Published:Updated:

`இனி, ஜஹான் வரமாட்டான்...’ - ஷாகீன் பாக் போராட்டக் களத்தை அதிரவைத்த பதில்

நசியா
நசியா

டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தில் பங்கெடுத்த 4 மாத குழந்தை, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உயிரிழந்தது.

`இனி ஜஹான் வரமாட்டான்...’ நசியாவின் இந்தப் பதில், டெல்லி ஷாகீன் பாக் போராட்டக் களத்தில் இருந்தவர்களிடையே சோகத்தைப் பரவச்செய்தது. 4 மாத குழந்தையான ஜஹான், போராட்டக்களத்தில் இருந்தவர்களுக்கு உற்சாக டானிக். அங்கிருந்த பெரும்பாலானவர்களுக்கு ஜஹான் பரிட்சயம். மொழு மொழுவென இருக்கும் அவனின் கன்னங்களில் மூவர்ணக்கொடியை வரைந்து போராட்டத்தில் பங்கெடுக்கச் செய்தனர். டெல்லியைச் சேர்ந்த முகமது ஆரிஃப் - நசியா தம்பதியின் நான்கு மாத குழந்தைதான் இந்த ஜஹான். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் நடைபெறும் போராட்டத்தில், தன் நான்கு மாத குழந்தை ஜஹானுடன் இந்தத் தம்பதியினர் போராட்டக்களத்தில் இருந்துவந்துள்ளனர். டிசம்பர் 18-ம் தேதி முதல் இவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் பங்கெடுத்துவந்தனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். ஜஹான் மூன்றாவது குழந்தை.

நசியா குடும்பம்
நசியா குடும்பம்

ஜனவரி 30-ம் தேதி, ஷாகீன் பாக் பகுதியிலிருந்து இரவு 1 மணியளவில் நசியா குழந்தைகளுடன் வீடு திரும்பியுள்ளார். குழந்தைகள் மூவரும் நசியா அருகில் உறங்கியுள்ளனர். காலையில் எழுந்து பார்த்தபோது, ஜஹான் அசைவற்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக குழந்தையைத் தூக்கிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதகாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பனியின் தாக்கத்தால் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

`லீ... நீங்கள்தான் எங்கள் ஹீரோ!’ -கொரோனா வைரஸைக் கண்டறிந்த சீன மருத்துவருக்கு நேர்ந்த கதி

ஆரிஃப் பேசுகையில்,``என் குழந்தையை இழந்துவிட்டோம். நாங்கள் எல்லாவற்றையும் இழந்தது போலத்தான் இது. இந்த அரசானது குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றைக் கொண்டுவராமல் இருந்திருந்தால், இந்த மக்கள் போராடியிருக்க மாட்டார்கள். என் மனைவியும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திருக்க மாட்டார். என் மகனும் உயிருடன் இருந்திருப்பான்” என கண்ணீரோடு கூறினார். அவரது கையில் இருந்த புகைப்படத்தில், `ஐ லவ் இந்தியா’ என்ற வாசகம் பதித்த தொப்பியை அணிந்து சிரித்துக்கொண்டிருந்தான் ஜஹான்.

நசியா
நசியா

குழந்தை இறந்த ஒரு வார காலத்தில் மீண்டும் போராட்டக்களத்துக்குட் திரும்பியுள்ளார், நசியா. அப்போதுதான், ஜஹான் எங்கே எனப் போராட்டக்களத்தில் இருந்தவர்கள் கேட்டுள்ளனர். அவரது பதில் அங்கு சோகத்தை பரவச்செய்தது. கணவர் மற்றும் மாமியாரிடம் சண்டையிட்டு, நசியா போராட்டக்களத்துக்கு திரும்பியதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறுகின்றனர். தெருவில் இருந்தவர்களை ஒருங்கிணைத்து, போராட்டக்களத்துக்கு அழைத்துவந்துள்ளார். ஆனால், இந்த முறை ஜஹான் இல்லை. ``நான் ஏன் இதைச் செய்கிறேன்? என் குழந்தைகளுக்கும் மற்றும் நாட்டில் உள்ள மற்ற குழந்தைகளின் எதிர்காலத்தை மனத்தில் வைத்துப் போராடுகிறேன். குடியுரிமை திருத்தச் சட்டம், அனைத்து மதங்களின் நலனுக்கும் எதிரானது’' என்று நசியா கூறியுள்ளார்.

`டெல்லி யாருடையது.. உங்கள் வாக்கு தீர்மானிக்கும்!'- ஷாகீன் பாக் போராட்டத்தைக் குறிப்பிட்ட அமித் ஷா
அடுத்த கட்டுரைக்கு