சமூகம்
Published:Updated:

தனி நபருக்காக சி.ஐ.டி.யூ போராட்டம்! - அதிருப்தியில் என்.எல்.சி தொழிலாளர்கள்

தனி நபருக்காக சி.ஐ.டி.யூ போராட்டம்! - அதிருப்தியில் என்.எல்.சி தொழிலாளர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தனி நபருக்காக சி.ஐ.டி.யூ போராட்டம்! - அதிருப்தியில் என்.எல்.சி தொழிலாளர்கள்

தனி நபருக்காக சி.ஐ.டி.யூ போராட்டம்! - அதிருப்தியில் என்.எல்.சி தொழிலாளர்கள்

சி.ஐ.டி.யூ தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்துப் பணி இடமாற்றம் செய்திருக்கிறது, நெய்வேலி என்.எல்.சி நிறுவனம். அதைக் கண்டித்து சி.ஐ.டி.யூ சங்கத்தினர் உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் என அறிவித்துப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ‘தனிநபருக்காக எதற்கு இந்தப் போராட்டம்?’ என்று கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்.எல்.சி தொழிலாளர்கள்.

தனி நபருக்காக சி.ஐ.டி.யூ போராட்டம்! - அதிருப்தியில் என்.எல்.சி தொழிலாளர்கள்

நெய்வேலி என்.எல்.சி நிறுவனம், லாபகரமாக இயங்கக்கூடிய மத்திய அரசு பொதுத்துறை நிறுவனம். இதில் சுமார் பத்தாயிரம் நிரந்தரத் தொழி லாளர்கள், நான்காயிரம் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள், 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாகக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.ஐ.டி.யூ, தி.மு.க சார்பில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்தச் சங்கங்கள்தான் நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தை களில் கலந்துகொண்டு, ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடும்.

தற்போது சி.ஐ.டி.யூ-வின் துணைத் தலைவராக உள்ள திருஅரசு என்பவர், சமூக வலைதளங்களில் என்.எல்.சி-யை விமர்சித்த காரணத்துக்காக, ராஜஸ்தான் மாநிலத்துக்குப் பணி இடமாற்றம் செய்யப்பட்டார். நிர்வாகத்தின் இந்தச் செயலைக் கண்டித்துத்தான் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது, சி.ஐ.டி.யூ.

இதனால், கடும் அதிருப்தியில் இருக்கும் தொழிலாளர் கள், சி.ஐ.டி.யூ-வைக் கண்டித்து சமூக வலைதளங்களில் கடுமையான கருத்துகளைப் பதிவுசெய்து வருகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய என்.எல்.சி ஊழியர்கள், “என்.எல்.சி நிறுவனத்தில் தீர்க்கப்படாத தொழிலாளர் பிரச்னைகள் எவ்வளவோ இருக்கின்றன. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு போனஸ் பெறுதல், ஒப்பந்தத் தொழி லாளர்களைப் பணி நிரந்தரம் செய்தல், ஊதிய உயர்வு கோருதல், என்.எல்.சி-க்காக நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாங்கித்தருதல், தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வாங்கித் தருதல் என்று தொழிற் சங்கங்கள் செய்யவேண்டிய பணிகள் ஏராளம். முன்பு என்.எல்.சி-யில் 27,000 நிரந்தரத் தொழிலாளர்கள் பணி யாற்றினர். தற்போது, 10,000 நிரந்தரத் தொழிலாளர்கள்தான் பணியாற்றுகிறார்கள். தொழிலாளர்கள் ஓய்வுபெற்றால், அவர்களுக்குப் பதிலாகப் புதிய நிரந்தரத் தொழிலாளர்களை நியமிக்காமல், வெளி மாநிலத் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சேர்க்கிறது, என்.எல்.சி நிர்வாகம். தமிழகத் தொழிலாளர்கள் தொடர்ந்து புறக்கணிக் கப்படுகிறார்கள். இவற்றைப் பற்றித் தொழிற்சங்கங்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

கடந்த 2015-ம் ஆண்டு நடந்த வேலை நிறுத்தப் போராட்டத் தில், தொ.மு.ச முன்னாள் தலைவர் திருமாவளவன், சி.ஐ.டி.யூ பொருளாளர் சீனிவாசன் உட்பட 13 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது எல்லாம் போராடாத தொழிற் சங்கம், ஒரு தனி நபரின் இடமாறுதலைக் கண்டித்து உண்ணாவிரதம், வேலை நிறுத்த அறிவிப்பு என்று நோட்டீஸ் கொடுக்கிறது. இதில் தொழிலாளர் களுக்கு உடன்பாடே கிடையாது” என்றார்கள்.

