Published:Updated:

``ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு தி.மு.க-தான் காரணம்!” - டேக்டோ

இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்குத் தலைமை வகிக்கும் மீனாட்சிசுந்தரம், மாயவன், முத்துசாமி ஆகியோர் கட்சிப் பின்புலம் கொண்டவர்கள். அவர்களுக்கும், ஆசிரியர் சங்கங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

``ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு தி.மு.க-தான் காரணம்!” - டேக்டோ
``ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு தி.மு.க-தான் காரணம்!” - டேக்டோ

ரசுப் பணியாளர்கள் மற்றும்  ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கடந்த பல வருடங்களாகப் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டியும், மத்திய - மாநில ஊழியர்களுக்கு இடையே நிலவும் ஊதிய முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட ஒன்பது அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டங்களை நடத்திவருகின்றன. ``போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு விடுப்பும் ஊதியமும் வழங்கப்பட மாட்டாது" எனத் தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்ட நிலையில், மீண்டும் ஜனவரி 22-ம் தேதி முதல் தமிழகம் முழுக்க ஜாக்டோ - ஜியோ போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான TACTO (Tamilnadu Council of Teachers' Organisations), இந்தப் போராட்டத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளதோடு, `இதில் பங்கேற்க மாட்டோம்' எனவும் அறிவித்துள்ளது. இதையடுத்து, ஆசிரியர் கூட்டமைப்புகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடுகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய `டேக்டோ’ (TACTO) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பா.ஆரோக்கியதாஸ், ``இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜாக்டோ -ஜியோ போராட்டத்துக்குத் தலைமை வகிக்கும் மீனாட்சிசுந்தரம், மாயவன், முத்துசாமி ஆகியோர் கட்சிப் பின்புலம் கொண்டவர்கள். அவர்களுக்கும், ஆசிரியர் சங்கங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள், முன்னாள் தமிழக மேலவை உறுப்பினர்களாக இருந்தவர்கள். தற்போது அவர்கள், தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி இது மாதிரியான தேவையில்லாப் போராட்டங்களுக்குத் தூண்டுகோலாக உள்ளனர்.

இந்தப் போராட்டங்கள் யாவும் பல மட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளின் உதவியோடுதான் நடைபெற்று வருகிறது. அதேபோல் கடந்த 20-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்குத் தலைமை வகித்தவர் மீனாட்சிசுந்தரம். அவர், இப்போதும் தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினராக உள்ளார். தி.மு.க-வின் ஆட்சிக் காலத்தில் இந்தச் சங்கங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டு அரசு ஊழியர்களாக இல்லாதவர்களை எல்லாம் அந்தச் சங்கங்களின் முக்கியப் பொறுப்புகளில் செயல்பட வைக்கின்றனர். இதை எதிர்த்து, `அரசு ஊழியர்களாக இல்லாதவர்கள் எல்லாம், எப்படிச் சங்கங்கள் வைத்து நடத்தலாம்' எனக் கடந்த 2014-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அடுத்த வாரம் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், இதுமாதிரியான போராட்டங்கள் தொடர்ந்தால் மாணவர்களின் வாழ்வுதான் இதனால் மிகவும் பாதிக்கப்படும். அதேபோல், இந்தப் போராட்ட முறையில் உடன்பாடில்லாமல் வேலைக்குச் செல்கிற ஆசிரியர்களையும் மனம் புண்படும்படி சண்டை போடுகின்றனர். சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மற்ற ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி போராட்டத்தில் பங்குபெறச் சொல்கின்றனர்.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து `டேக்டோ’ சார்பாக உயரதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினோம், அதில், `அரசால் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன், ஆசியர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய நடவடிக்கை எடுப்போம்' எனப் பேச்சுவார்த்தையில் உறுதி அளித்துள்ளனர். இன்று தமிழக அரசின்மீது குறைசொல்லிப் போராட்டம் நடத்தும் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர், ஏன் தி.மு.க-வின் ஆட்சிக்காலத்தில் போராட்டங்களை நடத்தவில்லை? இன்று அவர்கள் முன்வைக்கும் முக்கியமான பிரச்னைகளான ஊதிய முரண்பாடு ஆகியவை தி.மு.க-வின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. சில மாதங்களில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில்கொண்டு அப்பாவி ஆசிரியர்களை, தி.மு.க பின்புலமாக இருந்து தூண்டிவிட்டுப் போராட்டத்தை நடத்துகின்றனர். நடைபெறும் இந்தப் போராட்டம், அரசியல் நோக்கத்தோடு நடைபெறுகிறது” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் ராபர்ட், ``தமிழகம் முழுக்கப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களில் ஒருசிலர் அரசியல் கட்சிகளில் உள்ளனர். அவர்களைக் காரணம்காட்டி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒட்டுமொத்த ஆசிரியர்களைக் குறைசொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழகம் முழுக்கத் கிட்டத்தட்ட 80 சதவிகித ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓர் அரசியல் கட்சியின் பின்னால் கண்மூடித்தனமாகச் செல்வதற்கு, அவர்கள் யாரும் படிக்காதவர்கள் அல்ல... முக்கியக் கோரிக்கைகளாக முன்வைக்கிற ஊதிய முரண்பாடுகளை அரசு நினைத்தால், எளிமையாகத் தீர்க்க முடியும். ஏற்கெனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான், `பழைய ஓய்வூதிய முறையைக் கொண்டு வருவோம்' என உறுதியளித்தார். தற்போது உள்ள அரசும், `பல முறை அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்' என உறுதியளித்ததுள்ளது. ஆனால், இதுவரை எந்த நல்ல முடிவுகளும் எடுக்கப்படவில்லை. ஒருவேளை, அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியபின் போராட்டம் நடத்தியிருந்தால், போராட்டங்களுக்குப் பின்னால் எதிர்க்கட்சி இருக்கிறது என நீங்கள் கேள்வி எழுப்பலாம். ஆனால், கோரிக்கைகள் அப்படியேதான் இருக்கின்றன. இது மாதிரியான சின்ன அமைப்புகளின்மூலம் ஆசிரியர்களின் போராட்டத்தைத் திசை திருப்பப் பார்க்கின்றனர்” என்றார்.