Published:Updated:

`தண்ணீர் வழங்குவதில் மோசடி!’-பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறிய சிவகங்கை விவசாயிகள்

மேலூர் டிவிஷனிலிருந்து சிவகங்கையைப் பிரிக்க வேண்டும். மேலூரிலுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்பந்தத்தை மீறுகிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம் ( ஈ.ஜெ.நந்தகுமார் )

சிவகங்கை மாவட்ட பாசனத்துக்குப் பெரியாறு-வைகையிலிருந்து தண்ணீர் தராமல் ஏமாற்றும் அதிகாரிகளைக் கண்டித்து சிவகங்கை மாவட்ட விவசாயிகள் மதுரையிலுள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்த வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
ஈ.ஜெ.நந்தகுமார்

சிவகங்கையின் முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் உட்பட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் தலைமையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு வந்திருந்தார்கள். மதுரைக் கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்துக்குள் நுழைய வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள்.

இதனால் சொக்கிகுளம் செல்லும் முக்கிய சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதன்பின் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்துக்குள் நுழைந்த விவசாயிகள் அங்குள்ள பென்னி குயிக் சிலை முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
ஈ.ஜெ.நந்தகுமார்

இப்போராட்டம் பற்றி நம்மிடம் பேசிய விவசாயிகள், ''பத்தாண்டுகளுக்கு மேலாக எங்கள் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் அதிகாரிகள் வஞ்சிக்கிறார்கள். மேலூர் டிவிஷனுக்கு இருபோகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்போது, எங்கள் மாவட்டத்துக்கு ஒருபோக சாகுபடிக்குத் தண்ணீர் வழங்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. ஆனால், கடந்த பல வருடங்களாக தண்ணீர் திறந்து விடுவதாகச் சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இதற்காகப் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், ஒவ்வொரு முறையும் எங்கள் கோரிக்கையைக் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடுவார்கள். ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள். அதனால், இந்தமுறை இதை விடுவதாக இல்லை. தொடர் போராட்டம் நடத்த முடிவெடுத்துவிட்டோம். முக்கிய ஆயக்கட்டுதாரர்களான எங்களுக்கு நியாயமாக தண்ணீர் வழங்குவதில் அதிகாரிகள் மோசடி செய்கிறார்கள்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
ஈ.ஜெ.நந்தகுமார்

மேலூர் டிவிஷனிலிருந்து சிவகங்கையைப் பிரிக்க வேண்டும். மேலூரிலுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒப்பந்தத்தை மீறுகிறார்கள். பெரியாறு-வைகை நீர் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் 6036 ஹெக்டேர் பாசன வசதி பெற வேண்டும். கடந்த மாதம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் உறுதியளித்ததை நம்பி விவசாயிகள் நடவு செய்து விட்டார்கள். ஆனால், தண்ணீர் விடவில்லை. எங்களுக்குத் தீர்வு கிடைக்காமல் இங்கிருந்து போக மாட்டோம்'' என்றனர். அதிகாரிகள் அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.