Published:Updated:

'அடக்குமுறையால் போராட்டம் அடங்காது’: கொதிக்கும் மாணவி வளர்மதி!

'அடக்குமுறையால் போராட்டம் அடங்காது’: கொதிக்கும் மாணவி வளர்மதி!
'அடக்குமுறையால் போராட்டம் அடங்காது’: கொதிக்கும் மாணவி வளர்மதி!

’அரசின் அடக்குமுறைகள் ஒரு நாளும் என் போராட்டத்தை அடக்காது’ என ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் மாணவி வளர்மதி கூறியுள்ளார்.

'மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்ப்போம்... இயற்கையைக் காப்போம்’ என்ற வாசகங்களுடன் கூடிய துண்டுப் பிரசுரங்களை சேலத்தில் விநியோகித்த மாணவி வளர்மதியை, போலீஸார் கடந்த மாதம் கைதுசெய்தனர். ‘அவர் நக்சல் அமைப்புக்கு ஆள் சேர்க்கிறார்’ என்ற குற்றச்சாட்டையும் போலீஸார் சுமத்தினர். இதனால், வேலூர் பெண்கள் சிறையிலிருந்த மாணவி வளர்மதியை குண்டாஸ் சட்டத்தின் கீழ் போலீஸார் கைதுசெய்து கோவை சிறைக்கு மாற்றினர்.

இதைத்தொடர்ந்து, மாணவி வளர்மதியை அவரது பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்தது. மாணவி வளர்மதிக்கு ஆதரவாக பல அமைப்புகளும் தொடர்ந்து குரல்கொடுத்து வரும் வேளையில், நேற்று சென்னை பாரிமுனை அருகே உள்ள அறிவுரைக்கழகத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக மாணவி வளர்மதி அழைத்துவரப்பட்டார். அப்போது மாணவி வளர்மதி கூறுகையில், ‘விவசாயிகளைக் காப்பதற்காக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து வருகிறோம். இதுதொடர்பான எனது போராட்டங்கள் தொடரும். அரசின் அடக்குமுறைகள் ஒரு நாளும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாது’ என்றார்.