Published:Updated:

நிலம் எங்கள் உயிர்! -காணி நிலம் கேட்டு கானகத்தில் போராட்டம்...

நிலம் எங்கள் உயிர்! -காணி நிலம் கேட்டு கானகத்தில் போராட்டம்...
பிரீமியம் ஸ்டோரி
நிலம் எங்கள் உயிர்! -காணி நிலம் கேட்டு கானகத்தில் போராட்டம்...

நிலம் எங்கள் உயிர்! -காணி நிலம் கேட்டு கானகத்தில் போராட்டம்...

நிலம் எங்கள் உயிர்! -காணி நிலம் கேட்டு கானகத்தில் போராட்டம்...

நிலம் எங்கள் உயிர்! -காணி நிலம் கேட்டு கானகத்தில் போராட்டம்...

Published:Updated:
நிலம் எங்கள் உயிர்! -காணி நிலம் கேட்டு கானகத்தில் போராட்டம்...
பிரீமியம் ஸ்டோரி
நிலம் எங்கள் உயிர்! -காணி நிலம் கேட்டு கானகத்தில் போராட்டம்...

சுற்றிலும் தேயிலைத் தோட்டம். இடையே ஆங்காங்கே யூகலிப்டஸ் மரங்கள் சூழ்ந்த காடு. அந்தப் பிரதேசத்தைச் சுற்றிலும் மலைச் சரிவுகள், பள்ளத்தாக்குகள், புகையென பனி சூழ்ந்த மலைகள். பெரியதாக ஆள் அரவம் இல்லை. யானைகள் எப்போதும் வரும் விருந்தாளி. சிறுத்தையும் சிறு நரிகளும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும். அப்படியான காட்டில்தான், முகத்தில் அறையும் குளிர் காற்றையும்... ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிக் கடியையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக அங்கேயே சமைத்து, சாப்பிட்டு ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராடிவருகிறார்கள் மக்கள். பெண்கள், குழந்தைகள் என அத்தனை பேரும் தமிழ் மக்கள். அன்றாட கூலித் தொழிலாளிகள். தேர்தல் பரபரப்பில் பலரும் கவனிக்க மறந்த உண்மைக் கதை இது!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சின்னக்கானல் பஞ்சாயத்தின் கீழ் இருக்கும் அழகிய மலைக் கிராமம் சூரியநெல்லி. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்து விரிந்து கிடக்கிறது தேயிலைத் தோட்டம். இங்கு வசிப்பவர்களில் சுமார் 80 சதவிகிதம் பேர் தமிழர்களே. அத்தனை பேரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள். ஐந்து தலைமுறைகளாக இங்கு வசிக்கும் இவர்கள், ‘சொந்தமாக நிலமும் வீடும் வேண்டும்’ என்று கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அறவழியில் போராடி வருகிறார்கள்.

நிலம் எங்கள் உயிர்! -காணி நிலம் கேட்டு கானகத்தில் போராட்டம்...

தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே இருக்கிறது அந்த யூகலிப்டஸ் காடு. இங்கு டென்ட் அடித்து, சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் போராட்டத்தை நடத்திவருகின்றனர். போராட்டக் குழுவினரின் பிரதிநிதியாக ராஜேஷ் என்பவர் நம்மிடம் பேசினார். “ஐந்து தலைமுறைகளாக இங்கு வசிக்கிறோம். என் பாட்டன் பூட்டன்கள் உருவாக்கிய தேயிலைத் தோட்டங்கள் இவை. வெயில், மழை, அட்டைக் கடி, நோய்த் தாக்குதல்கள் என்று எதையும் பாராமல் ஓடாக உழைத்து, கரடுமுரடான காட்டைத் தேயிலைத் தோட்டங்களாக மாற்றினார்கள் எங்கள் முன்னோர்கள். அன்றிலிருந்து இன்றுவரை இங்கேயேதான் வாழ்கிறோம். இந்தத் தேயிலைத் தோட்டங்கள்தான் எங்கள் வாழ்வாதாரங்கள். இதுதான் எங்கள் இடம்.

