Election bannerElection banner
Published:Updated:

டெல்லி: `உங்கள் போராட்டம்... எனது போராட்டம்!’ - விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த மம்தா

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளிடம் தொலைபேசியில் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி.

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக `டெல்லி சலோ' என்ற பெயரில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியிருக்கிறது. டெல்லி எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் மூலம் விவசாயிகளுடன் அவர் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
Manish Swarup

விவசாயிகளுடன் பேசிய மம்தா பானர்ஜி, ``உங்கள் போராட்டத்துக்கு நன்றி. உங்களின் போராட்டம் எனது போராட்டம்" என்று கூறியிருக்கிறார். மேலும், ``சிங்குரில் விவசாயிகளின் நிலத்தை பலவந்தமாகக் கைப்பற்ற முயன்றபோது நான் 26 நாள்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டேன். அதனால்தான் உங்களின் போராட்டம், எனது போராட்டம் என்று கூறினேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால், உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறேன்" என்றும் விவசாயிகளிடம் மம்தா கூறியிருக்கிறார்.

டெல்லி: `நாங்களே கொண்டுவந்திருக்கிறோம்!’- அரசு வழங்கிய டீ, உணவை ஏற்க மறுத்த விவசாயிகள்

தொடர்ந்து பேசிய மம்தா,``மக்கள் வாக்களித்துவிட்டால், எதுவும் செய்யலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நாட்டை விற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். மோடி, நாட்டை விற்பதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. அதனால்தான் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு எதிராகப் போராடவேண்டும்" என்றும் விவசாயிகளிடம் கூறியிருக்கிறார்.

ஆதரவு தெரிவித்த மம்தாவுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள் ``உங்களின் ஆதரவு மிகவும் மதிப்புமிக்கது. மம்தா எப்போதுமே இந்தியாவுக்காக உழைப்பவர், சிறுபான்மை மக்களுக்காக உழைப்பவர் என்று எங்களுக்குத் தெரியும்" என்று கூறியிருக்கிறார்கள்.

அதே நேரம், மேற்கு வங்கத்தில் நடைபெறும் பிரச்னைகளை திசை திருப்பவே மம்தா விவசாயிகளுக்கு திடீர் ஆதரவு தெரிவித்திருக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு