Published:Updated:

கிரண்பேடிக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்!

ஜெ.முருகன்
கிரண்பேடிக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்!
கிரண்பேடிக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்!

துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி விவசாயிகளை முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

புதுச்சேரியில் கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அப்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் ரூபாய் 20 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று அந்தத் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது காங்கிரஸ் கட்சி. ஆட்சி அமைந்ததும் அதற்கான கோப்பைத் தயார் செய்து ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பி வைத்தது அமைச்சரவை. ஆனால், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்த கிரண் பேடி, அந்தக் கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். மத்திய அரசும் அனுமதி அளிக்காத நிலையில் அந்தக் கோப்பு கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யத் தடையாக இருக்கும் ஆளுநர் கிரண் பேடியைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த 27-ம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்திக்க டெல்லி சென்றுள்ள முதல்வர் நாராயணசாமி தலைமையிலான 5 அமைச்சர்களும் இன்று புதுச்சேரி விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். ஜந்தர் மந்தர் போராட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் நாராயணசாமி, “தனது அரசு விவசாயிகளுக்கு எப்போதும் துணையாக இருக்கும்” என்று கூறினார்.