
நிம்மதியாக வாழவிடாதா இந்த அரசு... கொந்தளிக்கும் கதிராமங்கலம் மக்கள்!
சிறிது காலம் கொஞ்சம் அமைதியாக இருந்த கதிராமங்கலம் மீண்டும் தகிக்கத் தொடங்கியிருக்கிறது. “ ‘மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம்’ என்று சொல்லிக்கொண்டே எங்கள் நலனுக்கு எதிராகச் தமிழக அரசு செயல்படுகிறது’’ என்று கொந்தளிக்கிறார்கள் கதிராமங்கலம் மக்கள்.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி கிணறு அமைந்துள்ள இடத்தில் கடந்த ஜனவரி 31-ம் தேதி காலையில் புனரமைப்பு என்கிற பெயரில் ஓ.என்.ஜி.சி அலுவலர்கள் பெரும் போலீஸ் படையுடன் குவிந்தனர். அப்போது அங்கு வந்த பேராசிரியர் ஜெயராமன், அவரது மனைவி சித்ரா மற்றும் ராஜு, கலையரசி, ஜெயந்தி ஆகியோர் மீது கொலை மிரட்டல் உட்பட நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து, பேராசிரியர் ஜெயராமன், ராஜு இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு கதிராமங்கலம் மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். என்ன நடந்தது என்று ஜெயராமன் மனைவி சித்ராவிடம் கேட்டோம். “ஓ.என்.ஜி.சி கிணறு அமைந்துள்ள இடத்தில் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் குழாய் உடைந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டது. உடனே அந்தப் பகுதி மக்கள் என் கணவருக்குத் தகவல் தெரிவித்தனர்.

நாங்கள் உடனே புறப்பட்டுப் போனோம். ஆனால், போலீசார் எங்களை வழியிலேயே தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்களிடம் என் கணவர், ‘ஓ.என்.ஜி.சி என்ன வேலை செய்தாலும் பரவாயில்லை, மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாமல் விளக்கம் கூறிவிட்டுச் செய்யுங்கள்’ என்றார். அதற்கு போலீஸார், ‘உடைப்பு ஏற்பட்ட குழாயைச் சீரமைக்கும் பணிதான் நடக்கிறது’ எனத் தெரிவித்தனர். அதற்கு என் கணவர், ‘குழாயில் ரசாயனத்தைச் செலுத்துவார்கள். இது மிகப்பெரிய பணி. ஏற்கெனவே பலமுறை இதுபோல் ரசாயனம் பூமிக்கடியில் கொட்டப்பட்டதால்தான், இங்குள்ள மக்கள் புற்றுநோய், கிட்னி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மண்ணை மேலும் மலடாக்குவதற்கு நீங்கள் துணை போகிறீர்களா’ என்று கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த திருவிடைமருதூர் டி.எஸ்.பி ராமசந்திரன், ‘இதையேதான் ரெண்டு வருஷமா சொல்ற... உன் மேல ஆறு கேஸ் போட்டது போதாதா?’ என்று மிரட்டுகிற தொனியில் ஒருமையில் பேசினார். ‘வழக்குகளுக்காக நான் பயப்படவில்லை. என்ன செய்யப் போகிறார்கள் என்பதைச் சொல்லி விட்டுச் செய்யுங்கள்’ என்று சொன்னார். உடனே, என் கணவரைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளி, ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்று விட்டனர். போலீஸாரைத் தாக்குவதற்குக் கட்டைகள் எடுத்து வந்ததாகவும், குழாயை உடைத்துத் தீ வைத்துவிடுவதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி எங்கள் மீதும் வழக்குப் பதிந்துள்ளனர். முன்பு என் கணவர் அரிவாளை எடுத்து வந்து மிரட்டியதாகக் கூறி பல பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர். இப்போது மீண்டும் என் கணவரின் வயதைக் கருத்தில் கொள்ளாமலும், எங்களைப் பெண்கள் என்றும் பாராமலும், பொய் வழக்குகளைப் பதிந்துள்ளனர். இதற்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம்” என்றார் உறுதியுடன்.
போராட்டத்தில் ஈடுபட்ட கலையரசி என்பவரிடம் பேசினோம், “டேங்கர் லாரிகளில் ரசாயனத்தைக் கொண்டு வந்து, உடைப்பு ஏற்பட்ட குழாயில் காலை ஏழு மணிக்கு ஊற்ற ஆரம்பித்த வர்கள் இரவு வரை தொடர்ந்தனர். அதனால், எங்களோட மொத்த விவசாய பூமியும் கெட்டுப்போய்விட்டது. இப்போது எங்களை ஒடுக்கும் வகையில் காவல் துறையின் நடவடிக்கை இருக்கிறது. எங்களுக்குப் பயமாக இருக்கிறது. எங்களை நிம்மதியாக வாழ விடாதா இந்த அரசு?” என்று கேட்டார் வேதனையுடன்.

ஜாமீனில் வெளியே வந்திருக்கும் ஜெயராமனிடம் பேசினோம். “போலீஸார் எங்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட தோடு பலவந்தப்படுத்திக் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் பெற்றதுமே நாங்கள் வெளியே வந்துவிடக்கூடாது எனக் கருதிய போலீசார் மற்றொரு வழக்கில் நாங்கள் தலைமறைவாக இருந்தோம் எனக் கூறிப் பிடிவாரண்ட்டுடன் வந்து கைது செய்தனர். அதிலும் ஜாமீன் பெற்றுக் கடந்த 7-ம் தேதி வெளியே வந்தோம். இதன் மூலம் மக்களை ஒன்று திரட்டவிடாமல் செய்து போராட்டங்களை முடக்குவதற்காவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது கடும் கண்டனத்துக்குரியது” என்றார்.
திருவிடைமருதூர் டி.எஸ்.பி ராமசந்திரனிடம் பேசினோம். “ஜெயராமன் உள்ளிட்டவர்கள் வேலையை நிறுத்தச் சொன்னதுடன், அவர்களிடம் கேட்டுத்தான் எந்த வேலையும் செய்ய வேண்டும் என்றனர். மீண்டும் போராட் டத்தைத் தொடங்கிப் பிரச்னை செய்யப் பார்க்கிறார்கள். அதனால்தான் அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தோம்” என்றார்.
- கே.குணசீலன்
படங்கள்: ம.அரவிந்த்