Published:Updated:

`குறுஞ்செய்திகளுக்கு நன்றி!’ - #CAA போராட்டத்தால் வெளியேற்றப்பட்ட ஜெர்மன் மாணவர் நெகிழ்ச்சிப் பதிவு

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை சுமக்கும் அனைவருக்கும் எனது மரியாதையைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார், ஜெர்மன் மாணவர் ஜேக்கப் லிண்டெந்தால்.

ஜெர்மன் மாணவர்
ஜெர்மன் மாணவர்

சென்னை ஐ.ஐ.டி-யில் படித்து வந்த ஜெர்மனைச் சேர்ந்த மாணவர் ஜேக்கப் லிண்டெந்தால், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்டார். குடியேற்றத்துக்கான விதிமுறைகளை மீறியதாகக்கூறி அதிகாரிகள் அவரை நாட்டைவிட்டு வெளியேற்றிய சம்பவம் பரபரப்ப ஏற்படுத்தியது.

ஜெர்மன் மாணவர்
ஜெர்மன் மாணவர்

ஜெர்மன் மாணவர் ஜேக்கப் லிண்டெந்தால், சென்னை ஐ.ஐ.டி-யில் இயற்பியல் துறையில் முதுகலைப் பயின்று வந்தார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் தீவிரமாகப் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் லிண்டெந்தால் ``1933 முதல் 1945 வரை நாங்கள் அங்கே இருந்தோம் (ஜெர்மனியில் அப்போதைய ஆட்சியைக் குறிக்கும் விதமாக), Uniformed criminals = Criminals" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையிலேந்தி போராட்டத்தில் கலந்துகொண்டார். இதனால், அதிகாரிகள் அவரை அழைத்து விசாரணை நடத்தி, `எழுத்துபூர்வமாகக் கடிதம் விரைவில் கிடைக்கும்; நீங்கள் தற்போது செல்லலாம்’ என்று கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அவர் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பினார்.

தன்னுடைய நாட்டைச் சென்றடைந்த ஜேக்கப் முகநூல் பக்கத்தில், ``நான் ஆஸ்டர்டாமில் பாதுகாப்பாக வந்து இறங்கினேன். விரைவில் என் குடும்பத்தினர் இருக்கும் நியூரம்பெர்க்கை சென்றடைவேன். உங்களின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய நன்றி. உங்களின் சட்ட ஆலோசனைகளுக்கும் விமானம் ஒருநாள் தாமதமானபோது தங்குவதற்கு இடம் அளித்ததற்கும், உங்களின் குறுஞ்செய்திகளுக்கும் என்னுடைய நன்றி. வீட்டுக்குச் செல்ல சில நாள்கள் ஆகும். பின்னர், இந்தப் பாதை என்னை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

This morning I landed in Amsterdam safely and will return to my family in Nuremberg soon. Thank you all for the huge...

Posted by Jakob Lindenthal on Wednesday, December 25, 2019

அரசியல் சுதந்திரத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் கோடிக்கணக்கான கண்கள் திறக்கப்பட வேண்டும்; குரல்கள் எழுப்பப்பட வேண்டும். இந்தியா மற்றும் உலகம் முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை சுமக்கும் அனைவருக்கும் எனது மரியாதையைத் தெரிவித்துக்கொள்கிறேன். நடந்து கொண்டிருக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்த கவலையை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாதவர்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். ஏனென்றால், அவர்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள்.

`CAA-வுக்கு எதிராக சென்னை ஐஐடி-யின் ஜெர்மன் மாணவர்!’- நாட்டைவிட்டு வெளியேறச் சொன்ன அதிகாரிகள்

மக்களின் உரிமைகள், நேர்மையான பிரதிநிதித்துவம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றுக்காக மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்றிணைவார்கள் என நம்புகிறேன். உங்களுடன் இணைந்து இருக்க ஒருவழியை நான் கண்டுபிடிக்கிறேன். தொடர்பிலேயே இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

ஜெர்மன் மாணவர்
ஜெர்மன் மாணவர்

லிண்டெந்தாலின் நெகிழ்ச்சியான பதிவுக்கு, ``நீங்கள் தைரியமானவர்; நாட்டின் சார்பாக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்” போன்ற கமென்டுகளால் ரிப்ளை செய்து வருகின்றனர் இந்திய நெட்டிசன்கள்.

`செக்யூரிட்டிகள், சி.சி.டி.வி கேமரா எல்லாம் எதற்கு?’ -நள்ளிரவில் அடைக்கப்பட்ட ஐ.ஐ.டி நுழைவுவாயில்