நாங்கள் தங்குவதற்குத் தேயிலைத் தோட்ட முதலாளிகள், வீடு கொடுத்திருக்கிறார்கள். சின்ன கூடுபோல இருக்கும் அது. அதை ‘கம்பெனி வீடு’ என்று சொல்வார்கள். ஆனால், அந்த வீடுகளில் 58 வயது வரை மட்டுமே குடியிருக்க முடியும். அதன் பின்னர், வீட்டைக் காலி செய்துவிட வேண்டும். அப்படி இருக்கும் போது, 58 வயதுக்குப் பின்பு எங்களால் எங்கே செல்ல முடியும்? எங்கள் உழைப்பை முற்றாக உறிஞ்சிக்கொண்டு, முதிய வயதில் இப்படிக் கைவிடுவது சரியா? இந்த நிலை மாற, ‘எங்களுக்குச் சொந்தமாக நிலமும் வீடும் வேண்டும்’ என்று இரண்டு தலைமுறைகளாகப் போராடி வருகிறோம். ஆனால், நாங்கள் தமிழர்கள் என்பதால், கேரள அரசின் காதுகளுக்கு எங்கள் குரல் கேட்பதில்லை.

ஒருவழியாக கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் தலைமையிலான அரசு, ‘தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்க வேண்டும்; சூரியநெல்லியில் உள்ள அரசு நிலங்களை சர்வே எடுங்கள்’ என்று உத்தரவிட்டது. தொடர்ந்து சூரியநெல்லி யில் சுமார் இரண்டாயிரம் ஏக்கர்களுக்கு மேல் அரசு நிலங்கள் அடையாளம் காணப்பட்டன. அதில் பல இடங்களைத் தனியார் முதலாளிகள், போலி பட்டா தயாரித்து வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு விற்பனை செய்திருந்தார்கள். இந்த மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அந்த நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இப்படி பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் அடையாளம் காணப்பட்ட அரசு நிலங்களை, இங்கிருக்கும் தமிழர்களுக்குப் பட்டா போட்டு வழங்குவதற்கான பணிகளைத் தொடங்கியது வி.எஸ்.அச்சுதானந்தன் தலைமை யிலான அரசு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிலம் எங்கள் உயிர்! -காணி நிலம் கேட்டு கானகத்தில் போராட்டம்...

ஆனால், எங்கள் கெட்ட நேரம்... ஆட்சி மாறியது. அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் எங்களுக்கு நிலம் கொடுப்பது குறித்துப் பேசக்கூட விரும்பவில்லை. எங்களுக்குத் தருவதற் காக அடையாளம் காணப்பட்ட நிலங்கள் ஒவ்வொன்றாக மீண்டும் தனியார் முதலாளிகளால் ஆக்கிரமிக்கப் பட்டன. போலி பட்டாக்கள் போட்டு விற்பனை செய்யப்பட்டன. இப்படியே சென்றால், சூரியநெல்லியில் தமிழர்களுக்குத் தருவதற்கு நிலமே இல்லாமல் போய்விடும். அதனால்தான், அரசுக்குச் சொந்தமான இந்த மூன்றரை ஏக்கர் நிலத்தில் டென்ட் அமைத்து, ஒரு மாதமாக அறவழியில் போராட்டம் நடத்திவருகிறோம். எங்களுக்கு நிலம் கொடுக்கும்வரை இந்த இடத்தைவிட்டு நகரப் போவதில்லை. நாங்கள் சலுகை கேட்கவில்லை. ஐந்து தலைமுறைகளாக நிலத்தைப் பண்படுத்தி தேயிலை விவசாயம் செய்துவருகிறோம். நிலம் எங்கள் உரிமை... நிலம் எங்கள் உயிர். அதைத்தான் நாங்கள் கேட்கிறோம்” என்றார் உறுதியுடன்.

‘தமிழர்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும்’ என்ற நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முயற்சி, பெரும் முதலாளிகளுக்கும், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கும் சாதகமாக அமைந்ததுதான் வேதனை. பட்டா இல்லாத அரசு நிலம் எது என்பதை இந்த சர்வே முடிவுகளே அவர்களுக்குத் துல்லியமாக அடையாளம் காட்டிவிட்டன. சமீபத்தில், சூரிய நெல்லியில் உள்ள அரசு நிலம் ஒன்று, போலி பட்டா தயாரிக்கப்பட்டு, சுமார் 60 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு கம்பெனிக்கு விற்கப்பட்டது. தமிழர்களின் தொடர் போராட்டங் களால் இந்த விவகாரம் கண்டுபிடிக் கப்பட்டு நிலம் பறிமுதல் செய்யப் பட்டது. இதுபோன்ற நில மோசடி களுக்கு இங்கிருக்கும் அரசியல் கட்சியினரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

“நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் இதே மண்தான். எனக்கு வயது அறுபது. 58 வயசுக்குப் பிறகு என்னை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்கள். என்னுடைய வீட்டையும் காலிசெய்து, என்னை வெளியே அனுப்பிவிட்டார்கள். இனி இந்த வயதில் நான் எங்கே போவது? எனக்கென்று சொந்தமாக ஓர் இடம் இருந்தால், இந்த நிலை வந்திருக்குமா? எங்களுக்கு நிலம் கிடைக்கும்வரை இந்தக் காட்டைவிட்டு நகரப் போவதில்லை. இந்தப் போராட்டத்தில் என் உயிரே போனாலும் பரவாயில்லை’’ என்று கண்ணீரோடு பேசுகிறார் சண்முகஜோதி.

நிலம் எங்கள் உயிர்! -காணி நிலம் கேட்டு கானகத்தில் போராட்டம்...

இதுதொடர்பாக, தேவிகுளம் தொகுதி ஆளும்கட்சியின்  எம்.எல்.ஏ-வான ராஜேந்திரனிடம் கேட்டபோது, “தமிழகத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் நியாயமானது. போராட்டத்தை இந்த அரசு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. கேரள வருவாய் துறை அமைச்சரும் இடுக்கி மாவட்ட சப்-கலெக்டரும் நேரில் சென்று அந்த மக்களுடன் பேசியிருக்கிறார்கள். விரைவில் அரசு நல்ல முடிவை எடுக்கும்” என்றார்.

தினமும் வேலைக்குச் சென்றால்தான் சாப்பாடு என்ற நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வேலைக்குச் செல்லாமல், போராடி வருகிறார்கள் தமிழகத் தோட்டத் தொழிலாளர்கள். இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலைக்கு வரச் சொன்னார்கள் தேயிலைத் தோட்ட முதலாளிகள். அப்போதும் போராட்டத்தை கைவிடவில்லை இந்த மக்கள். குழந்தைகள், வயதானவர்களை மட்டும் போராட்டக் களத்தில் விட்டுவிட்டு மற்றவர்கள், வேலைக்குச் சென்றுவருகிறார்கள். இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு, டென்ட்களை கழற்றி, அவர்களை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த முதலாளிகள் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

அரசியல்வாதிகள், காவல் துறையினர், அரசு அதிகாரிகள், முதலாளிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் என அதிகார பலம் பொருந்தியவர்களுக்கு மத்தியில், காணி நிலத்துக்காகப் போராடுகிறார்கள் ஏழைத் தொழிலாளிகள். இவர்களின் போராட்டத்தில் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் கேரளத்தை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு!

- எம்.கணேஷ், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தோட்டங்கள் உருவான வரலாறு!

ங்கிலேயர்களின் ஆட்சியில், மலைப் பிரதேசங்களில் தேயிலைத் தோட்டங்கள் அமைக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள், ஒப்பந்தக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.  இலங்கை மலையகத் தமிழர்கள் அவர்களில் முக்கியமானவர்கள்.அப்படிச் சென்றவர்கள் அடர் வனங்களைச் சீராக்கி, நிலத்தைச் சமன் செய்தார்கள். அந்த வேலைகளின்போது உயிர் துறந்தவர்கள் பலர். காட்டு விலங்குகளுக்கு இரையானவர்கள் பலர். ரத்தம் சிந்தி உழைத்த அந்த மக்களை, தேயிலைத் தோட்டங்களில் அடிமைகளாக நடத்தியது ஆங்கிலேய அரசு. சுதந்திரத்துக்குப்பின் தேயிலைத் தோட்டங்கள் அனைத்தும் தனியார் முதலாளிகளின் கைகளுக்குச் சென்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மேற்கு வங்கத்தில், டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களிலும் உள்ள தேயிலைத் தோட்டங்கள் இப்படி உருவானவைதான். அப்படி ஓர் இடம்தான் சூரியநெல்லி.