Published:Updated:

இந்தி எதிர்ப்பை முன்னிறுத்தி உயிர் தியாகம் செய்தவர்..! நடராசன் நினைவுதினப் பகிர்வு

விகடன் விமர்சனக்குழு
இந்தி எதிர்ப்பை முன்னிறுத்தி உயிர் தியாகம் செய்தவர்..! நடராசன் நினைவுதினப் பகிர்வு
இந்தி எதிர்ப்பை முன்னிறுத்தி உயிர் தியாகம் செய்தவர்..! நடராசன் நினைவுதினப் பகிர்வு

இந்தி எதிர்ப்பை முன்னிறுத்தி உயிர் தியாகம் செய்தவர்..! நடராசன் நினைவுதினப் பகிர்வு

அனைத்து காலகட்டத்திலும் ஆளும் வர்க்கம் தனது அதிகார தழலை செந்நீரைக் கொண்டே போக்கிக்கொள்கிறது. 20-ம் நூற்றாண்டு... ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து 'சுதந்திரம்' என்பதுதான் ஒரே நோக்கம். ஆனால், தென்னகமோ இரு வகையான ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்தது. அந்நிய ஆட்சியிலிருந்து 'விடுதலை' என்ற கோரிக்கை ஒருபுறம் எழுந்துகொண்டிருக்க, தம் நாட்டுத் தலைவர்களின் 'இந்தி' மொழி திணிப்புக்கு எதிரான போராட்டம் மறுபுறம் எழுச்சிப் பெற்றது. இன்றுவரை தமிழ்நாட்டின் சமரசமற்ற கொள்கையாக இருக்கும் இந்தி எதிர்ப்பை முன்னிறுத்தி,உரிமைக்காக முதலாவதாக தன் உயிரைத் தியாகம் செய்தவர் நடராசன்.

'ஒவ்வொரு பேச்சு வடிவத்தையும் நீடித்து நிலைக்கும்படி செய்ய வேண்டும், வளர்க்க வேண்டும் என மிகவும் பிரத்யேகமான குறுகிய பார்வை கொண்ட உணர்வு தேச விரோதமானது';  'இந்தியை இந்தியாவில் தேசிய மொழியாக ஆட்சி மொழியாக்க வேண்டும்';  'இந்தியை ஏற்காத சென்னை மாகாண மக்கள் சிறுபான்மை கொடுங்கோன்மையினர்'  - இந்த வார்த்தைகளுக்கெல்லாம் சொந்தக்காரர் 'மகாத்மா காந்தி'. இந்தி குறித்து காந்தியின் நிலைப்பாடு இது. காந்தியே இவ்வாறென்றால்,மற்ற இந்திய தேசியத் தலைவர்களை பற்றிச் சொல்ல தேவையில்லை. 

விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசும் பிற தேசிய கட்சிகளும் இந்தியை ஓர் சுதேச அடையாளமாகவே முன்னிறுத்தின. அப்போது, தமிழ்நாட்டில் அயோத்திதாச பண்டிதர் இந்த நிலைப்பாட்டை முதலில் எதிர்த்தார். மாகாண கட்சியான நீதிக்கட்சியின் ஆட்சி என்பதால் இந்தியின் விளைவுகள் சென்னை மாகாணத்தில் குறைவாகவே இருந்தன. 1937-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற, ராஜாஜி தலைமையிலான அரசு, கல்வி நிலையங்கள் முதல் அனைத்து இடங்களிலும் இந்தியைக் கட்டாயமாக்கியது. 1937, ஆகஸ்ட் 27-ம் தேதியில் இருந்து முதல் ஆளாக இதை அண்ணா எதிர்த்தார். பிறகு, கரந்தை தமிழ் சங்கம் தன் கண்டனத்தைப் பதிவு செய்தது. பெரியார் எதிர்த்து சிறை சென்றார். பிறகு மொத்த தமிழ்நாட்டிலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் பரவலாக வெடித்தது. 

'கட்டாயம் இந்திதனை கற்பதென ராஜாங்கச் 
சட்டமியற்றுவதில் சம்மதமா என் தமிழா !' 


பாரதிதாசனின் பாடல் வரிகளாய் தன் உணர்வை மட்டும் ஆயுதமாய் கொண்டு ஒவ்வொரு இளைஞர்களும் போராடத் தொடங்கினர். அடக்குமுறைக்கு எதிரான ஆவேசமும் தமிழின் மீதான பற்றும் நடராசனை போராட்ட களத்தில் நிற்க வைத்தது. டிசம்பர் 5, 1938 அன்று தியாலஜிக்கள் பள்ளி முன் மறியலில் ஈடுபட்ட நடராஜன் கைது செய்யப்பட்டு, 50 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இணங்கினால் உரிமையைச் சமரசம் செய்து கொண்டதாகிவிடும் என்பதால், அபராதத்தை மறுத்தார். இதனால், 6 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் பல நாள் நோய்வாய்ப்பட்டிருந்த நடராசன், உடல் குணம் அடையாததால் 30 டிசம்பர்,1938-ல் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இடைப்பட்ட காலத்தில் மன்னிப்பு கேட்க வற்புறுத்தியபோதும், 'இறந்தாலும் இறப்பேனே தவிர அரசிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன்' என்ற நடராசன் 15, ஜனவரி 1939-ம் ஆண்டு மருத்துவமனையில் இறந்தார். தமிழ் மொழிப்போராட்ட தியாகிகளில் முதன்மையானவர் நடராசன். இவரின் இறுதி ஊர்வலத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடியுடன் கலந்து கொண்டனர். நடராசன் என்கிற ஹரிஜன சிறுவர் இந்து தியாலாஜிக்கள் பள்ளிக்கு முன் மறியல் செய்ததற்காக கைது செய்யப்பட்டாரென்றும், அவருக்கு எழுத படிக்கத் தெரியாதென்றும், அவர் அறியாமையில் செய்ததாக இறப்புக்கு விளக்கமளித்து, நடராசனின் போராட்டத்தை மழுங்கடித்தார் முதல்வர் ராஜாஜி.

'தன்னிடம் இந்தி திணிப்பை பற்றிப் பேசி போராட்டத்துக்குச் சென்று வருகிறேன் என்று நடராசன் புரிதலுடன் இருந்தான்' என்றும், அவரின் கல்வித்தகுதியையும் குறிப்பிட்டு, ராஜாஜிக்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்தார் நடராசன் தந்தை லட்சுமணன். நடராசன் இறந்த இரண்டு மாதத்துக்குப் பிறகு இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் தாளமுத்து என்பவர் உயிரிழந்தார். தாளமுத்து - நடராசன் என அரசு கட்டிடத்துக்குப் பெயர் வைத்தது உட்பட அனைத்துக் குறிப்புகளிலும் முதலில் இறந்த நடராசன் பெயரை முன்னிறுத்தாதது ஏன் எனக் குற்றச்சாட்டுகள் உள்ளன.  

'புற்றிலிருந்து ஈசல் கிளம்புவதைப் போன்று கிளம்புகிறார்களே, இந்தச் சனியன் இப்படி ஆகுமென்று தெரிந்திருந்தால் இந்தியைக் கட்டாயமாக்கியிருக்க மாட்டேன்' என்று ராஜாஜி சலித்துக்கொண்டு மொழிக் கொள்கையை அன்று திரும்ப பெற்றார். ஆனால், பல படிநிலைகளில் இன்றுவரை இந்தியின் ஆதிக்கம் ஓய்ந்தபாடில்லை. இந்தியாவில் வாழும் மக்கள் எல்லோரும் சமமானவர்கள். இங்கு எல்லா மொழிகளும் மதங்களும் சம அந்தஸ்து உடையவை. ஒரு மொழிப் பேசும் மக்களை மற்றொரு மொழி பேசும் மக்கள் அரசியல் ரீதியாகவோ பண்பாட்டு ரீதியாகவோ அல்லது வேறெந்த வகையிலும் ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்பது இந்திய அரசியலமைப்பின் சாரம். அப்படியிருக்கையில்,ஒவ்வொரு முறையும் அவ்வுரிமையை காக்க விளைவாய் பெறப்படுகிறார்கள் நடராசன்கள்.

மேற்கோள்கள்
* உயிருக்கு நேர், தமிழ் மொழிப்போர் பின்புலத்துடன்.
தொகுப்பாசிரியர் : ம.நடராசன்.

* கட்டுரை : இந்தியாவில் மொழி அரசியல், ஆழி செந்தில்நாதன்.
விகடன் இயர் புக் 2016.

அடுத்த கட்டுரைக்கு