Published:Updated:

``ஈஸ்வர் அல்லா தேரே நாம்!’’ - குடியுரிமை திருத்தத்துக்கு எதிராக வள்ளுவர் கோட்டத்தில் திரண்ட சென்னை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குடியுரிமை திருத்த எதிர்ப்பு
குடியுரிமை திருத்த எதிர்ப்பு

மதச்சார்பற்ற நாடு என 1950-ல் அரசியல் சாசனத்தின் வழியாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே இங்கே அண்டை வீடுகள் மதங்களைக் கடந்த, ரத்த உறவுகளைக் கடந்த நண்பர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

"நாங்க எல்லாம் அம்பேத்கர்

நாங்க எல்லாம் திப்புடா

நாங்க எல்லாம் பெரியாரு

அதக் கேட்க நீ யாரு

பி.ஜே.பியே வெளியேறு,

இன்குலாப் ஜிந்தாபாத்..."

மத்தளத்தின் சத்தத்தினிடையே மாணவர்களின் இந்தக் கோஷம் கேட்க, குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்தது. இத்தனைக்கும் சென்னை காவல்துறை அனுமதி மறுத்த போராட்டம். அனுமதி தரவில்லை என்பதற்காக நாங்கள் அஞ்சமாட்டோம் என தலைநிமிர்ந்தபடி நின்றிருந்தது தமிழர் கூட்டம். ஒருபக்கம் பொதுமேடையில் வைக்கப்பட்டிருந்த மைக்கில் அனைவரும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான தங்களுடைய போராட்டக் குரலைப் பதிவு செய்து கொண்டிருந்தார்கள்.

மற்றொரு பக்கம் மாணவர்கள் கூட்டம்

"மோடி டவுன் டவுன்

அமித் ஷா டவுன் டவுன்"

குடியுரிமை திருத்த எதிர்ப்பு
குடியுரிமை திருத்த எதிர்ப்பு

என்று தொண்டைக் குரல் வற்றுவதுகூடப் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாகக் கோஷம் போட்டுக்கொண்டிருந்தார்கள். 

``எங்கள் மக்களை வெளியேறச் சொல்ல நீ யாரு?" எனக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய ஒவ்வொருவரும் மதங்களைக் கடந்து ஆதர்சமாக மனிதர்களை அணைத்துக்கொண்டது அவர்களின் சொற்களில் தெரிந்தது. இடையிடையே, இந்தியில் `ஆசாதி' கோஷங்கள் ஒலிக்க, போராட்டத்தில் பங்கெடுத்த சென்னைப் பல்கலைக்கழக மாணவர் வளர்மதி எழுந்து, ``இந்தித் திணிப்பை எதிர்க்கும் அதே தமிழகம்தான் இன்று இந்தியில் உங்களுக்கு எதிராகப் போராடுகிறது. உங்களையும் மக்களைப் பிளவுபடுத்தும் உங்கள் சட்டப் பிரிவுகளையும் எதிர்க்க இந்தி என்ன சைனீஸ் கூடக் கற்றுக்கொள்ளுவோம்" என்றதும் கூட்டத்தில் அத்தனை ஆரவார அலை.

குடியுரிமை திருத்த எதிர்ப்பு
குடியுரிமை திருத்த எதிர்ப்பு

கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா,

"ஈஸ்வர அல்லா தேரே நாம்,

சபுகோ சன்மதி தே பகவான்"

எனப் பாடவும் மொத்த மக்களும், ``ஈஸ்வர அல்லா தேரே நாம்..." என அவரைத் தொடர்ந்து பாடத் தொடங்கினார்கள்.

குடியுரிமை திருத்த எதிர்ப்பு
குடியுரிமை திருத்த எதிர்ப்பு

பி.யூ.சி.எல் அமைப்பின் சுரேஷ்,

``எங்கள் மக்களை அச்சப்படுத்திய மோடிக்கு நன்றி,

எங்களைப் பிளவுபடுத்த நினைத்த அமித் ஷாவுக்கு நன்றி

உங்களால்தான் இன்று நாங்கள் அச்சம் விடுத்துக் கூடியிருக்கிறோம்

உங்களால்தான் நாங்கள் ஒன்றுபட்டுப் போராடுகிறோம்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மதச்சார்பற்ற நாடு என 1950-ம் ஆண்டில் அரசியல் சாசனத்தின் வழியாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே இங்கே அண்டை வீடுகள் மதங்களைக் கடந்த, ரத்த உறவுகளைக் கடந்த நண்பர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் அந்தப் போராட்டக் கூட்டத்தில் தென்பட்ட முகங்களும் அதன் குரல்களும்.

