Election bannerElection banner
Published:Updated:

"ஆட்சியாளர்களுக்கு மக்கள் இன்னும் அந்நியப்பட்டவர்களாக இருக்கிறோம்" - பேரா. கருணானந்தன்

"ஆட்சியாளர்களுக்கு மக்கள் இன்னும் அந்நியப்பட்டவர்களாக இருக்கிறோம்" - பேரா. கருணானந்தன்
"ஆட்சியாளர்களுக்கு மக்கள் இன்னும் அந்நியப்பட்டவர்களாக இருக்கிறோம்" - பேரா. கருணானந்தன்

"ஆட்சியாளர்களுக்கு மக்கள் இன்னும் அந்நியப்பட்டவர்களாக இருக்கிறோம்" - பேரா. கருணானந்தன்

னநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுஞ்சட்டங்கள் பற்றிய கருத்தரங்கு, `சனநாயக உரிமைகள் பாதுகாப்புக் குழு - தமிழ்நாடு' என்கிற அமைப்பின் சார்பில் சென்னையில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை (Unlawful Activities (Prevention) Act) வாபஸ்பெற வலியுறுத்தியும், `பீமா கோரிகான்' வன்முறை வழக்கில் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்ட செயற்பாட்டாளர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும், ஜனநாயக உரிமைச் செயற்பாட்டாளர் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே மீதான பொய் வழக்கை ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன், கிராந்தி சைதன்யா, பேராசிரியர் கருணானந்தன், வழக்கறிஞர்கள் பாரதி, சங்கரசுப்பு ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

நீதிபதி அரி பரந்தாமன் பேசுகையில், ``ஜனநாயக உரிமைகளை, அதன் குரல்வளையை நசுக்கும் சட்டங்களை கொடுஞ்சட்டங்கள் என்கிறோம். அதனை வாபஸ் பெறுமாறும், அத்தகைய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்யவேண்டுமாறும் நாம் கேட்கிறோம். அடிப்படையில் கொடுஞ்சட்டமோ, நியாயமான சட்டமோ, அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டிருந்தால்தான், அதைச் சட்டமாகக் கொண்டுவர முடியும். அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக எந்தவொரு சட்டத்தையும் நாடாளுமன்றம் இயற்ற முடியாது. ஆகவே, இங்கு UAPA, தடா, பொடா போன்ற சட்டங்கள் இருக்கக்காரணம், அவற்றுக்கான அனுமதியை அரசமைப்புச் சட்டம் வழங்குவதால்தான். அதுபோன்ற நிலையிருக்கும்வரை, மாநிலச் சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ இத்தகைய சட்டங்களை இயற்ற முடியும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 22-வது பிரிவானது, `ஒரு நபரை விசாரணையின்றி கைது செய்வது சரி' என்கிறது. எனவேதான் தேசியப் பாதுகாப்புச் சட்டங்களில், தடுப்புக் காவல் சட்டங்களில், ஒருவரை விசாரணையின்றி கைது செய்யவும், பிணையில் வெளிவர முடியாதவகையிலும் செய்ய முடிகிறது. மேற்கத்திய நாடுகளைப் போன்று இந்தியா இன்னும் ஜனநாயகப்படுத்தப்படவில்லை. ஏனெனில், சட்டப்பிரிவு 22-ஐப் போன்று விசாரணையின்றி எந்தவொரு நபரையும் சிறையிலடைக்கும்முறை மேற்கத்திய நாடுகளில் இல்லை. போர் நடக்கும் காலங்களில் மட்டும்தான் மேற்கத்திய நாடுகளில் கடுமையான மற்றும் மிகக் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்படும். ஏனெனில் சந்தேகத்துக்கு உட்பட்டு பலரைக் கைதுசெய்யும் நிலை அப்போது ஏற்படும். பல நாடுகளில், சந்தேகத்துக்குட்பட்ட நபரை விசாரணையின்றி கைது செய்யும் இம்மாதிரியான கொடுஞ்சட்டங்களுக்கு அந்நாடுகளில் உள்ள அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை.

`பீமா கோரேகான்' வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் ஐந்து பேரை, அரசு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தது. அதை எதிர்த்து வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஆனால், அவர்களுக்குப் பிணைகூடக் கிடைக்கவில்லை. தமிழகத்தில் சமூகச் செயற்பாட்டாளர் திருமுருகன் காந்தி, இதே சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது, ஒரு சாதாரண மாஜிஸ்திரேட் `அவரை ரிமாண்ட் செய்யமுடியாது' என்றார். அப்படியானால், தமிழ்நாடு பல இயக்கங்களால் ஜனநாயகப்படுத்தப்பட்டிருக்கிறது. நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது, ஒரு மாஜிஸ்திரேட், `அவரைச் சிறைக்கு அனுப்ப இயலாது' என்றார். இதுபோன்று மக்களை இன்னும் அதிகமாக ஜனநாயகப்படுத்துதல் அவசியம்" என்றார்.

கருத்தரங்கில் பங்கேற்ற பேராசிரியர் கருணானந்தன், ``சட்டபூர்வமான பார்வையாக அல்லாமல், வரலாற்றுபூர்வமான பார்வையை முன்வைக்க விரும்புகிறேன். பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் ரௌலட் சட்டம் கொண்டுவரக் காரணம், பிரிட்டிஷ்காரர்களுக்கு இங்குள்ள மக்கள் அந்நியப்பட்டவர்கள். பார்க்கும் அனைவரையும் சந்தேகத்துடனேயே பார்க்கும் தன்மை அவர்களிடம் இயற்கையாகவே இருந்தது. எல்லோரையுமே சந்தேகத்துடன் அவர்கள் பார்த்ததால், விசாரணையின்றி அப்போது அனைவரையும் கைது செய்தார்கள். அதுபோன்று, இப்போதும் குறிப்பிட்ட சட்டங்களின் கீழ் விசாரணையில்லாமல் கைது செய்யப்படுகிறோம் என்றால், நம்முடைய ஆட்சியாளர்களுக்கு அந்நியப்பட்டவர்களாகவே நாம் இருக்கிறோம். பீமா கோரேகானை, அதிகாரம் கலவர பூமியாக்கி இருக்கிறது. அது ஒடுக்கப்பட்ட மகர் சமூகத்தினரின் வெற்றி அடையாளம். அந்தச் சமூகத்தினர் தங்களால் பேஷ்வாக்களுக்கு இணையாக அவர்களைத்தாண்டியும், நின்றுகாட்ட முடியும் என்று நிரூபித்த சம்பவம் அது. ஆனால், அத்தகைய எழுச்சியை நினைத்துப் பார்ப்பதைக்கூட இப்போதைய அதிகாரவர்க்கத்தினர் விரும்புவதில்லை" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு