டெல்லி:`திசைமாறிவிட்டது; நாங்கள் இதற்கு வரவில்லை!’ - போராட்டத்தை முடித்துக்கொண்ட 2 விவசாய சங்கங்கள்

சுமார் 60 நாள்கள் வரை அமைதியான முறையில் நடைபெற்ற இந்தப் போராட்டம், நேற்றைய டிராக்டர் பேரணியின்போது கலவரமானதைத் தொடர்ந்து, பல்வேறு விவசாய சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
டெல்லியில் 60 நாள்களுக்கு மேலாக நடைபெற்றுவருகிறது வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம். நேற்று டிராக்டர் பேரணியின்போது, காவல்துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து டெல்லியின் முக்கியச் சாலைகளில் வன்முறை வெடித்தது.

சுமார் 60 நாள்கள் வரை அமைதியான முறையில் நடைபெற்ற இந்தப் போராட்டம், நேற்றைய டிராக்டர் பேரணியின்போது கலவரமானதைத் தொடர்ந்து, பல்வேறு விவசாய சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்தநிலையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சில விவசாய சங்கங்கள் போராட்டத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றன.
ராஷ்ட்ரியா கிசான் மஸ்தூர் சங்கதன், அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக்குழுவைச் சேர்ந்த வி.எம்.சிங், ``போராட்டத்தை வேறு திசையில் செலுத்த நினைப்பவர்களுடன் தொடர்ந்து போராட முடியாது. அவர்களுக்கு எங்களது வாழ்த்துகள். ஆனால், நானும் ராஷ்ட்ரியா கிசான் மஸ்தூர் சங்கதன் அமைப்பும் போராட்டத்திலிருந்து விலகிக்கொள்கிறோம்.
இது ராஷ்ட்ரிய கிசான் மஸ்தூர் சங்கதனின் முடிவுதானே தவிர, அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக்குழுவின் முடிவு அல்ல. இது வி.எம்.சிங், ராஷ்ட்ரியா கிசான் மஸ்தூர் சங்கதன் மற்றும் அதன் அனைத்து நிர்வாகிகளின் முடிவு. நாங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்வதற்காக வந்தோம். வன்முறையில் ஈடுபட வரவில்லை. போராட்டத்தில் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்தநிலையில், சில்லா எல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய கிசான் யூனியனின் தலைவர், பிரதாப் சிங், ``டெல்லியில் நேற்று நடந்த சம்பவங்கள் என்னை மிகவும் காயப்படுத்திவிட்டன. 58 நாள்களாக நடைபெற்றுவந்த போராட்டத்தை முடித்துக்கொள்கிறோம்” என்றார்.