Published:Updated:

'முதலில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்'- கொந்தளித்த பெண் தொழிலாளர்கள்

தி.ஜெயப்பிரகாஷ்
'முதலில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்'- கொந்தளித்த பெண் தொழிலாளர்கள்
'முதலில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்'- கொந்தளித்த பெண் தொழிலாளர்கள்

திருப்பூரில் புதியதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி, பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கடுமையான வெயிலிலும் சளைக்காமல், பொதுமக்களும் நூற்றுக்கணக்கான பெண்களும் டாஸ்மாக் கடையை முற்றுகையையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

'தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்' என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் அதிகாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். மாநில அரசுக்கு பெரும் வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை நெடுஞ்சாலைகளிலிருந்து அகற்றவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், அங்கு அகற்றப்பட்ட மதுக்கடைகளை ஊர் பகுதிகளுக்குள் தமிழக அரசு திறந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி மதுக்கடைகளுக்கு எதிரான மக்கள் புரட்சியில் முன்னிலை வகித்து, நாள்தோறும் டாஸ்மாக் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, மாவட்ட நிர்வாகத்தையே ஸ்தம்பிக்கவைத்தனர் திருப்பூர் மக்கள். கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவரும் டாஸ்மாக் போராட்டம், இன்றளவும் ஓய்ந்தபாடில்லை. அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, இன்று பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சுண்டமேடு எனும் பகுதியைச் சேர்ந்த ஜவகர் நகரில், நேற்றைக்கு முன்தினம் புதியதாக அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டது. கடை திறக்கப்பட்ட அன்றைய தினம் முதற்கொண்டே, அந்தப் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு இடையூறுகள் ஏற்படத்  தொடங்கியுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும்  பெண்கள், தங்களின் வேலை நேரம் முடிந்து மாலை வேளைகளில் அல்லது இரவு நேரங்களில் வீடு திரும்புகையில், மது அருந்திய நபர்களால் தொல்லைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். குடித்துவிட்டு சாலையில் அநாகரிகமான செயல்களில் ஈடுபடும் போதை ஆசாமிகளால், கடந்த இரண்டு நாள்களில் மட்டும் இந்தப் பகுதி பெண்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டிருக்கின்றன.

பல மாதங்களாகவே இந்தப் பகுதியில் சரியான தெருவிளக்கு வசதி இல்லை. மாலை நேரத்துக்குப் பிறகு பொதுமக்கள் நடமாட முடியாத சூழ்நிலை நீடித்துவந்தது. இந்நிலையில், அரசு இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடையையும் திறந்து வைத்திருப்பதால், மேலும் இன்னல்களுக்கு ஆளாகும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எனவே, எங்கள் பகுதியில் வசிக்கும் பெண்களின் நலனில் அக்கறைகொண்டு, புதியதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சில மணி நேரம் நீடித்த போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பேசிய மக்கள், "இந்தப் பகுதியில், டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, ஏற்கெனவே திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தோம்.  ஆனால், அதைக் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகமும் டாஸ்மாக் அதிகாரிகளும் இப்போது கடையைத் திறந்திருக்கிறார்கள். எனவே, புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றுவதோடு,  மக்களின் பாதுகாப்புக்கும் காவல்துறையினர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்" என்றனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வருவாய்த்துறையினர் வரவழைக்கப்பட்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் பேசிய திருப்பூர் தெற்கு துணை வட்டாட்சியர் முருகேசன், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூடுவதாகவும், பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, டாஸ்மாக் முற்றுகைப் போராட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.