Published:Updated:

அரியலூர்: `நீட் தேர்வை நீக்கும் வரை போராடுவோம்!’ - அனிதாவின் சகோதரர் பட்டினிப் போராட்டம்

அனிதாவின் சகோதரர் மணிரத்னம்
அனிதாவின் சகோதரர் மணிரத்னம்

தமிழகத்தில் மாணவர்களின் உயிரைக் காவு வாங்கிக்கொண்டிருக்கும் நீட் தேர்வை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி `நீட்’ தேர்வுக்கு எதிராக அனிதாவின் சகோதரர் மணிரத்னம் அரியலூரில் இன்று பட்டினிப் போராட்டம் நடத்திவருகிறார்.

அரியலூர் மாவட்டம் குழுமூரில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி, தனது உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் நினைவாக நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நூலகத்தில் அனிதாவின் சிலை ஒன்றையும் அவரது சகோதரர் மணிரத்தினம் அமைத்திருக்கிறார். இந்தநிலையில் கடந்த வாரம் நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு பயத்தில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். குறிப்பாக ஓரே நாளில் மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து அனிதாவின் சகோதரர் நீட் தேர்வை நீக்க வலியுறுத்தி, அனிதாவின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் நூலகத்தில் இன்று ஒருநாள் பட்டினிப் போராட்டத்தை நடத்திவருகிறார். அவருடன் சில இளைஞர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

அனிதாவின் சகோதரர் மணிரத்னம்
அனிதாவின் சகோதரர் மணிரத்னம்

இது குறித்து மணிரத்தினத்திடம் பேசினோம். ``நீட் தேர்வை நீக்க வலியுறுத்தி `மக்கள் பாதை’ என்ற அமைப்பினர் சென்னையில் ஆறு நாள்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். அந்த அமைப்பினருக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஒரு நாள் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறேன். கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக அனிதா களத்தில் இறங்கிப் போராடினார். ஆளும்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து மனு கொடுத்தார். உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டத்தையும் நடத்தினார்.

எதுவுமே பலனிக்காத நிலையில் டாக்டர் ஆக வேண்டும் என்ற தன் கனவு தகர்ந்து போனதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அதன் பிறகு தற்போதுவரை நீட் தேர்வுக்கு எதிராக 17 மாணவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

`நீட் ரிசல்ட் வரட்டும்... சூர்யா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்' - அண்ணாமலை ஆரூடம்

ஆனாலும், மத்திய அரசு தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. தட்டிக்கேட்க வேண்டிய தமிழக அரசும் வாய்மூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வேதனையின் உச்சம். நீட் தேர்வு என்பது 3,000 மாணவர்கள் சார்ந்த பிரச்னை இல்லை; சுகாதாரம் சார்ந்த பிரச்னை. நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிப்பவர்கள், கிராமப்புறங்களிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிவார்கள என்பது சந்தேகமே. அத்துடன், மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை குறையும். இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டமைப்பு சிதைக்கப்படும். மருத்துவம் முற்றிலுமாக கார்ப்பரேட்மயமாகிவிடும்.

கல்வி உரிமையைப் பாதுகாக்க வேண்டும், ஏழை மாணவனும் மருத்துவராக வேண்டும் என்பதால் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. 13 பேரின் உயிரைப் பறித்த நிலையிலும் நீட் தேர்வை நீக்கவில்லை. நீட்டுக்காக உயிர் நீத்த அனிதாவின் ஆன்மா இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாலேயே அதற்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.

அனிதாவின் சகோதரர் மணிரத்னம்
அனிதாவின் சகோதரர் மணிரத்னம்

இந்துப் பெண்கள் தாலி, மெட்டியை புனிதமாகக் கருதுபவர்கள். ஆனால், நீட் தேர்வுக்குச் சென்ற பெண்களின் தாலியையும் மெட்டியையும் கழற்றிய பிறகே அவர்களைத் தேர்வு எழுத அனுமதித்திருக்கிறார்கள். இதை எதிர்த்து தமிழக அரசு ஒரு வார்த்தைகூட கேள்வி எழுப்பவில்லை. இவை அனைத்தும் நீட் தொடர்பான அச்சத்தையும் சந்தேகத்தையும் அதிகப்படுத்தியுள்ளன. எனவே, நீட் தேர்வை நீக்க வலியுறுத்தி அனிதாவின் சிலை முன்பு பட்டினிப் போராட்டம் நடத்துகிறோம். நீட் தேர்வை நீக்கும் வரை அடுத்தடுத்த போராட்டங்களையும் நடத்தவிருக்கிறோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு