Published:Updated:

விவசாயிகள் போராட்டம்: ரிஹானா முதல் சித்தார்த் வரை.. ட்விட்டர் கருத்து மோதல்! - இதுவரை நடந்தது என்ன?

`விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் சர்வதேச சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் பெயரை முதல் தகவல் அறிக்கையில் டெல்லி காவல்துறை சேர்த்ததாக வெளியான தகவலால் டெல்லி நகர காவல்துறை சமூக ஊடகங்களில் கடுமையாக கேலிக்கும், விமர்சனத்துக்கும் உள்ளானது.'

`உங்கள் ஹீரோக்களை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்’ என நடிகர் சித்தார்த் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

விவசாயிகள் போராட்டத்துக்கு வெளிநாட்டுப் பிரபலங்கள் தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்த கருத்து தொடர்பாக அவர் இவ்வாறாகப் பதிவிட்டிருக்கிறார்.

`விவசாயிகள் தொடர்பான பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்’ என பாலிவுட் கிரிக்கெட் பிரபலங்கள் ட்வீட் செய்திருந்தனர்.

இர்ஃபான் பதான்
இர்ஃபான் பதான்

இந்தநிலையில், இர்ஃபான் பதான், அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல்துறை அதிகாரியால் கொலை செய்யப்பட்டபோது, இந்தியா உரிய நேரத்தில் தனது வருத்தத்தைத் தெரிவித்தது. #JustSaying என்று நேற்று ட்வீட் செய்திருந்தார்.

ட்விட்டரில் ஆதரவும் எதிர்ப்பும்..!

இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாக மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிவருகின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம் இரண்டு மாதங்களைக் கடந்துவிட்டது.

குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் நடக்கும் பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

ரிஹானா
ரிஹானா

இந்தச் சூழலில், பாப் பாடகி ரிஹானா இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அவர் பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், ``ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ரிஹானா 100 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களைக்கொண்ட பிரபலம் என்பதால், சில மணி நேரங்களில் அந்த ட்வீட் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

அவரையடுத்து சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க், நடிகை மியா கலிஃபா உள்ளிட்டோர் விவசாயிகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.

வழக்கும் ட்வீட்டும்..!

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸின் சகோதரி மகள் மீனா ஹாரிஸும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பகிர்ந்திருந்தார்.

கிரெட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல் துறை வழக்கு பதிந்திருப்பதாக முதலில் ஒரு செய்தி பரவியது. ஆனால், அதை டெல்லி காவல்துறை மறுத்துவிட்டது.

கிரெட்டா தன்பெர்க்
கிரெட்டா தன்பெர்க்

இந்தச் சூழலில் கிரெட்டா மீண்டும் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில், ``விவசாயிகளின் அமைதிவழிப் போராட்டத்தை இப்போதும் ஆதரிக்கிறேன். வெறுப்பு விமர்சனம், மிரட்டல்கள், மனித உரிமை மீறல்கள் எதையும் மாற்றி விடாது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

டாப்ஸி கருத்து!

`ஒரே ஒரு ட்வீட் உங்களின் ஒற்றுமையைக் குலைக்கிறது என்றால், ஒரு ஜோக் உங்கள் நம்பிக்கையைக் குலைக்கிறது என்றால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மதத்தைப் புண்படுத்துகிறது என்றால், நீங்கள்தான் உங்களின் நம்பிக்கைகளை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.”
நடிகை டாப்ஸி
டாப்ஸி
டாப்ஸி
twitter |PIB in Uttarakhand

எதிர்ப்பு..!

இந்தியாவில் சச்சின், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஷிகார் தவான், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், கங்கனா ரணாவத், பிடி.உஷா உள்ளிட்ட விளையாட்டு மற்றும் பாலிவுட் பிரபலங்கள் IndiaTogether என்ற ஹேஷ்டேகில், ட்விட்டரில் தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர்.

அதில், `இந்தியாவின் பிரச்னையை நாங்களே சரி செய்து கொள்கிறோம். வெளிநாட்டினர் யாரும் தலையிட வேண்டாம்’ என்ற தொனியில் கருத்து தெரிவித்திருந்தனர்.

சச்சின் பகிர்ந்திருந்த ட்வீட்டில், “இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளிநாட்டினர் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால், பங்கேற்பாளர்களாக இருக்கக் கூடாது. இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும். அவர்கள் இந்தியாவுக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்" எனப் பதிவிட்டிருந்தார்.

சித்தார்த், இர்ஃபான் பதான்!

இந்தநிலையில்தான், ட்விட்டரில் நடிகர் சித்தார்த்தும், கிரிக்கெட்டர் இர்ஃபான் பதானும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சித்தார்த்
சித்தார்த்

``உங்கள் ஹீரோக்களை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள் அல்லது அவர்கள் விழுவதைப் பாருங்கள். கல்வி, இரக்கம், நேர்மை ஆகியவை ஒரு நாளைக் காப்பாற்றியிருக்கலாம். அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் மற்றவர்களுடன் பப்பட் ஷோவிலுள்ள பொம்மைகளைப்போல் ஒன்றுகூடி ஒரே மாதிரி ஊதுகிறார்கள். அப்படித்தான் இந்த பிரசாரமும்” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

வெளிநாட்டு சக்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் சர்வதேச சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் பெயரை முதல் தகவல் அறிக்கையில் டெல்லி காவல்துறை சேர்த்ததாக வெளியான தகவலால் டெல்லி நகர காவல்துறை சமூக ஊடகங்களில் கடுமையாக கேலிக்கும், விமர்சனத்துக்கும் உள்ளானது.

இந்தநிலையில், இந்த விவகாரத்தில் எவருடைய பெயரையும் குறிப்பிடாமல் டெல்லி நகர காவல்துறையின் சைபர் பிரிவு வழக்கு பதிவு செய்திருப்பதாக, சிறப்பு ஆணையர் பிரவீர் ரஞ்சன் செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தினார்.

சமீபகாலமாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஓர் ஆவணம் பகிரப்பட்டுவருகிறது. அதில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் வழிமுறைகள் ஊக்குவிக்கப்படும் வகையில் இருப்பதால், அதன் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருக்கின்றனவா என்பது குறித்து விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பதாக பிரவீர் ரஞ்சன் தெரிவித்திருக்கிறார்.

அமித் ஷா, அஜித் தோவல் ஆலோசனை

இந்தநிலையில், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நேற்று (வியாழக்கிழமை) மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அஜித் தோவால் அமித் ஷாவை சந்தித்த அதே சமயம், டெல்லி நகர காவல்துறை ஆணையர் ஸ்ரீவாஸ்தவாவும் நாடாளுமன்றத்திலுள்ள உள்துறை அமைச்சர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார் என்பது கூடுதல் தகவல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு