Published:Updated:

``போராளி நாங்க... தீவிரவாதி இல்லை!’’ பேராசிரியர் ஜெயராமன் மனைவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``போராளி நாங்க... தீவிரவாதி இல்லை!’’ பேராசிரியர் ஜெயராமன் மனைவி
``போராளி நாங்க... தீவிரவாதி இல்லை!’’ பேராசிரியர் ஜெயராமன் மனைவி

``போராளி நாங்க... தீவிரவாதி இல்லை!’’ பேராசிரியர் ஜெயராமன் மனைவி

 ``நாங்க மண்ணைக் காப்பாற்றத்தான் போராடுகிறோம். அதுக்காக எத்தனை முறை சிறைக்குப் போறதுன்னாலும் நாங்க தயார். ஆனா, எங்களைத் தீவிரவாதிகள் மாதிரி நடத்துறதுதான் ரொம்ப வேதனையா இருக்கு’’ என்று ஆதங்கத்துடன் பேசத் தொடங்குகிறார் பேராசிரியர் ஜெயராமனின் மனைவி சித்ரா. கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஓ.என்.ஜி.சி-க்கு எதிராகப் போராட்டத்தில் கலந்துகொண்ட இவர் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது. இவருடன் இன்னும் சிலரும் எங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்பதே மர்மமாகவும் இருந்தது. அதை விகடன் இணையதளத்தில் பதிவு செய்திருந்தோம். ஓரிரு நாள்கள் கழித்து, தொடர்பு எல்லைக்கு வந்த அவரிடம் பேசினேன். 

``இந்த மண்ணோட வளம் பறிபோயிடக் கூடாதுன்னுதான் களத்துல நிக்கிறோம். ஆனால், ஓ.என்.ஜி.சி-க்கு எதிரா போராட்டத்துல ஈடுபட்டோம்னு வழக்கு பதிவு செய்திருக்காங்க. இது எங்க மண்ணு. இதை நாங்கதானே காப்பாத்திக்கணும். எங்களை எப்படியாவது இந்தப் பகுதியிலேருந்து விரட்டியடிச்சிடலாம்னு நினைக்கிறாங்க’’ என்றவர் கதிராமங்கலத்தில் அன்று நடந்தவற்றை விவரிக்கத் தொடங்கினார். ``நானும் என் கணவரும் போராடுவதற்காக, கதிராமங்கலத்துக்குப் போகல. என்ன நடக்குதுன்னு விசாரிக்கத்தான் போனோம். எங்களைப் பார்த்ததும் மக்கள் சிலர் வந்தாங்க. இதைப் பார்த்ததும், உடனே எங்களை அங்கிருந்து வெளியே போகச் சொன்னாங்க போலீஸ். எதுக்காகப் போகணும்னு கேட்டால், `அதெல்லாம் உங்களுக்கு அவசியமில்லாதது. நீங்க கேட்கிறதுக்கு பதில் சொல்லணும்னு எந்தக் கட்டாயமும் எங்களுக்கு இல்ல'னு சொல்லிகிட்டே என் கணவர் ஜெயராமனை வலுக்கட்டாயமாகக் கைது செஞ்சிட்டாங்க. அதுக்கப்புறம்தான் ஊர் நடுவுல இருக்கும் ஐயனார் கோயில்ல போராட ஆரம்பிச்சோம். நானும், என்கூட இருந்த கலையரசி, ஜெயந்தி உட்பட ஏழு பேரும் திருவிடைமருதூர் காவல் நிலையத்துக்குப் போகலாம்னு கிளம்பும்போதுதான், எங்கள் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கும் விஷயம் தெரிய வந்துச்சு. உடனடியாக, வக்கீல்கிட்ட பேசினோம். முன் ஜாமீனும் கிடைச்சுது. என் கணவர் கைது செய்யப்பட்ட நிலையில் என்ன செய்யறதுன்னே எங்களுக்குப் புரியல. அவர் வெளியே வந்தாதான் போராட்டத்தைத் தொடர முடியும் என்பதால் காத்திருந்தோம். 

