Published:Updated:

அரசுக்கு எதிராகப் போராடிய மாற்றுத்திறனாளி சிறுவன்... கண்டு வியந்த ராகுல்!

அசிம் போன்ற திறமை உள்ள மாணவர்கள் இங்கு நிறைய பேர் உள்ளனர். ஆனால், இங்குள்ள இந்தப் பள்ளி மேம்படுத்தப்படாமல் இருப்பதால் பல மாணவர்கள் பாதியிலேயே கல்வியைக் கைவிடுகின்றனர். 

அரசுக்கு எதிராகப் போராடிய மாற்றுத்திறனாளி சிறுவன்... கண்டு வியந்த ராகுல்!
அரசுக்கு எதிராகப் போராடிய மாற்றுத்திறனாளி சிறுவன்... கண்டு வியந்த ராகுல்!

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவன் முகமது அசிம். 12 வயதாகும் இந்தச் சிறுவன், அரசுக்கு எதிராகப் போராட்டம்  நடத்தியுள்ளார். இதைக் கண்டு வியந்து பாராட்டியதுடன், அந்தச் சிறுவனைக் கட்டி அணைத்தும் தனது அன்பைத் தெரிவித்திருக்கிறார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.சானவாஸ் வீட்டிலிருந்து, ராகுல் காந்தி அந்தப் பகுதியில் நடைபெற உள்ள ஒரு கூட்டத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது மாஸ்க் நுழைவாயிலிலிருந்து ஒரு குரல், ``ராகுல்ஜி... ராகுல்ஜி.. இங்கே வாருங்கள்" என்ற அழைத்தது. அந்தக் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றார் ராகுல் காந்தி. அழைத்தது ஒரு சிறுவன்தான் என்று தெரிந்துகொண்ட ராகுல் அவனருகே சென்றார். இதையடுத்து, ராகுலை பாதுகாப்பு வீரர்கள் சுற்றி வளைத்துப் பாதுகாப்பு கொடுத்தனர்.  அதைப் புறந்தள்ளிய ராகுல், ``யாரும் அருகில் வர வேண்டாம்" எனப் பாதுகாவலர்களிடம் உத்தரவிட்டுவிட்டு அங்கு நின்றிருந்த சிறுவனைச் சந்தித்துப் பேசினார். 

அப்போது அந்தச் சிறுவன், ``நான் படிக்கும் பள்ளியில் 7-ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. மேற்கொண்டு 8-ம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால், வீட்டைவிட்டு நீண்ட தூரம் சென்றுதான் படிக்க வேண்டும். எனவே, எனது பள்ளியை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றான். அந்தச் சிறுவனின் கோரிக்கையைக் கேட்டுக் கொண்ட ராகுல் காந்தி, பள்ளியை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில், அடுத்த நாள், திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்திற்கு அருகே இதுகுறித்த ஒரு போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் தொடங்கியுள்ளனர். அந்தப் போராட்டத்திலும் பங்கேற்று இதே கோரிக்கையை வலியுறுத்தி குரலை உயர்த்தியுள்ளான் அந்தச் சிறுவன். இந்தச் சிறுவனின் செயலை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த ராகுல் காந்தி, உடனடியாக அந்தப் பகுதிக்குச் சென்று சிறுவனைக் கட்டி அணைத்துத் தூக்கிவைத்து தனது அன்பைத் தெரிவித்துள்ளார். அதோடு, அந்தச் சிறுவனோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.

ராகுலின் இந்தச் செயல்பாடு குறித்த வீடியோவையும் புகைப்படத்தையும் காங்கிரஸின் எதிர்க்கட்சித் தலைவர் ராமேஷ் சென்னிதலா சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். பின்னர் இதுகுறித்து பேசிய அவர், ``அந்தச் சிறுவனின் செயல்பாட்டைக் காணும்போது பெருமையாக இருக்கிறது. மேலும், அந்தச் சிறுவனுடைய கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்" என்றார்.   

Image Courtesy: keralakaumudi

இதுகுறித்து பேசிய அந்தச் சிறுவனின் தந்தை சையது யாமினி அசிம், ``12 வயதாகும் முகமது அசிம், கோழிக்கோட்டில் உள்ள வெளிமன்னா பள்ளிக்கூடத்தில் படித்தவன். 90 சதவிகித மாற்றுத்திறனுடைய இந்த மாணவன், பிறவியிலேயே இரண்டு கைகளை இழந்தவன். அவன் படித்த அந்தப் பள்ளியில் 7-ம் வகுப்புவரை மட்டுமே உள்ளது. அதனால் 7-ம் வகுப்புவரை மட்டுமே அவனால் படிக்க முடிந்தது. மேற்கொண்டு படிக்க ஆசைப்படுகிறான். ஆனால், படிக்க முடியவில்லை. நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன். அதோடு, ஆண்டுதோறும் பள்ளி ஆண்டுவிழாவில் சில சிறப்புச் செயல்களைச் செய்து பலரின் பாராட்டுகளைப் பெற்றவன். ஓவியம் தீட்டும் திறமை உள்ளவன். கலையில் ஆர்வமுள்ளவன் என்பதால் அசிம், `உஜ்வாலா பால்யம்' (Ujwala Balyam) விருதைப் பெற்றுள்ளான். அசிம் போன்ற திறமை உள்ள மாணவர்கள் இங்கு நிறைய பேர் உள்ளனர். ஆனால், இங்குள்ள இந்தப் பள்ளி மேம்படுத்தப்படாமல்  இருப்பதால் பல மாணவர்கள் பாதியிலேயே கல்வியைக் கைவிடுகின்றனர். இந்தப் பள்ளியை மேம்படுத்தக் கோரி கடந்த ஆண்டு போராட்டத்தையும் இப்பகுதி மக்கள் நடத்தியுள்ளனர்" என்றார்.

மாணவனின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?