``எங்களுக்காகப் போராட வந்திருக்கீங்க, களைப்பா இருக்கும். இந்தாங்க பிஸ்கட், சாப்பிடுங்க!"
குடியுரிமை திருத்த எதிர்ப்பு
குடியுரிமை திருத்த எதிர்ப்பு

கறுப்புநிற புர்கா அணிந்த பெண் ஒருவரும் போராட்டத்துக்காகவே தலையில் துப்பட்டாவால் போர்த்தியபடி அமர்ந்திருந்த பெண் ஒருவரும் களத்தின் நடுவே தேநீர் விற்றுக்கொண்டிருந்த முதியவரிடம் தேநீர் வாங்கிப் பருகியபடி சிநேகிதம் வளர்த்துக்கொண்டிருந்தார்கள்.

``எங்களுக்காகப் போராட வந்திருக்கீங்க, களைப்பா இருக்கும். இந்தாங்க பிஸ்கட், சாப்பிடுங்க!" எனத் தான் கொண்டுவந்திருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை அனைவருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தார் முதிய பெண் ஒருவர்.

``வேதாளம் வீட்டு வாசல்வரை வந்துவிட்டது, விரட்ட வேண்டிய நேரத்தில் நடுநிலை என்று அமைதி காப்பதுதான் தேசத்துரோகம்"

சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுமி, மைக்கைப் பிடித்து "Long live unity, Long live, long live" எனவும் அதுவரை அமைதியாக இருந்த குரல்கள் கூட அந்தச் சுட்டியுடன் சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்தன. பத்திரிகையாளர்கள் என்றால் போராட்டங்களில் பங்கெடுக்கக் கூடாது என்றிருக்கும் பொதுவான எழுதப்படாத சட்டங்களைத் தகர்க்கும் வகையில் பல பத்திரிகை முகங்களும் போராட்டக் குரல்களில் தென்பட்டன. ``வேதாளம் வீட்டு வாசல்வரை வந்துவிட்டது, விரட்ட வேண்டிய நேரத்தில் நடுநிலை என்று அமைதி காப்பதுதான் தேசத்துரோகம்" என்றார் சக பத்திரிகையாளர்களில் ஒருவர்.

ஒவ்வொரு வருடமும் தவறாமல் ரம்ஜான் நோன்புக் கஞ்சி அவர்கள் வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்துவிடும். இந்த ரத்தத்தில் நோன்புக்கஞ்சி கலந்திருக்கிறது.
குடியுரிமை திருத்த எதிர்ப்பு
குடியுரிமை திருத்த எதிர்ப்பு

நம்மிடம் பேசிய 90ஸ் கிட்ஸ் ஒருவர், ``எங்கள் தாத்தா காலத்திலிருந்து இந்த ஊரில் இருக்கோம். அவரையும் அவரது அம்மாவையும் சொந்த ஊரிலிருந்து உறவினர்கள் துரத்திவிட்ட பின் கையில் ஒரு ரூபாய்க் கூட இல்லாமல் மெட்ராஸுக்கு வந்தவர்களுக்கு முதன்முதலில் ஆதரவுக்கரம் கொடுத்தது ஒரு இஸ்லாமியக் குடும்பம்தான். அந்த வீட்டின் பெண்மணி எங்கள் தாத்தாவுக்கும் அவரின் அம்மாவுக்கும் ஆதரவு கொடுத்து ஒருவேளை சாப்பாடு கொடுத்திருக்கவில்லையென்றால் இன்று எங்கள் குடும்பமே இந்தச் சென்னையில் அடையாளமில்லாமல் போயிருக்கும். அவர்கள் குடும்பமும் எங்கள் குடும்பமும் உறவினர்கள் கிடையாது. ஆனால், ரத்த உறவுகளையும் கடந்த 80 வருட நட்பு எங்களுடையது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் ரம்ஜான் நோன்புக் கஞ்சி அவர்கள் வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்துவிடும். இந்த ரத்தத்தில் நோன்புக்கஞ்சி கலந்திருக்கிறது. 80 வருட உறவை மதத்தைக் காரணம்காட்டிச் செல்லாது என அறிவிக்க 80 களில் வளர்ந்த கட்சிக்கு என்ன உரிமை இருக்கிறது " என்றார்.

``பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என வள்ளுவரின் சொற்களுக்கே சாட்சியாக நிகழ்ந்துகொண்டிருந்த இவை அத்தனையும் கவனித்தபடி ஒளி வீசிக்கொண்டிருந்தது வள்ளுவர் கோட்டம்.

CAA, NPR, NRC மூன்றையும் பற்றித் தெரியுமா... இவற்றுக்கிடையிலான ஒற்றுமை, வேற்றுமை என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு