ஜெய், நஸ்ரியா நடித்துள்ள படம் 'திருமணம் எனும் நிக்காஹ்’. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் இஸ்லாம் சமூகத்தைக் காயப்படுத்துவதாக இருக்கிறது என்று தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த துணைத்தலைவர் அலிகான், நீதிமன்ற படியேறி இருக்கிறார். ''முஸ்லிம் மக்களின் நம்பிக்கைகளைப் புண்படுத்தும்விதமாகக் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்தப் படத்தைத் தடைசெய்ய வேண்டும்'' என்பது இவருடைய வழக்கின் சாரம்.

'படத்தில் அப்படி என்னதான் இடம்பெற்று இருக்கிறது?’ - 'திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கேட்டோம். ''முதலில் ஓர் உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். 'திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தின் இயக்குநர் அனீஸ் ஒரு முஸ்லிம். இசையமைப்பாளர் ஜிப்ரன், எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் சிக்கந்தர், நாயகி நஸ்ரியா, நாயகன் ஜெய்... என இந்தப் படத்தில் பங்குபெற்ற பலரும் இஸ்லாம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இப்படி எல்லா முஸ்லிம் மக்களும் ஒன்றுசேர்ந்து உருவாக்கி இருக்கும் படத்தில், எப்படி இஸ்லாம் சமூகத்தைக் காயப்படுத்துவார்கள் என்ற உண்மையை உணர வேண்டும்.

திருமணம் எனும் நிக்காஹ்

எல்லா தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கக்கூடிய மதநல்லிணக்கத் திரைப்படமாக, 'திருமணம் எனும் நிக்காஹ்’ இருப்பதால்தான், படத்தைப் பார்த்த மத்திய அரசின் சென்சார் போர்டு உறுப்பினர்கள் 'யு’ சர்ட்டிஃபிகேட் கொடுத்து பாராட்டியிருக்கிறார்கள். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட படத்தில் இடம்பெறும் காட்சியை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்? உண்மையில், படம் முழுக்க முழுக்க ஒவ்வொரு காட்சியும் இஸ்லாம் சமூகத்துக்குப் பெருமை சேர்ப்பதாகவே அமைந்திருக்கிறது.

கன்னட மொழி பேசும் தேவாங்க செட்டியார் பெரும்பாலானவர்கள் சேலம், நாமக்கல், கோவை பகுதிகளில் வசிக்கிறார்கள். அவர்கள் தங்கள் குலதெய்வமான சௌடாம்பிகையை சிறப்பாக வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை அன்று சௌடாம்பிகைக்காக கத்தியால் தங்கள் மார்பில் கீறிக்கொண்டு வழிபடுவார்கள். இது எப்போதோ நடந்த சம்பவம் அல்ல; இப்போதும் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதுபோல ஒரு பாடலில் மொஹரம் பண்டிகையின்போது இஸ்லாமியப் பெருமக்கள் தங்கள் மார்பில் அடித்துக்கொள்வதைக் காட்சியாக அமைத்திருக்கிறார் டைரக்டர் அனீஸ். அந்தக் காட்சியை மட்டும் நீக்கச் சொல்கிறார்கள். உண்மையில் நிகழும் சம்பிரதாயத்தை, படத்தில் காட்சியாக வைப்பதில் என்ன தவறு? எல்லா காட்சிகளையும் கவனமாக பார்த்துவிட்டுத்தானே சென்சார் போர்டு யு சர்ட்டிஃபிகேட் கொடுத்து இருக்கிறது?

எல்லா முஸ்லிம் மக்களும் ரசித்து லயித்து பார்க்க வேண்டிய படம். இப்போது ரமலான் நோன்பு வர இருப்பதால் 'திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தை வெளியிடும் திட்டம் இப்போதைக்கு இல்லை. ரமலான் நோன்பு முடிந்த பிறகு  எல்லா இஸ்லாம் பெருமக்களும் பார்த்து மகிழ்வதற்காக பட ரிலீஸைத் தள்ளிவைத்து இருக்கிறோம்'' என்று விளக்கம் சொன்னார்.

கோர்ட் என்ன தீர்ப்பு தரப்போகிறதோ?

- எம்.குணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு