Published:Updated:

`விவசாயிகளுக்குத் துரோகம்!’- பத்ம விபூஷண் விருதைத் திருப்பியளித்த பஞ்சாப் முன்னாள் முதல்வர்

பிரகாஷ் சிங் பாதல்
பிரகாஷ் சிங் பாதல்

`விவசாயிகள், தங்கள் உயிரைப் பணயம்வைத்துப் போராடிவருகின்றனர். அவ்வாறு போராடிவருபவர்களுக்கு மத்திய அரசு, பெரும் துரோகத்தை இழைத்திருக்கிறது’ - பிரகாஷ் சிங் பாதல்

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்களால், தங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்று கூறி விவசாயிகள் `டெல்லி சலோ’ என்ற பெயரில் போராட்டம் நடத்திவருகின்றனர். பஞ்சாப், ஹரியானாவிலிருந்து டெல்லி வரை பேரணியாகச் சென்று, கடும் மழை, குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையின் தேசிய நெடுஞ்சாலையில் போராடிவருகின்றனர்.

கடந்த எட்டு நாள்களாகத் தொடரும் போராட்டத்தால் மத்திய அரசு, விவசாயப் பிரதிநிதிகள் சிலரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால், பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படாததால், விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Manish Swarup

தேசிய நெடுஞ்சாலையில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் பலர் பஞ்சாப், ஹரியானாவிலிருந்து டெல்லி செல்லத் தயாராகிவருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் மத்திய அரசின் விருதுகளைத் திருப்பியளித்துவருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்: வீட்டுக்கொரு போராளி; விருதுகளைத் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்!

இந்தநிலையில், பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், ஷிரோமணி அகாலி தளத்தின் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (92) , விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். மத்திய அரசு, அவர்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், 2015-ம் ஆண்டு மத்திய அரசு, தனக்கு வழங்கிய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதைத் திருப்பியளிப்பதாக அறிவித்தார்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இது தொர்டபாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``விவசாயிகள் உயிரை பணயம்வைத்துப் போராடிவருகிறார்கள். போராடிவருபவர்களுக்கு மத்திய அரசு, பெரும் துரோகத்தை இழைத்திருக்கிறது. இந்தச் செயல் என்னை மிகவும் வருத்தமைடையச் செய்திருக்கிறது. அதனால், மத்திய பா.ஜ.க அரசின் செயலை எதிர்க்கும்விதமாக, மத்திய அரசு எனக்கு வழங்கிய `பத்ம விபூஷண்’ விருதைத் திருப்பியளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இவரின் ஷிரோமணி அகாலி தளம் கட்சி, கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், பா.ஜ.க உடனான கூட்டணியையும் அந்தக் கட்சி முறித்துக்கொண்டது. இவர் பஞ்சாப் மாநில முதல்வராக ஐந்து முறை பதவிவகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநில ராஜ்ய சபா எம்.பி-யான சுக்தேவ் சிங், தனது பத்ம பூஷண் விருதையும், ஒலிம்பிக் ஹாக்கி விளையாட்டு வீரரான சஜ்ஜன் சிங் சீமா தனது அர்ஜுனா விருதையும் திருப்பியளித்திருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு