Published:Updated:

`கொள்ளிடம் ஆறே உன்னை நீயே காத்துக்கொள்' - மணலுக்கு மனு கொடுத்து விநோதப் போராட்டம் நடத்திய மக்கள்!

`கொள்ளிடம் ஆறே உன்னை நீயே காத்துக்கொள்' - மணலுக்கு மனு கொடுத்து விநோதப் போராட்டம் நடத்திய மக்கள்!
`கொள்ளிடம் ஆறே உன்னை நீயே காத்துக்கொள்' - மணலுக்கு மனு கொடுத்து விநோதப் போராட்டம் நடத்திய மக்கள்!

`கொள்ளிடம் ஆறே உன்னை நீயே காத்துக்கொள்' - மணலுக்கு மனு கொடுத்து விநோதப் போராட்டம் நடத்திய மக்கள்!

திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைக்க முயற்சி செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வரும் மக்கள் கொள்ளிடம் ஆற்றுக்கு நடுவில் மணலைக் குவித்து வைத்து வாழை இலையில் பழங்கள் வைத்து ,தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி கொள்ளிடம் ஆறே உன்னை நீயே காத்துக்கொள் என ஆற்றுக்கு மனு கொடுக்கும் நூதனப் போராட்டத்தை நடத்தினர்.

திருவையாறு அருகே உள்ளது விளாங்குடி கிராமம். இந்த ஊர் மக்களுக்கு விவசாயம்தான் பிரதான தொழில். ஒவ்வொரு விவசாயியும் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துகொண்டே வருகிறது. இதனால் விவசாயம் சரிவர இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், இங்குள்ள கொள்ளிடம் ஆற்றில் தமிழக அரசு மணல் குவாரி அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து  சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும், மணல் குவாரி அமைக்க ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் காலில் விழுந்து கெஞ்சினர். அரசு இங்கு மணல் குவாரி அமைக்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்து வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று  விளாங்குடி மக்கள் ஒரு பகுதியினர், `கொள்ளிடம் ஆறே உன்னை நீயே காத்துக்கொள்' என மனு எழுதி மணலைக் குவித்து வைத்து மனு கொடுக்கும் நூதனப் போராட்டம் நடத்தினர். ஆற்றுக்கு நடுவே மணலைக் கடவுளாக நினைத்து மணலைக் குவித்து வைத்து பூக்கள் இட்டனர். பின்னர் மணலுக்கு முன் வாழை இலையில் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை வைத்து தேங்காய் உடைத்தனர். பிறகு குவிக்கப்பட்ட மணல் திட்டில் கற்பூரம் காட்டி வணங்கினர். இதையடுத்து கொள்ளிடம் ஆறே உன்னை நீயே காத்துக்கொள் என எழுதப்பட்ட மனுவை மணலில் வைத்தனர். இதில் விவசாயிகள், பெண்கள், சிறுவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். இது குறித்து கிராம மக்கள் சிலரிடம் பேசினோம், ``எங்கள் ஊரில் பல ஆண்டுகளாக அரசு மணல் குவாரி அமைப்பதற்கு முயன்று வருகிறது. நாங்கள்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருவதுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்து வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் பல ஊர்களில் மணல் குவாரி அமைத்து மணலை அள்ளிவிட்டனர்.

இப்போது எங்கள் ஊரில் குவாரி அமைப்பதற்கும் விடாப்பிடியாக முயல்கிறது அரசு. ஒரு கன அடி மணல் உருவாகப் பல நூறு ஆண்டுகள் ஆகிறது. ஏற்கெனவே நிலத்தடி நீர் குறைந்து வரும் வேளையில் மணல் அள்ளினால் குடிநீருக்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்.விவசாய நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் போய் வறண்ட நிலமாக மாறிவிடும்.மணல் அள்ளும் பகுதிகளில் குடி நீரின் தன்மை மாறிவிடுகிறது. தண்ணீரில் உப்பு அதிகமாகி விடுவதால் அந்த தண்ணீரைக் குடிப்பவர்கள் சிறுநீரக நோய்களுக்கு ஆளாகித் தவிக்கின்றனர். மணல் என்பது கட்டுமானப் பொருள் என்ற அடிப்படை எண்ணத்தை மாற்றி நம் வாழ்வாதாரத்தின் நிலத்தின் ஆணி வேர் என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும். மணல் இல்லை என்றால் குடிநீருக்கு பஞ்சம் ஏற்படுவதோடு, விவசாயமும் அழியும் நிலை உருவாகும். எங்கள் ஊர் மட்டும் இல்லை; இந்த பூமியே காக்கப்பட வேண்டும். மேலும், நம் வருங்கால தலைமுறையினருக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் ஆற்றில் மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டும். இதை உணர்த்தவே மணலைக் குவித்து வழிபாடு நடத்தி மனு கொடுத்தோம். மேலும், எந்தக் காலத்திலும் எங்கள் ஊரில் மணல் குவாரி அமைக்க விடமாட்டோம்" எனத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு