Published:Updated:

'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு' சம்பவத்தில் விகடன் நிருபர்களின் நேரடி கள அனுபவம்...

'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு' சம்பவத்தில் விகடன் நிருபர்களின் நேரடி கள அனுபவம்...
'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு' சம்பவத்தில் விகடன் நிருபர்களின் நேரடி கள அனுபவம்...

திட்டுத் திட்டாக ரத்தக் கறைகள், ஆங்காங்கே ஒற்றைச் செருப்புகள், கவிழ்க்கப்பட்ட இரும்புத் தடுப்புகள், முறிந்த லத்திக் கம்புகள் என வன்முறை வெறியாட்டத்தின் தடயங்களால் விரவிக் கிடந்தது அந்தப் பகுதி. உடம்பில் குண்டுபாய்ந்து இறப்பதற்குமுன் அவர்கள் இட்ட அலறல் சத்தம், அதீத ஓலத்துடன் காதில் ஒலிப்பது போல் தோன்றியது.

சரித்திரப் படுகொலைகளை வரலாற்றுப் பாடங்களில் மட்டுமே படித்த தலைமுறையினருக்கு அதிகாரவர்க்கம், அதை நேரடியாக நிகழ்த்திக்காட்டி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஆம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பேரணியாகச் சென்றவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு கடந்தவருடம் இதேநாளில்தான் நடந்தேறியது. 

``துப்பாக்கிச்சூடு நடந்த அன்று மாலை விகடன் நிருபர்களான நானும், கலைச்செல்வனும் சென்னையிலிருந்து கிளம்பி, மறுநாள் அங்குச் சென்றடைந்தோம். எங்களுடன் தூத்துகுடி, திருநெல்வேலி வட்டாரத்தைச் சார்ந்த விகடனின் புகைப்படம் மற்றும் பத்திரிகை நிருபர்களான சிதம்பரம், முத்துராஜ், ராஜேந்திரன், கார்த்திக் ஆகியோர் இணைந்தனர்.

இரண்டாவது நாளன்று போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டையும், அத்துமீறல்களையும் நாங்கள் கண்ணெதிரே பார்த்தோம்.

போலீஸாரின் அத்துமீறல்கள் வெளியே தெரியக் கூடாது என்பதற்காக, அரசு கேபிள் நிறுவனத்தின் தொலைக்காட்சி அலைவரிசைகள் முடக்கப்பட்ட நிலையில், ஊடகங்கள் அனைத்தும் ஊருக்கு உள்ளே அனுமதிக்கப்படாத சூழலில், நாங்கள் காவல்துறையினருக்குத் தெரியாமல் தூத்துக்குடி நகருக்குள் நுழைந்து, கலவரம் உச்சத்திலிருந்த பல்வேறு இடங்களுக்கும் சென்று விகடன் ஃபேஸ்புக் இணையத்தில் அங்கு நடந்த நிகழ்வுகளை `லைவ்' செய்தோம். ஒரு காவலரின் செய்கையைக் கண்டித்து, கலைச்செல்வன் தைரியமாகக் கேள்வி எழுப்பியக் காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. துயரமான அனுபவங்களைத் தந்த அன்றைய பொழுதை எங்கள் வாழ்நாளில் என்றைக்கும் மறக்க முடியாது. 

'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு' சம்பவத்தில் விகடன் நிருபர்களின் நேரடி கள அனுபவம்...

`அறவழியில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை' எனப் பெண்கள், குழந்தைகள் எனக் குடும்பம் குடும்பமாக வீதியில் இறங்கி பேரணியாகச் சென்றார்கள். துப்பாக்கிச்சூடு நடைபெற்ற தினத்தன்று மக்களின் போராட்டம் அமைதியாகத்தான் தொடங்கியது. தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் சதுக்கத்தில் ஒவ்வோர் ஊர் மக்களாகக் கூடி, அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்வதுதான், போராட்டத்தின் நூறாவது நாள் திட்டம். அந்தப் போராட்டம் காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதலாக உருமாறவே, சுத்தமான காற்றுக்காகப் போராடியவர்களையும், சும்மா வீதிவழியாகச் சென்றவர்களையும் தின்று செரித்து விடும் அளவுக்கு அவர்களைத் துளைத்துவிட்டன போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகள்.