எங்களைப் பொறுத்தவரை இந்த மண்ணில் வாழும் மக்கள் நிம்மதியாக, சுகாதாரமாக வாழணும்னு ஆசைப்படுறோம். ஆனா, வளர்ச்சினு பெயரைச் சொல்லி, கதிராமங்கலம் கிராமத்தையே அழிச்சிட்டு இருக்காங்க. இந்த ஊர்ல மட்டும் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள, மாற்றுத்திறனாளியாக இருக்காங்க. நிறைய பேருக்கு இதய நோய், சிறுநீரகச் சிக்கல், கல்லீரல் பிரச்னைனு இன்னும் ஏராளமான நோய்களால பாதிகப்பட்டிருக்காங்க. இதுக்கெல்லாம் முக்கியக் காரணம், இந்த ஊரின் நிலத்தடி நீர் சுகாதாரம் இல்லாமல் போனதுதான். நிலத்தடி நீர்ல கலந்துள்ள அமிலங்களும் ரசாயனங்களும்தான் இந்த ஊர்க்காரர்கள் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக் குடிச்சிட்டு இருக்கு. குடிநீரே விஷமாய் மாறின அவலத்தை என்னன்னு சொல்றது? இந்தப் பகுதியில ஓ.என்.ஜி.சி நிறுவனம் வந்தப்ப, நம்ம கிராமத்துக்கு மண்ணெண்ணெய் கிடைக்குமேன்னு இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைச்சிருக்காங்க. இவ்வளவு பாதிப்பு வரும்னு அன்றைக்கு யாருக்கும் தெரியல. இப்போ, இவ்வளவு பிரச்னைகளைப் பார்த்துட்டு, இந்தத் திட்டத்தை தடை செய்யணும்னு போராடிட்டு இருக்காங்க. இதில என்ன தப்பு இருக்கு. ஆனா, எப்போ தீர்வு கிடைக்கும் என்பதுதான் தெரியல. வளம் உள்ள நாட்டை அழித்து உண்டாக்குற வளர்ச்சி யாருக்குப் பயன்படப்போகுது? மக்களைக் காப்பாற்றுவதுதானே ஒரு அரசாங்கத்தோட தலையாய கடமை. அது மத்திய அரசாகட்டும், மாநில அரசாகட்டும் எல்லாமே தனியார் நிறுவனங்களில் லாபத்துக்குக்காக்கச் செயல்படுறாங்களோன்னு சந்தேகம்தான் வலுக்குது. அரசுதான் அப்படினா, அரசு ஊழியர்களும் மக்களுக்குச் சேவை செய்யணும்னு என்பதே மறந்துவிட்டனர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. எதிர்கால தலைமுறையினரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான போராட்டம்தான் இது. எத்தனை வழக்குகள், எத்தனை கைதுகள்... எப்படியானாலும் சரி, மக்களைக் காப்பது நமது கடமை, நாம் போராடாவிட்டால், `தலைமுறை குற்றவாளி’ என அடுத்த தலைமுறையினரால் குற்றம் சாட்டப்படுவோம்’’ என்றார் சித்ரா மிகத் தெளிவாக.  

போராட்டத்தில் ஈடுபட்ட, கதிராமங்கலத்தைச் சேர்ந்த கலையரசி, ஜெயந்தி ஆகியோரிடமும் பேசியபோது இருவரும் ஒருமித்த குரலில் சொன்னது. ``எங்கள் கிராமம் எங்களுக்கு முக்கியம். அதனால்தான், நாங்கள் இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறிப் போராடிவருகிறோம். இந்தப் போராட்டம் நல்ல தீர்வை எட்ட வேண்டும். இதில் பொதுநலத்தைத் தாண்டியும் எங்கள் குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்க்கையும் இருக்கிறது. அதனால், இதைச் சுயநலம் சார்ந்த போராட்டம் என்று வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள். இந்தக் கிராமத்தில் எல்லோரும் ஒரே குடும்பம், எல்லோரும் உறவினர்கள் என்ற ஒற்றுமையில் இருக்கிறோம். இனிமேலும் இருப்போம். எங்களைப் பாதுகாத்துக்கொள்வோம்’’ என்கின்றனர்.  

எளிய மக்களின் நியாயம், கேட்க வேண்டியவர்களின் செவிகளை எட்டட்டும்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு