோரி தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்கள். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய இந்த உயர்மின் கோபுர திட்டத்தை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படுவதைப்போல நிலத்துக்கு அடியில் கேபிள் மூலமாக மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், விவசாயிகளின் இந்தக் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், மின் கோபுரங்கள் அமைக்க விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்தி வருகிறது அரசு நிர்வாகம். எனவே, தங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத அரசைக் கண்டித்தும், விளை நிலங்களில் மின் கோபுரங்கள் அமையவிருப்பதற்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடந்த சில நாள்களாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள கள்ளிப்பாளையம் பகுதியில் கடந்த 3 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தக் காத்திருப்புப் போராட்டத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து பல்வேறு நூதன முறையிலான போராட்டக் காட்சிகளை அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார்கள் விவசாயிகள். அதன் ஒருபகுதியாக இன்று போராட்டக் களத்தில் மின் கோபுரங்கள் போன்ற மாதிரிகளை அமைத்து, அதில் ஏறிநின்று தூக்கில் தொங்குவதுபோலவும், பெண்கள் மரண வீட்டில் ஒப்பாரி வைப்பதுபோலவும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயிகளின் இந்தப் போராட்ட வடிவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.