Published:Updated:

பேச்சுவார்த்தை தோல்வி... போராட்டத்தை தீவிரப்படுத்த என்.எல்.சி தொழிற்சங்கங்கள் முடிவு..!

ஜெ.முருகன்
பேச்சுவார்த்தை தோல்வி... போராட்டத்தை தீவிரப்படுத்த என்.எல்.சி தொழிற்சங்கங்கள் முடிவு..!
பேச்சுவார்த்தை தோல்வி... போராட்டத்தை தீவிரப்படுத்த என்.எல்.சி தொழிற்சங்கங்கள் முடிவு..!

'போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூன்று பேருக்கு மீண்டும் பணி வழங்க முடியாது' என்று என்.எல்.சி நிர்வாகம் தெரிவித்ததால் முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

நெய்வேலி என்.எல்.சியில் பணிபுரியக்கூடிய ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பணி நாள்களை 26-ல் இருந்து 19 நாள்களாக குறைத்தது தொடர்பாக ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் ஏற்கெனவே வழங்கியபடி பணி நாள்கள் வழங்கப்படும் என நிர்வாகத் தரப்பில் உறுதியளித்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் பணிக்குச் சென்றனர். இந்நிலையில், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அந்தோனி, பூவராகவன், சங்கர் ஆகிய மூன்று தொழிலாளர்களையும் நிர்வாகம் அதிரடியாக பணி நீக்கம் செய்தது. இதையடுத்து, அந்த மூன்று தொழிலாளர்களுக்கும் பணியினை வழங்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் உள்ள உதவி தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதில் சிஐடியு, தொமுச, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கத்தினர் மற்றும் என்.எல்.சி நிர்வாகம் ஆகியோர் உதவி தொழிலாளர் ஆணையர் கணேசன் முன்னிலையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையின் போது பணி நீக்கம் செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கும்படி என்.எல்.சி நிர்வாகத்திற்கு உதவி தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டும் எனவும் தொழிற்சங்கத்தினருக்கு உத்தரவிட்டார்.

ஆனால் மூன்று பேர் பணி நீக்கம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில நிலுவையில் இருப்பதால் அவர்களைப் பணியில் சேர்க்க முடியாது என்று  என்.எல்.சி நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது. அதனால் இன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து நேய்வேலியில் கூடி முடிவெடுக்கப்படும் எனத் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.