Published:Updated:

சிவகங்கை மருத்துவத்துறை இணைஇயக்குநர் மீது பாலியல் புகார் - நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்!

சிவகங்கை மருத்துவத்துறை இணைஇயக்குநர் மீது பாலியல் புகார் - நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்!
சிவகங்கை மருத்துவத்துறை இணைஇயக்குநர் மீது பாலியல் புகார் - நடவடிக்கை எடுக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்!

அரசு பெண் மருத்துவர், செவிலியர்களிடம்  பாலியல் குற்றம் செய்த மருத்துவத் துறை இணைஇயக்குனர் டாக்டர் விஜயன் மதமடக்கியைக் கண்டித்து நடவடிக்கை கோரி, சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சிவகங்கை மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்கநராக இருப்பவர் டாக்டர் விஜயன் மதமடக்கி. இவர், மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்துவருவதாக அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் கொடுத்தும் விஜயன் மதமடக்கி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைக் கண்டித்து,   ராமச்சந்திரனார் பூங்கா அருகே, ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் சுகந்தி, அகில இந்திய செயலாளர் வாசுகி, மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

``சிவகங்கை மாவட்ட மருத்துவத் துறை இணை இயக்குநர், டாக்டர் விஜயன் மதமடக்கி, பெண் மருத்துவர்களை, பெண் ஊழியர்களை, செவிலியர்களைத் தனது பதவியைப் பயன்படுத்தி மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்கிறார். பணியாதவர்களைத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வெகுதூரத்திற்கு பணிமாறுதல் செய்வது, பணியிடை நீக்கம் செய்வது போன்ற அராஜகச் செயல்களில் ஈடுபட்டு, பழிவாங்கும் செயல்களைச் செய்கிறார். இவர் செயல்பாட்டுக்கு ஆளும் கட்சியும், அமைச்சர்களும் ஆதரவாக உள்ளனர்.

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் விஜயன் மதமடக்கியைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். காரைக்குடி மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் மெஷின் இதுவரைக்கும் பயன்பாட்டிற்கு வரவில்லை. பெண்களைப் பாலியல் தொல்லையில் இருந்து காப்பாற்றுவதற்காக சட்டங்கள் இருந்தும் அது பயன்படவில்லை'' என்று வாசுகி தெரிவித்தார்.