தனி நபருக்காக சி.ஐ.டி.யூ போராட்டம்! - அதிருப்தியில் என்.எல்.சி தொழிலாளர்கள்

என்.எல்.சி தொழிலாளியான ஜெய்சங்கர் என்பவர் இதுகுறித்து கூறுகையில், “சமீபத்தில் ஊதிய மாற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்காக இரண்டு தொழிற்சங்கங் களும் தொழிலாளர்களிடம் லட்சக் கணக்கில் வசூல் செய்தார்கள். இவர்களும் எங்களிடம் சம்பளம் வாங்கிக்கொண்டுதான் செயல்படு கிறார்கள். மற்ற தொழிற்சங்கங்கள் இப்படிச் செயல்படுகிறார்கள் என்று தான் இடதுசாரி தொழிற்சங்கத்தைத் தேர்வு செய்தோம். அவர்களின் செயல்பாடுகளும் இப்படி இருப்பது வேதனையாக உள்ளது” என்றார்.

சி.ஐ.டி.யூ பொதுச் செயலாளர் ஜெயராம னிடம் இதுகுறித்துக் கேட்டோம். “இது ஒன் றும் தனிநபர் பிரச்னை இல்லை. ஆயிரக்கணக் கான தொழிலாளர்களின் பிரதிநிதி திருஅரசு. தொழிற்சங்கத் துணைத் தலைவர். அவரை ராஜஸ்தான் மாநிலத்துக்கு இடமாற்றம் செய்திருக்கிறது, என்.எல்.சி நிர்வாகம். இதுவரை அதிகாரிகள், பொறியாளர்களைத்தான் வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்வார்கள். ஆனால், ஒரு தொழிலாளியை, வேண்டும் என்றே பழிவாங்கும் நோக்குடன் இடமாற்றம் செய்திருக் கிறது, என்.எல்.சி நிர்வாகம். இதைக் கண்டித்து வாயில் கூட்டம் போட்டு, உண்ணாவிரதம் இருந்து, வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். இதுபோல் மீண்டும் ஒரு தொழிலாளி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தான் இந்த நடவடிக்கைகள். நாங்கள் தொ.மு.ச-வுடன் இணைந்து 12 தொழிலாளர்கள் பிரச்னை, ஊதிய மாற்று ஒப்பந்தம் ஆகியவற்றைச் சுமுகமாக முடித்துள்ளோம். தொடர்ந்து, நிரந்தரத் தொழிலாளர் களின் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்து நிர்வாகத்துடன் பேசிவருகிறோம். அதேபோல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், தொழிற் பயிற்சி முடித்தவர்களுக்கான வேலை என அனைத் துப் பிரச்னைகள் குறித்தும் தொ.மு.ச-வுடன் இணைந்து நிர்வாகத்துடன் பேசிவருகிறோம். சி.ஐ.டி.யூ என்றும் தொழிலாளர்கள் பக்கம்தான். சிலர் வேண்டும் என்றே சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். தொழிலாளர்கள் இதை நம்பமாட்டார்கள்” என்றார்.

அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு தொழிற்சங்க மான தொ.மு.ச-வின் பொதுச்செயலாளர் சுகுமாரிடம் பேசினோம். “வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் கொடுப்பதுபற்றி எங்க ளிடம் அவர்கள் ஏதும் கலந்து ஆலோசிக்கவில்லை. அது அவர்களின் தனிப்பட்ட முடிவு” என்றார்.

- ஜி.சதாசிவம், படங்கள்: எஸ்.தேவராஜன்