மறுநாளும் துப்பாக்கிச்சூடும், காவலர்களின் அத்துமீறலும் நடக்கும் என்று யாரும் யூகிக்கவில்லை. தூத்துக்குடி நகரின் தெருக்களில் மக்கள் கூடிக் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தாலும் ஒரு மயான அமைதியை அங்கே உணர முடிந்தது.

துப்பாக்கிச் சூடு ஆரம்பித்த ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே முதலில் சென்றோம். சாலை நெடுகிலும் திட்டுத்திட்டாக ரத்தக்கறைகள், ஆங்காங்கே ஒற்றைச் செருப்புகள், கவிழ்க்கப்பட்ட இரும்புத் தடுப்புகள், முறிந்த லத்திக் கம்புகள் என வன்முறை வெறியாட்டத்தின் தடயங்களால் விரவிக் கிடந்தது அந்தப் பகுதி. உடம்பில் குண்டு பாய்ந்து இறப்பதற்கு முன், மக்கள் போட்ட அலறல் சத்தம் அதீத ஒலியுடன் எங்கள் காதுகளில் ஒலிப்பது போலத் தோன்றியது. அந்த ஓலத்தின் அச்சுறுத்தலிலும், ஒருவித குற்ற உணர்ச்சியுடனும் அங்கிருந்து கலைச்செல்வனுடன் கிளம்பினேன்.

உயிரிழப்பு ஏற்பட்ட பகுதிகளுள் ஒன்றான பாத்திமா நகருக்குச் சென்று, உயிரைப் பலிகொடுத்த ஒரு குடும்பத்தைச் சந்திக்கச் சென்றோம். அங்கிருந்த மக்கள் எங்களை ஊருக்குள் அனுமதிக்கவே இல்லை. ஏற்கனவே, உறவுகளைத் தொலைத்துவிட்டு ஏங்கிக் கொண்டிருக்கும் அவர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்று, மீதியிருக்கும் ஆண்களையும் கைது செய்திருக்கிறார்கள் காவலர்கள். அந்த ஆற்றாமையின் தாக்கம் அந்தப் பகுதி மக்களின் கண்களிலும், வார்த்தைகளிலும் துடித்துக் கொண்டிருந்தது. 'ஊடகத்திலிருந்து வருகிறோம்' என்று சொன்னதும் அவர்களின் கோபம் இருமடங்கானது. "நேத்தெல்லாம் எங்க போயிருந்தீங்க" என எங்களை அடிக்கப் பாய்ந்த இளைஞர்கள் சிலரை மற்றவர்கள் தடுத்தார்கள். 'தம்பி, நாங்க போலீஸையும் நம்பல. மீடியாவையும் நம்பல. எல்லாம் கொதிச்சுப் போயிருக்கோம், இங்கேயிருந்து போயிடுங்க' என அனுப்பி வைத்தார்கள். நாங்கள் கிளம்பிச் செல்கையில், 'ஏய், இவங்களும் போயிட்டா நம்ம நியாயத்தை யார்கிட்டதாம்ல சொல்றது" என ஒரு பெண்மணி கூறவே, எங்களை அழைத்து அவர்கள் பேசினார்கள். அவர்களுடைய இயலாமையையும், அழுகையையும் நாங்கள் அப்போது ஃபேஸ்புக் வழியாக நேரடியாகப் பதிவுசெய்தோம்.

அங்கிருந்து மீனவர்கள் குடியிருப்பான திரேஸ்புரம் பகுதிக்குச் சென்றோம். முதல்நாள் துப்பாக்கிச் சூட்டில் குண்டடிப்பட்டு இறந்துபோன ஜான்ஸிராணி என்கிற பெண்ணின் வீட்டிற்குச் செல்ல முயன்றபோது, அங்கிருந்த மக்கள் எங்களை அனுமதிக்கவில்லை. பிறகு அங்கிருந்த ஒருவர், எங்களை மக்களிடமிருந்து விலக்கி ஜான்ஸிராணியின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் ஊருக்குள் நுழைந்து விட்டார்கள் என்று தெரிந்ததும், அங்கே காவலுக்கு இருந்த போலீஸாருக்கு விஷயம் தெரிந்து, எங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூட்டமாக வந்தார்கள். ஆனால், மக்கள் ஒரு காவலரைக்கூட ஊருக்குள் அனுமதிக்கவில்லை. ஓரமாக வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய படகைக் கொண்டுவந்து சாலையின் குறுக்கே நிறுத்தி அதன் மீது ஏறி நின்றார்கள். 'முடிஞ்சா ஊருக்குள்ள வால, இனி எங்க சனங்க உசுரு ஒண்ணுகூடப் போகாது' என ஒருவர் சத்தமாகக்கூற, மற்றவர்கள் அனைவரும் அவரை வழிமொழிய அவர்களின் ஆவேச சத்தத்தில் போலீஸார் ஒரு அடிகூட முன்னேறாமல் அங்கேயே நின்றார்கள். பதற்றம் குறைந்த பிறகு, இனி ஒவ்வொரு ஊருக்கும் செல்வது சரியாக இருக்காது என்றெண்ணி தூத்துக்குடி நகரின் மையப்பகுதிக்கு வந்தோம். 

துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் உடலை வாங்குவதற்கும், அடிபட்டு சிகிச்சையில் உள்ளவர்களைப் பார்ப்பதற்கும், பெருந்திரளான கூட்டம் ஆவேசமும், அழுகையுமாகத் தூத்துக்குடி அரசுப் பொது மருத்துவமனை முன்பு குவிந்திருந்தது. போராட்டத்திற்குக் கிளம்பியவன் இன்னும் வீடு திரும்பவில்லையே எனத் தத்தளித்தவர்களும் மருத்துவமனைக்கு உள்ளே செல்வதற்கு ஆயத்தமாக இருந்தார்கள். நேரம் ஆக, ஆக மக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. உறவினர்களை இழந்தவர்கள் மட்டுமின்றி ஊருக்காக அங்கே கூட்டம்கூட ஆரம்பித்தது. தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போன்றோர் மருத்துவமனைக்கு வந்ததால், மக்கள் கூட்டம் இன்னும் அதிகமானது.

இனி, சமாளிக்க முடியாது என்றெண்ணி காவலர்கள், தடுப்புகளைக் கொண்டுவந்து மக்கள் முன்னால் போட்டனர். 'நாங்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட வரவில்லை. இறந்து போனவர்களின் உடலை வாங்கத்தான் வந்தோம்' என மக்கள் சொன்னபோதிலும் காவலர்கள் அவர்களை அனுமதிக்கவில்லை. இந்த வாக்குவாதம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, காவல்துறை தரப்பிலிருந்து அடிதடி நிகழ்த்தினார்கள். அதற்குப் பிறகு மக்கள் கூட்டம் சிதறி, மீண்டும் காவலர்களை நோக்கிவர இருதரப்பினருக்கும்  இடையே மீண்டும் அடிதடி நிகழ்ந்தது. காவல்துறை இரண்டாவது தினமும் துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஒரு இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்துவிட்டாரா, நடிக்கிறாரா என அந்த இளைஞரைக் காலால் எட்டி உதைத்துப் பரிசோதித்தார்கள் காவல்துறையினர்.

'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு' சம்பவத்தில் விகடன் நிருபர்களின் நேரடி கள அனுபவம்...

இன்னொருபுறம், லத்தி வைத்திருந்த காவலர்கள், மூர்க்கமாகத் தாக்கினார்கள். ஒரு இளைஞரைப் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் சூழ்ந்துகொண்டு தாக்கினார்கள். ஒரு காவலர் அந்த இளைஞனை விடாது சென்று துரத்தினார். அத்தகையதொரு பதற்றமான சூழலில் சக நிருபர் கலைச்செல்வன் அந்த காவலரைத் தடுத்து கேள்வி கேட்டார். அதை அப்படியே ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார். தூத்துக்குடி மக்களும் அங்கே நடக்கும் பிரச்னைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் சொல்ல ஆரம்பித்தனர். இதனால், அதற்கடுத்த ஒரு மணி நேரத்திற்குள் இணைய வசதி அங்கு முடக்கப்பட்டது. நாங்கள் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டோம். ஆனாலும், அச்சம் ஏற்படவில்லை. பத்திரிகையாளர்கள் என்கிற பொறுப்பும், மனிதாபிமானத்தின் அவசியமும் எங்களை உந்தித்தள்ளின. தொடர்ந்து பல இடங்களுக்குச் சென்று 'லைவ்' செய்தோம். 

