Published:Updated:

`உங்கள் வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள் தானே?' - பொள்ளாச்சி போலீஸிடம் பொங்கிய கனிமொழி!

`உங்கள் வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள் தானே?' - பொள்ளாச்சி போலீஸிடம் பொங்கிய கனிமொழி!
`உங்கள் வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள் தானே?' - பொள்ளாச்சி போலீஸிடம் பொங்கிய கனிமொழி!

பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தி.மு.க சார்பாக கனிமொழி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வி.சி.க, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகள் கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பின. இதில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அப்போது பேசிய கனிமொழி, ``தமிழ்நாட்டை தலைகுனிய வைக்கும் அளவுக்கு சம்பவம் நடைபெற்றுள்ளது. பெண்கள் கொடுமைபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். இது வெட்கப்படவேண்டிய செயல். 7 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பவத்தில் வெறும் 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை என்ன செய்கிறார்கள்; யாருக்கு வேலை செய்கிறார்கள்; யாரைக் காப்பற்ற நினைக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதில் உள்நோக்கம் உள்ளது. மேலும், யாரும் புகார் கொடுக்காமல் இருக்க காவல்துறையினர் மறைமுகமாக மிரட்டல் விடுகிறது. பொள்ளாச்சி பிரச்னை அரசியல் ஆக்காதீர்கள் என்கிறார்கள், இதை அரசியலாக்கிய பிறகுதான் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை நான் தலைவணங்குகிறேன்.  தைரியாமாக தன்னுடைய அண்ணனுடன் புகார் கொடுத்தது மிகவும் முக்கியமான ஒன்று.  

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளிவரும் அளவுக்கு காவல்துறையினர் நடந்துகொண்டுள்ளனர். இதைக் கேள்விகேட்ட செய்தியாளர்களிடம் பொறுப்பற்று பதில் அளிக்கிறார் காவல் கண்காணிப்பாளர். போலீஸார் கைது செய்யும் முன் 40 வீடியோக்கள் இருந்தது என்றார்கள். கைதுக்குப் பின்பு வெறும் நான்கு வீடியோதான் உள்ளது என எஸ்.பி. தெரிவிக்கிறார். 1000-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மோசடிக் கும்பலால் பல பெண்களிடம் நகை, பணம் பறிக்கப்பட்டுள்ளது. பல பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் பெண்கள் மரணத்தில் தீவிர விசாரணை வேண்டும். தமிழக மக்கள் அமைதியாக இருக்க மாட்டார்கள். பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களுக்குப் பின்னால் அரசியல்  பின்புலம் உள்ளது. இதை குற்றவாளி திருநாவுக்கரசு தெரிவித்துள்ளான்.

விசாரணை இன்னும் முடியாத நிலையில், காவல்துறையினர் இந்த சம்பவத்துக்கும் அரசியல் கட்சியினருக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுகிறார்கள். விரைவில் ஆட்சி மாற்றம் வரும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் மன்னிக்கப்பட மாட்டார்கள். இதே வீதியில் அழைத்து வரப்படுவார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெண்கள் மீது மரியாதை கொண்டவர், டாஸ்மாக் எதிராக போராடியவர்கள் மீது தாக்கி பெண் ஒருவருக்கு காது கேட்கவில்லை. பொள்ளாச்சி டி எஸ்.பி பத்திரிகையாளரை மிரட்டுகிறார்.

பொதுமக்களுக்கு சேவை செய்பவர்கள்.. பத்திரிகையாளரை ஏன் மிரட்டுகிறார்கள். இத்தனை நாள் வரைக்கும் ஏன் சி.பி.சி.ஐ.டி-க்கு வழக்கு ஏன் மாற்றவில்லை. தி.மு.க தலைவர் அறிக்கை, ஆர்ப்பாட்டம் பின்பே வழக்கு மாற்றப்பட்டுள்ளது.  ஆர்ப்பாட்டத் திடலில் ஆர்ப்பாட்டகாரர்கள் எண்ணிக்கையைவிட போலீஸார் அதிகம் உள்ளனர். ஏன் ஒருவேளை அவர்களும் போராட வந்துள்ளார்களா. போலீஸார் வீடுகளிலும் பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். அதை அவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.  

திருப்பூரில் கைநீட்டி அடித்த எ.டி.எஸ்.பி பாண்டியராஜனுக்கு எஸ் பி பதவி உயர்வு கொடுத்த கேவலம் இந்த ஆட்சியில்தான் நடக்கும். பாலியல் வன்கொடுமை குறித்து பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேட்கும்போது,`நீ என்கிட்ட கேட்பியா?' என்று பத்திரிகையாளரை மிரட்டியுள்ளார். எவ்வளவு திமிரு இருந்தா இப்படி கேட்பார்?'' என வெடித்தார் கனிமொழி. தடையை மீறி போராட்டம் நடத்தியதாகக் கூறி போலீஸார் கனிமொழி உள்ளிட்டோரை கைது செய்ய முற்பட்டனர். இது தொடர்பான தகவல் பரவியதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. யாரும் எதிர்பாராத நிலையில், கனிமொழி உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். செய்வதறியாது திகைத்த காவல்துறையினர் அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்தையில் ஈடுபட்டனர். பின்னர் மறியல் முடிவுக்கு வந்தது.