Published:Updated:

10 அம்ச கோரிக்கை; ரூ.25,000 நிதியுதவி - முடிவுக்கு வந்தது காவலரின் 11 மணி நேரப் போராட்டம்

தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என டெல்லி காவலர்கள் நடத்திய போராட்டம் சுமார் 11 மணி நேரத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்தது.

காவலர்கள் போராட்டம்
காவலர்கள் போராட்டம் ( Twitter/@Supriya23bh )

டெல்லியில் உள்ள டிஸ் ஹஸாரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல், காவலருக்கும் வழக்கறிஞருக்கும் இடையே கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்னை நடந்துள்ளது. பின்னர் அந்த வழக்கறிஞரை சில போலீஸார் தனியாக அழைத்துச்சென்று அடித்துத் துன்புறுத்தியதாகவும், அவரை மீட்கப் பிற வழக்கறிஞர்கள் சென்றபோது வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காவலர்கள் போராட்டம்
காவலர்கள் போராட்டம்
ANI

ஆனால், காவலர்கள் தரப்பு இந்தத் துப்பாக்கிச்சூடு குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளனர். அன்றைய தினமே போலீஸ்காரர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஸ் ஹஸாரி நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். ஒருகட்டத்தில் போராட்டம் கலவரமாக மாற, போலீஸ் வாகனங்களுக்குத் தீவைப்பு, வாகனக் கண்ணாடிகள் உடைப்பு போன்ற சம்பவங்களும் நடந்தன. இதில் 8 வழக்கறிஞர்களும் 20 காவலர்களும் படுகாயமடைந்துள்ளனர்.

சாதாரண பார்க்கிங் பஞ்சாயத்து! - டெல்லி நீதிமன்றத்தை அதிரவைத்த கலவரம்

சாதாரண பார்க்கிங் பிரச்னையாக ஆரம்பித்த போலீஸார்- வழக்கறிஞர்கள் மோதல் நேற்று உச்சத்தை எட்டியது. நேற்று காலை டெல்லி சாகெட் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் ஒரு காவலரை, வழக்கறிஞர் ஒருவர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வீடியோ போலீஸார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தவே, பிற்பகலில் ஆயிரக்கணக்கான டெல்லி போலீஸார் இணைந்து டெல்லி போலீஸ் தலைமை அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவலர்கள் போராட்டம்
காவலர்கள் போராட்டம்
Twitter/@Supriya23bh

போலீஸாரைத் தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீஸார் பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும் போன்ற பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆயிரக்கணக்கான காவலர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். ’ நாங்களும் மனிதர்கள்தான் ; காவலர்களைக் காப்பாற்றுங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும், மாலை நேரத்தில் மெழுகுவத்திகள் ஏந்தியபடியும் போராட்டம் நடத்தினர்.

சுமார் 11 மணி நேரமாகத் தொடர்ந்த போராட்டத்தினால் இந்தியத் தலைநகரமே ஸ்தம்பித்தது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேரில் சந்தித்த டெல்லி துணை கமிஷனர் தேவேஷ் ஸ்ரீவாஸ்தவா, ``உங்களின் அனைத்துக் கோரிக்கைகளும் பரிசீலனை செய்து ஏற்கப்படும், காவலர்களைத் தாக்கிய வழக்கறிஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் நடந்த கலவரத்தில் காயமடைந்த போலீஸாருக்கு உரிய சிகிச்சை வழங்கி அவர்களுக்கு ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக நடுநிலையான விசாரணை நடத்தப்படும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது எந்தத் துறை ரீதியிலான நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. அனைவரும் அமைதியாக கலைந்து செல்லுங்கள்” என உறுதியளித்தார். இதையடுத்து காவலர்கள் தங்களின் போராட்டத்தைத் திரும்பப்பெற்றனர்.

காவலர்கள் போராட்டம்
காவலர்கள் போராட்டம்
ANI

காவலர்களின் போராட்டம் தொடர்பாகப் பேசியுள்ள காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், “போலீஸ்காரர்கள் தினமும் பல பிரச்னைகளைச் சந்திக்கலாம். தற்போது அவர்கள் முன்வைத்து கோரிக்கைகள் நியாயமாக இருக்கலாம். ஆனால், போலீஸ்காரர்கள் தங்களின் கோரிக்கைகளைச் சரியான முறையில் எழுப்ப வேண்டும். பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய அவர்களே தங்கள் கடமையை விட்டுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது முறையல்ல” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சாகெட், டிஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் போலீஸாரை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.