Published:Updated:

`ஒப்பந்த வேலை வேண்டாம்; பணிநிரந்தரம் செய்யுங்கள்!' -குடிநீர் வழங்கல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

16-ம் தேதி முதல் தூய்மைப் பணித் தொழிலாளர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

`ஒப்பந்த வேலை வேண்டாம்; பணிநிரந்தரம் செய்யுங்கள்!' -குடிநீர் வழங்கல் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

16-ம் தேதி முதல் தூய்மைப் பணித் தொழிலாளர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

Published:Updated:
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்ற வாரிய தலைமை அலுவலகத்தில், கடந்த 16-ம் தேதி முதல் தூய்மைப் பணித் தொழிலாளர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணித் தொழிலாளர்கள் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஐந்து வருடங்களுக்கும் மேலாகத் தூய்மைப் பணியாளர்களாகவும், ஓட்டுநர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருபவர்களை தற்போது தனியார் கான்ட்ராக்ட் அடிப்படையில் பணி புரியுமாறு சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் கூறியிருக்கிறது. இதனைக் கண்டித்தும், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரியும் 16-ம் தேதிமுதல் போராடி வந்தனர்.

போராட்டம்
போராட்டம்

இந்தப் போராட்டம் குறித்து நம்மிடம் பேசிய தூய்மைப்பணியாளர் பிரதீப், ``நான் இங்கு ஏழு வருசமா வேலை செய்யுறேன், என்னோட வேலை செய்யுறவங்களெல்லாம் பத்து பதினஞ்சு வருசத்துக்கு மேலாக வேலை செய்து வருகிறார்கள். ஆனால், இதுவரை யாரையும் பணிநிரந்தரப்படுத்தவில்லை. கழிவு நீர் அகற்றும்போது அங்குள்ள நச்சு வாயுக்களால் கண், காது போன்ற உறுப்புகள் பாதிக்க வாய்ப்புள்ளது. கழிவு நீர் அகற்றும் வண்டி செல்லாத இடத்தில் களப்பணியாளர்கள் கம்பி கட்டி கழிவுகளை அகற்ற நேரிடும், பெரும்பாலும் கழிவு நீர் அகற்ற களப்பணியாளர்கள் கழிவு நீர் குழியில் இறங்க வேண்டியிருக்கும். இருப்பினும் இரவு பகலாக குடும்பத்துக்காக வேலை செய்து வருகிறோம். ஆனால் எங்களை பணிநிரந்தரப்படுத்தவுமில்லாமல், தற்போது கான்ட்ராக்ட் முறையில வேலை செய்ய வேண்டும்'னு சொல்றாங்க. காண்ட்ராக்ட் முறையில் வேலை செய்தால் இருபதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் நான் பத்தொன்பதாயிரம் ரூபாய்தான் சம்பளம் வாங்க நேரிடும். கான்ட்ராக்ட் முறையில் ஞாயிற்றுக்கிழமைகூட எங்களுக்கு லீவு இருக்காது. ஞாயிற்றுக்கிழமைக்கு வேலைக்கு வரவில்லைனா சம்பளத்தில் 4 நாள்கள் சம்பளம் போயிரும். கான்ட்ராக்டில் வரக்கூடிய சம்பளத்தைவைத்து குடும்பத்தை ஓட்டுவது கஷ்டம். அதனால், வாரியத்திடம் வாங்கும் சம்பளத்துடன் பணிநிரந்தரப்படுத்தினால் போதுமானது" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து ஸ்ரீராம் (சோசலிச தொழிலாளர் மையம்) பேசுகையில், ``சென்னை வெள்ளம், மழைக்காலங்களில் தூய்மைப்பணியாளர்களான இவர்கள் 8 மணி நேரத்துக்கும் மேலாக இரவு பகலாக வேலை செய்கிறார்கள். இதற்கென தனி ஊதியம் கிடையாது, 8 மணி நேரத்துக்கு மேலாக வேலை செய்வதற்குப் பதிலாக ஞாயிறுகளில் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். தற்காலிகமாக வேலை செய்யும் இந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடையோ, அடையாள அட்டையோ கொடுக்கப்படவில்லை.

நிரந்தரப்பணியாளர்களுக்கு உள்ளது போல இவர்களுக்கு மாத சம்பளமோ, பி.எஃப் உள்ளிட்டவையெல்லாம் கிடையாது. இதனால் அவர்கள் குடும்பத்தில் உள்ள கல்வி, மருத்துவச் செலவுகளைச் சமாளிப்பது தொழிலாளர்களுக்குச் சிரமமாக இருக்கிறது. இந்நிலையில், கான்ட்ராக்ட் முறையில் இனி தொழிலாளர்கள் வேலை செய்யவேண்டும் என்று நிர்வாகம் சொல்கிறது. இந்த லேபர் கான்ட்ராக்ட் முறையில் 120 காண்ட்ராக்டர்கள் உள்ளனர். கான்ட்ராக்ட் முறையில் வேலை செய்தால் தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலை இன்னும் மோசமாகிவிடுமோ என்று அச்சப்படுகின்றனர். பணி நிரந்தரப்படுத்த பரிந்துரைக்குமாறு தி.மு.க எம்.எல்.ஏ எழிலன், மகளிரணித் தலைவி கனிமொழி உள்ளிட்டவர்களுக்கு மனு கொடுத்துள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று நிர்வாகம் பணி நிரந்தரப்படுத்தினால் அவர்களுக்கும் போதுமான ஊதிய உயர்வு இருக்கும். பி.எஃப் உள்ளிட்டவையும் இருக்கும். தொழிலாளர்களால் ஓரளவு பொருளாதார சிக்கலைச் சமாளிக்க முடியும்" என்றார்.

எழிலன்
எழிலன்

இது குறித்து மருத்துவரும், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எழிலனிடம் பேசினோம். ``சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்ற வாரியத்தில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்கள் என்னிடம் மட்டுமல்லாமல் தொகுதி வாரியாக பல சட்டமன்ற உறுப்பினரிடம் மனு கொடுத்துள்ளனர். நான் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு அவர்களிடம் பரிந்துரை செய்துள்ளேன். தமிழக அரசின் நிதி அமைச்சகமும், நகராட்சித் துறையும் கலந்தாலோசித்து முடிவெடுக்கும். அரசின் நிதி போதாமை காரணமாகவே தொழிலாளர்களைப் பணி நிரந்தரப்படுத்துவதில் தாமதமாகிறது" என்றார்.

இதற்கிடையில், தொழிலாளர்கள் தங்களின் 10 நாள்கள் உள்ளிருப்பு போராட்டத்தைத் தற்காலிகமாக நேற்றோடு 25.5.2022 நிறுத்திக்கொண்டனர். இதுவரை ஆறாவது கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை இறுதியில் கோரிக்கைகளைப் பரிசீலிக்கிறோம் என்று நிர்வாகம் கூறியுள்ளதாகத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism