Published:Updated:

விவசாயிகள் போராட்டம்: வீட்டுக்கொரு போராளி; விருதுகளைத் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்!

விவசாயிகளின் `டெல்லி சலோ’ போராட்டம்
விவசாயிகளின் `டெல்லி சலோ’ போராட்டம்

டெல்லி எல்லையில் விவசாயிகள் முற்றுகையிட்டிருக்கும் நிலையில், பஞ்சாப், ஹரியானா கிராமங்களிலிருந்து வீட்டுக்கொரு போராளியை டெல்லி நோக்கி அனுப்ப மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு விவசாய அமைப்பினர் கண்டனக் குரல்களை எழுப்பிவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பஞ்சாப், அதன் அண்டை மாநில விவசாய அமைப்பினர் வரலாறு காணாத வகையில் ஒன்று திரண்டு புதிய விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி வரை பேரணியாகச் சென்று போராட்டம் நடத்திவருகின்றனர்.

முதலில், டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த விவசாய அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு வழிமுறைகளை முன்னிறுத்தி, அதற்கு பதிலாக டெல்லி புராரி பகுதியிலுள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதியளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக் குழுவினர் டெல்லி எல்லையில், தேசிய நெடுஞ்சாலையிலேயே போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Rishi Lekhi

வீட்டுக்கொரு போராளி; வேகமெடுக்கும் போராட்டம்!

டெல்லி எல்லையில் விவசாயிகள் முற்றுகையிட்டிருக்கும் நிலையில், பஞ்சாப், ஹரியானா கிராமங்களிலிருந்து வீட்டுக்கொரு போராளியை டெல்லி நோக்கி அனுப்ப மக்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வீட்டுக்குத் திரும்ப மாட்டோம் என்று சூளுரைத்துள்ளனர் விவசாயிகள்.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்குத் தேவையான மருந்துகள், உணவுப்பொருள்கள் உட்பட பிற அத்தியாவசியப் பொருள்களை மக்களிடமிருந்து சேகரித்து அவற்றை டிராக்டர்களின் மூலம் டெல்லிக்குக் கொண்டு செல்ல தயாராகியிருக்கிறார்கள்.

விருதுகளையும் பதக்கங்களையும் திருப்பியளிக்கும் பஞ்சாப் வீரர்கள்?!

டிசம்பர் மாதம், 5-ம் தேதிக்குள் மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என பஞ்சாப், ஹரியானா மாநில முன்னாள் விளையாட்டு வீரர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். அப்படித் திரும்பப் பெறாதபட்சத்தில், தங்களுக்கு அளிக்கப்பட்ட பதக்கங்களையும் விருதுகளையும் திருப்பியளிக்கத் திட்டமிட்டிருப்பதாக பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Manish Swarup

பாபா ராம்தேவ் குற்றச்சாட்டு!

இது குறித்து பேசிய பாபா ராம்தேவ், ``எல்லை மீறிச் சென்றுகொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும்விதமாக மத்திய அரசு, விவசாயச் சட்டங்கள் குறித்து மக்களுக்கு தெளிவான விளக்கத்தைக் கொடுக்காதது ஏன்... இதன் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைப்பது அரசின் கடமை.

விவசாயிகளின் போராட்டக்குழுவில் சில சமூக விரோதிகள் கலந்திருக்கிறார்கள். அவர்கள் போராட்டக்காரர்களைத் தவறான வழியில் வழிநடத்திச் செல்கிறார்கள்’’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

‘டெல்லி சலோ!’ - வேளாண் சட்டங்களுக்கு எதிராக வீறுகொண்டெழுந்த விவசாயிகள்

தேங்கிய சரக்குகள்; ரத்து செய்யப்பட்ட ரயில்கள்!

மாநில எல்லையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்திருப்பதால் பஞ்சாப் - டெல்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. விவசாயிகள் போராட்டம் வேகமெடுத்திருக்கும் நிலையில், இரு மாநிலங்களை இணைக்கும் மேலும் சில நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் டெல்லியின் `ஆசாத்பூர் மண்டி’யிலிருந்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்குச் சென்று சேர வேண்டிய காய்கறி மற்றும் பலசரக்குகள் சந்தையிலேயே பெரும் அளவில் தேங்கியிருப்பதாகக் கூறுகின்றனர். இதன் மூலம், டெல்லியிலும் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

போராட்டச் சூழலால் இன்று முதல் இயக்கப்படவிருந்த அமிர்தசரஸ் - அஜ்மீர் சிறப்பு ரயில் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

பேச்சுவார்த்தை வேண்டாம்; ரத்து செய்ய வேண்டும்!

விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக மத்திய அரசு விவசாய அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலரைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால், அதற்கு உடன்படாத விவசாய அமைப்பினர், சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதே எங்கள் முதன்மையான கோரிக்கை என்று தெரிவித்திருக்கிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Manish Swarup

இதனால், சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் தடுக்க டெல்லி எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், விவசாயிகளின் போராட்டத்தை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு