Published:Updated:

குமரி மாவட்ட குளங்களைத் தூர்வாரக் கோரி போராட்டம்: பிரின்ஸ் எம்.எல்.ஏ.அறிவிப்பு  

த.ராம்
குமரி மாவட்ட குளங்களைத் தூர்வாரக் கோரி போராட்டம்: பிரின்ஸ் எம்.எல்.ஏ.அறிவிப்பு  
குமரி மாவட்ட குளங்களைத் தூர்வாரக் கோரி போராட்டம்: பிரின்ஸ் எம்.எல்.ஏ.அறிவிப்பு  

குமரிமாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் ஏ.வி.எம் சானலைத் தூர்வார வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தப் போவதாக பிரின்ஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும் போது, 'கன்னியாகுமரி மாவட்டத்தில் 5,500 குளங்கள் உள்ளன. ஆக்ரமிப்பு மற்றும் சாக்கடைகளால் குளங்களும் நீர்நிலைகளும் அழிந்து வருகின்றன. மாவட்ட நிர்வாகம் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் 1,054 குளங்களில் 400 குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதால் குளங்கள் ஆழமாகும். இதனால் மழைக்காலங்களில் விவசாயத்துக்குத் தேவையான நீர் கிடைப்பதுடன் நிலத்தடி நீரும் பெருகும். அனுமதிக்கப்பட்ட குளங்களில் விவசாயிகள் மண் எடுப்பதற்கு வருவாய் துறையினர் கெடுபிடி செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மனக் கவலையில் உள்ளனர்.

இந்த நிலையில் 300 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் குளங்களும் தூர்வாரப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான தொடக்க நிலைப் பணிகள் இன்னும் குமரியில் தொடங்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் நீரைத் தேக்கிவைக்க முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது. ஏ.வி.எம் கால்வாய் சாக்கடையாக மாறி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறிவிட்டது. ஏ.வி.எம் சானலையும் தூர்வார வேண்டும். இதற்காகப் பெரிய அளவில் போராட்டம் நடத்த இருக்கிறேன். முதல்கட்டமாக மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளைச் சந்தித்து வருகிறேன். இந்தச் சந்திப்பு முடிந்ததும் குமரிமாவட்ட குளங்களைத் தூர்வாரக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகளையும் பொதுமக்களையும் திரட்டி பெரிய போராட்டத்தை நடத்தவிருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.