Published:Updated:

`மெமோ' கொடுத்ததால் ஆவேசம்: தாசில்தார்- வி.ஏ.ஓ-க்களுக்கு இடையே பனிப்போர்

`மெமோ' கொடுத்ததால் ஆவேசம்: தாசில்தார்- வி.ஏ.ஓ-க்களுக்கு இடையே பனிப்போர்
`மெமோ' கொடுத்ததால் ஆவேசம்: தாசில்தார்- வி.ஏ.ஓ-க்களுக்கு இடையே பனிப்போர்

நாமக்கல் மாவட்டத்தில் வி.ஏ.ஓ-வுக்கு மெமோ அளித்தல் தொடர்பாக  தாசில்தாருக்கும், வி.ஏ.ஓ-க்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டு தற்போது அப்பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது.

நாமக்கல் தாசில்தாராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார். இவர் கடந்த 3-ம் தேதி ஆவல்நாயக்கன்பட்டி கிராமத்துக்கு ஆய்வுக்குச் சென்றார். அப்போது, வி.ஏ.ஓ மலர்விழி அலுவலகத்தில் இல்லை. இதையடுத்து, அவரிடம் விளக்கம் கேட்டு தாசில்தார் மெமோ அளித்தார். இதற்கு மலர்விழி உரிய விளக்கம் அளிக்கவில்லை. தாசில்தாரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கடந்த 31-ம் தேதி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த 10 மரங்களை தாசில்தார் செந்தில்குமார் அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்துவிட்டதாக வி.ஏ.ஓ-க்கள் திடீர் குற்றம்சாட்டினர். பின்னர், டி.ஆர்.ஓ பழனிசாமியை சந்தித்து புகார் அளித்தனர். இந்த நிலையில், நேற்று மாலை இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பழனிசாமி தலைமையில் 20 வி.ஏ.ஓ-க்கள், தாலுகா அலுவலகம் முன்  ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இது குறித்து பேசிய தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பழனிசாமி, ``ஒரு ஞாயிற்றுக்கிழமை தாலுகா அலுவலகத்தில் உள்ள 10 மரங்களை தாசில்தார் அனுமதியின்றி வெட்டிவிட்டார். இதனால், தாலுகா அலுவலகம் பசுமை இழந்து காணப்படுகிறது. ஆவல்நாய்க்கன்பட்டி வி.ஏ.ஓ நேரில் விளக்கம் அளிப்பதாகக் கூறியும், அதை தாசில்தார் ஏற்கவில்லை" என்றார். 

இதுபற்றி பேசிய நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார்பதி, ``தாசில்தார் ஆய்வுக்குச் சென்றபோது, ஆவல்நாய்க்கன்பட்டி வி.ஏ.ஓ, அவர் பணிபுரியும் கிராமத்தில் இல்லை. இதற்கு தாசில்தார் அளித்த மெமோவுக்கு வி.ஏ.ஓ இதுவரை எழுத்துபூர்வமாக விளக்கம் அளிக்கவில்லை. சங்கத்தினருடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். தாலுகா அலுவலகத்தில் மரங்கள் வெட்டப்பட்டபோது, வி.ஏ.ஓ-க்கள் புகார் அளிக்காமல், தற்போது தாசில்தார் மீது வாய்மொழியாக புகார் கூறி வருகிறார்கள்.

தாசில்தார் அலுவலக வளாகத்தில் எத்தனை மரங்கள் இருந்தது. எத்தனை மரங்கள் வெட்டப்பட்டது. எதற்கு வெட்டப்பட்டது என்பதெல்லாம் விசாரணை நடத்தினால்தான் தெரியும். மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்படவில்லை. தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கலெக்டருக்குத்தான் உள்ளது. வி.ஏ.ஓ-க்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் புகார் அளித்தால், அவரின் உத்தரவுப்படி நான் விசாரித்து, புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பேன்" என்றார்.