'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு' சம்பவத்தில் விகடன் நிருபர்களின் நேரடி கள அனுபவம்...

பிறகு, மருத்துவமனைக்கு வந்தோம். குறிப்பிட்ட இடத்திற்கு மேலே மருத்துவர்கள் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால், குண்டடிபட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களைச் சந்திக்க முடிந்தது. ஒருவார்டு முழுக்க அவர்கள் வலியால் அழுதுகொண்டும், முணுமுணுத்துக் கொண்டும் இருந்தனர். வலது கண்ணில் குண்டுபாய்ந்து படுத்திருந்த முதியவர், காலில் குண்டடிபட்டு ஒரு காலை இழந்து படுத்துக் கிடந்த வெல்டிங் தொழிலாளி, கையில் குண்டடிபட்டு சிகிச்சை பெற்ற  பால் வியாபாரி என அவர்களின் வலிகளையெல்லாம் உறவினர்கள் சொல்லிப் புலம்பிய துயரத்தை வார்த்தைகளில் எழுதிவிட இயலாது. 

வேலையிலிருந்து மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்த மகனைப் பிணவறையில் கண்டுபிடித்துக் கதறி அழுத அம்மாவையும் அப்பாவையும் பார்த்த தருணத்தை இப்போது நினைவுகூர்ந்து எழுத முற்படும்போதுகூட கண்கள் கலங்குகின்றன. இத்தனைப் பேரைச் சுட்ட அந்தக் காவலர், துப்பாக்கி ஏந்திய அதே கையில்தானே அவருடைய குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சுவார். நாம் கொல்லப்போகிறவனுக்கும் அப்படியொரு குடும்பம் இருக்குமென்கிற யோசனை ஏன் அவருக்கு வரவில்லை என்கிற கேள்வியின் அலைக்கழிப்பு எங்களை நிலைகுலையச் செய்தது.
 

'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு' சம்பவத்தில் விகடன் நிருபர்களின் நேரடி கள அனுபவம்...

'ஒரு நாளின் சில மணி நேரங்களில் எவ்வளவு துயரங்களைத்தான் தாங்க முடியும்' என மனம் ஏற்க மறுத்து, துயரைத் தாங்காமல் இருவரும் பிணவறையின் அருகே நின்றபடி அழுதோம். அந்த நாள் அப்படித்தான் முடிந்தது.  ஆனால், அதன் தாக்கம் ஒரு வருடம் ஆன பின்னரும் இன்னும் நெஞ்சை விட்டு அகலவில்லை. எங்களுக்கே இப்படி என்றால் மகனை, மகளை, கணவனை, மனைவியை, தந்தையை என தங்களின் உறவினர்களை இழந்தவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? உறவுகளை இழந்தவர்களின் கண்ணீர் வறண்டிருக்கலாம். ஆனால், காலத்தின் வடுவாக அவர்களின் மனதிற்குள் உறைந்துவிட்ட இழப்பின் வலிக்கு ஈடாக எதைக் கொடுத்துவிட முடியும் நம்மால்?".

தமிழகத்தின் போராட்டங்கள் தொடர்பான வரலாற்றுப் பக்கங்களில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைப் புரட்டும்போது, ரத்த வாடை அனைவரையும் அலற வைப்பதாகவேதான் இருக்கும். தங்களின் சுயலாபத்துக்காக ஒரு பெருங்கூட்டத்தின் வாழ்வாதாரத்தை விலைபேசுபவர்களுக்கு எதிரான உரிமைக்குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு