Published:Updated:

ஆபத்தான பயணம்; ஆத்திரத்தில் மக்கள்; மடைமாற்றப்பட்ட மாநகரப் பேருந்துகள்’ - என்ன நடந்தது கோயம்பேட்டில்?

ஆபத்தான பயணம்; ஆத்திரத்தில் மக்கள்; மடைமாற்றப்பட்ட மாநகரப் பேருந்துகள்’ - என்ன நடந்தது கோயம்பேட்டில்?
ஆபத்தான பயணம்; ஆத்திரத்தில் மக்கள்; மடைமாற்றப்பட்ட மாநகரப் பேருந்துகள்’ - என்ன நடந்தது கோயம்பேட்டில்?

ஆபத்தான பயணம்; ஆத்திரத்தில் மக்கள்; மடைமாற்றப்பட்ட மாநகரப் பேருந்துகள்’ - என்ன நடந்தது கோயம்பேட்டில்?

`ஆளுங்கட்சிக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என நினைத்து, மக்களை ஓட்டுப்போட அனுமதிக்காத வகையில் இத்தகைய செயல்களை செய்கிறதா அரசு?’ `இது ஒரு ஜனநாயக நிகழ்வு, பண்டிகை காலங்களில் அட்டவணையிட்டு, சிறப்பு பேருந்துகளை அறிவிக்கும் அரசு, நாட்டின் முக்கியமானதொரு நிகழ்வுக்கு அப்படி செய்யாதது ஏன்?’ `நோட்டாவுக்குத்தான் ஓட்டு போடப் போறேன்’ இப்படியாய் ஆத்திரத்தின் உச்சத்தில் வார்த்தைகளை உதிர்க்கின்றனர் கோயம்பேடு பேருந்துநிலையத்திலிருந்த மக்கள்.

அவர்களுக்குள் கோபம் கொப்பளிக்கிறது; ஆர்ப்பரிக்கின்றனர். ஒரு ஜனநாயகக் கடமையாற்றக்கூட எங்களுக்கு வழியில்லாமல் இந்த அரசு செய்துவிட்டதே என்ற அதிருப்தியின் உச்சத்தில், தங்கள் இயலாமையின் வெளிப்பாடாகத்தான் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மக்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. `தனியார் நிறுவனங்கள் வாக்குப்பதிவையொட்டி, ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்; தவறினால் நடவடிக்கை’ என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. ஜனநாயகக் கடமையாற்றுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச்செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

மாலை 6 மணியிலிருந்து கூட்டம் களைகட்டத் தொடங்கியது. ஆனால், மக்களின் கூட்டத்துக்குத் தகுந்தாற்போல, பேருந்துகளின் எண்ணிக்கை இருக்கவில்லை. நீண்டநேரம் காத்திருக்கவேண்டிய சூழல். வழக்கமான பேருந்துகளே இயக்கப்பட்டதால், பொதுமக்கள் கூட்டத்துக்கு பேருந்துகளால் ஈடுகொடுக்கமுடியவில்லை. அரசுப் பேருந்துகளின் பற்றாக்குறையை ஆம்னி பேருந்துகள் லாகவமாகப் பயன்படுத்திக்கொண்டு, டிக்கெட் விலையை தங்கள் இஷ்டத்துக்கு ஏற்றிக்கொண்டனர். சென்னை டு சேலத்துக்குச் செல்ல வழக்கமான நாள்களில் 600 ரூபாயிலிருந்து கட்டணம் தொடங்கும். ஆனால் நேற்று மட்டும், 1400 ரூபாயிலிருந்து விற்பனை தொடங்கியது. அரசுப் பேருந்துகள் பற்றாக்குறை, ஆம்னி பேருந்துகளின் விலை ஏற்றத்தால் கடும் கோபத்துக்கு ஆளான பொதுமக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தைச்சுற்றிப் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேருந்து நிலையத்தின் நுழைவாயில், மாநகரப் பேருந்து நிலையத்தின் உட்புறம், கோயம்பேடு பேருந்துநிலையம் உள்ளிட்ட இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் கோயம்பேடு சுற்றி பேருந்துகள் வெளியேறவும், உள்ளே செல்லவும் முடியாமல் ஸ்தம்பித்து நின்றன. வாகன நெரிசலால் 100 அடி சாலையில் அப்படி அப்படியே 2 மணிநேரமாக வாகனங்கள் நின்றுகொண்டிருந்தன. அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கடும் கோபத்தில் இருந்ததால், காவலர்கள் பேச்சு எடுபடவில்லை. போராட்டத்தை ஒடுக்க, லத்திகளைக்கொண்டு தாக்கத்தொடங்கினர். தடியடி நடத்தப்பட்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

சொந்த ஊருக்குச் செல்லவேண்டியவர்களின் கை, கால்களில் ரத்தம் வடியத்தொடங்கியது. அடிதாங்க முடியாமல் சிலர் ஓடினர். காவலர்களின் இந்தச் செயலால் கடும் கோபத்துக்குள்ளான மக்கள், ``நாளைக்கு ஓட்டு போட்டு எங்கள் எதிர்ப்பை காண்பிப்போம்” என்று கொந்தளித்தனர். ``தேர்தல் ஆணையம் 100 சதவிகிதம் வாக்குப்பதிவு வேண்டும் என்கிறது. ஆனால், அதற்கான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. எங்கள் கடமையை ஆற்றக்கூட எங்களை இந்த அரசு அனுமதிக்கவில்லை” என்றபடி கூச்சலிட்டனர்.

வேறுவழியின்றி, பேருந்துகளின் படிகளில் தொங்கியும், மேற்கூரைகளில் அமர்ந்தும், நெரிசலுடன் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். பேருந்துகளின் பற்றாக்குறையைப் போக்கவோ, மக்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கவோ, போக்குவரத்து அதிகாரிகள் முன்வரவில்லை. நீண்ட நேரம் கழித்து, மாநகரப் பேருந்துகளை வெளியூர்களுக்கு மடைமாற்றிவிட்டனர். திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்னை மாநகரப் பேருந்துகள், மாற்றி அனுப்பி வைக்கப்பட்டன. சிலர் `ஓட்டுப்போடவே வேண்டாம்’ என்றபடி மீண்டும் சென்னைக்குள்ளே நடையைக் கட்டினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பயணி ஒருவர்,

``நான் திருச்சி போறதுக்காக, நைட் பத்து மணியில இருந்து நிக்குறேன். நாலு மணிவரைக்கும் ஒரு பஸ் கூட வரல. நாலு மணிக்கு மேல ரெண்டு, மூணு பஸ் வந்துச்சு. ஆனால், மக்கள் நாங்க எக்கச்சக்க பேர் நிக்கிறோம். நாங்க மட்டுமல்ல, டிக்கெட் ரிசர்வ் பண்ணியிருந்தவங்களும் காத்துக்கிடக்காங்க. எந்தவிதமான மாற்று ஏற்பாடும் பண்ணல, டிப்போல ஏராளமான பஸ் நிக்கிது. போய் கேட்டாலும் சரியான ரெஸ்பான்ஸ் இல்ல. எட்டு மணிக்கு வந்தவங்க முதற்கொண்டு நின்னுட்டுதான் இருக்காங்க. கொஞ்ச நேரம் முன்னாடி அதிகாரிகள் வந்து ஏற்பாடு பண்றேன்னு சொன்னாங்க. ஆனா இன்னும் எந்த ஏற்பாடும் செய்யல. தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு ஊருக்குப் போறதுக்குச் செய்யுற மாற்று ஏற்பாடுகள்கூட இப்ப ஓட்டு போடுறதுக்குச் செய்யல. நாங்கலாம் ஓட்டு போட வேணாமா '' என்கிறார் பரிதாபமாக. 

அடுத்த கட்டுரைக்கு