Published:Updated:

பல்கலைக்கழக வளாகத்தில் நுழைந்தது ஏன்? - சர்ச்சையும் டெல்லி போலீஸின் விளக்கமும் #JamiaProtest

ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த போலீஸார், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து டெல்லி போலீஸார் விளக்கமளித்திருக்கிறார்கள்.

டெல்லி போலீஸுக்கு எதிராகப் போராட்டம்
டெல்லி போலீஸுக்கு எதிராகப் போராட்டம் ( Twitter )

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான டெல்லி ஜேம்.எம்.இ பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீஸார், கண்ணீர்ப்புகை குண்டுவீசி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தினர். மேலும், அந்தப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த போலீஸார், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸாரைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரியும் டெல்லி போலீஸ் தலைமையகம் முன்பு நள்ளிரவில் கூடிய நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்
கைது செய்யப்பட்ட மாணவர்
AP

கைது செய்யப்பட்ட மாணவர்கள் கல்காஜி மற்றும் நியூ காலனி காவல்நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டதாகவும், காயமடைந்த சிலருக்கு மருத்துவ உதவியோ அல்லது அவர்களது வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கோ அனுமதி மறுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில், சம்பவம் நடந்த பகுதியில் பணியில் இருந்த தென்கிழக்கு டெல்லியின் காவல்துறை டி.சி.பி சின்மோய் பிஸ்வால், பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸார் நுழைந்தது ஏன் என விளக்கமளித்திருக்கிறார். இதுகுறித்து ஏ.என்.ஐயிடம் பேசிய அவர், ``போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் வன்முறையைக் கையிலெடுத்தார்கள். அவர்கள் நடத்திய கல்லெறித் தாக்குதலில் போலீஸார் 6 பேர் காயமடைந்தனர். அவர்களின் அடையாளம் இதுவரை தெரியவில்லை.

டி.சி.பி சின்மோய் பிஸ்வால்
டி.சி.பி சின்மோய் பிஸ்வால்
ANI

போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பின்னோக்கிச் செல்லவைப்பதுதான் எங்கள் முக்கிய நோக்கமாக இருந்தது. அப்படிச் செய்தால்தான் இந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியும். பல்கலைக்கழக மாணவர்களால் (ஜே.எம்.இ) எங்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது'' என்றார். போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினரா என்ற கேள்விக்கு, ``போலீஸார் எந்தத் துப்பாக்கிச் சூடும் நடத்தவில்லை. அதுதொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன'' என்றார்.

`மாணவர்கள்மீது தாக்குதல்; போராட்டம்; வன்முறை!' - நள்ளிரவில் போர்க்களமான டெல்லி #JamiaProtest

மேலும் அவர் கூறுகையில், ``போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் அப்பகுதியில் இருந்த மோட்டார் சைக்கிள்களுக்குத் தீவைத்ததுடன் போலீஸாரை நோக்கிக் கற்களை எறிந்து தாக்குதலும் நடத்தினர். இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். முழுமையான தகவல்களைப் பின்னரே அளிக்க முடியும்'' என்றார்.

டெல்லி போலீஸ்
டெல்லி போலீஸ்
ANI

ஜே.எம்.இ பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீஸார் நுழைந்தது ஏன் என்ற கேள்விக்கு, ``பல்கலைக்கழக வளாகம் சாலையின் இரண்டுபுறமும் அமைந்திருக்கிறது. போராட்டக்காரர்களை நாங்கள் பின்னோக்கித் தள்ளியபோது, அவர்களில் சிலர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தனர். மேலும், பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளிருந்து எங்கள் மீது கல்லெறியத் தொடங்கினர். எனவேதான், பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து நாங்கள் சோதனை நடத்தினோம்'' என்றார்.