Published:Updated:

`பூட்ஸ் ஓசை; அலறல் சத்தங்கள்!' - போராட்ட இரவை விவரிக்கும் முசாபர்நகர் மக்கள் #CAA

உத்தரப்பிரதேசக் காவல்துறை
உத்தரப்பிரதேசக் காவல்துறை

இரவு முழுவதும் நான் இருந்த அறைக்கு பக்கத்திலிருந்து வந்த அலறல் சத்தங்கள் அச்சத்தைக் கொடுத்தன.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த போராட்டத்தில் 50,000 பேர் கலந்துகொண்டனர். மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அந்தப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மாலை 4.30 மணிக்குப் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போராட்டம்
போராட்டம்

போலீஸாரை நோக்கிப் போராட்டக்காரர்கள் கற்களை வீசியதால் தடியடி நடத்த வேண்டியிருந்தது என முசாபர்நகர் எஸ்.பி சாத்பல் அன்டீல் கூறியிருந்தார். மேலும், போராட்டத்தில் நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. ஆனால், போராட்டம் நடந்த பகுதியிலிருந்து நாட்டுத்துப்பாக்கிகளும் குண்டுகளும் கைப்பற்றியுள்ளோம் என்கிறது போலீஸ் தரப்பு. ஆனால், முசாபர்நகர் மக்களின் குரல்களோ வேறுவிதமாக இருக்கின்றன.

`போராட்டத்தில் புல்லட் வெஸ்டை துளைத்த குண்டு’ - பர்ஸ்ஸால் மறுபிறவி எடுத்த உ.பி காவலர்!

வெள்ளிக்கிழமை இரவு எங்களுக்கு எப்போதும் போல அமைதியாக இல்லை. அந்த பூட்ஸ் சத்தங்கள் இரவு முழுவதும் அச்சத்தைக் கொடுத்ததாக ஆங்கில நாளிதழிடம் முசாபர் நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். 75 வயதான ஹாஜி அன்வாரிலாஹி பேசும்போது,``என்னுடைய வீட்டுக்குள் நுழைந்த போலீஸார் என்னுடைய வாகனங்கள் மற்றும் இதரப் பொருள்களை அடித்து நொறுக்கினர். என்னால் இயல்பாக நடக்க முடியாது. லத்தியைக் கொண்டு வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கினர்.

உ.பி போலீஸார்
உ.பி போலீஸார்

எங்கள் வீட்டு திருமணத்துக்குப் பரிசாக வந்த ஃபிரிட்ஜை கூட அடித்து நொறுக்கினர். நான் போலீஸாரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டேன். இரவு முழுவதும் நான் இருந்த அறைக்குப் பக்கத்து அறையிலிருந்து வந்த அலறல் சத்தங்கள் அச்சத்தைக் கொடுத்தன” என்றார். முசாபர் நகர் வாசிகள் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் அச்சத்திலே இருந்துள்ளனர். போலீஸாரின் தாக்குதலுக்குப் பயந்து வீட்டின் மூலைமுடுக்குகளில் ஒளிந்திருந்ததாகக் கூறியுள்ளனர்.

``80-க்கும் அதிகமான போலீஸார் காவலர் உடையில், சாதாரண உடையிலும் வீதிகளில் சுற்றிவந்தனர். சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள், தெருவிளக்குகளை பெரிய சுத்திகளைக் கொண்டும் லத்தியைக் கொண்டும் உடைத்துக்கொண்டே சென்றனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த காவலர்கள். ஜன்னல்களை கற்களைக் கொண்டுத் தாக்கினர். வீட்டுக்குள் நுழைந்த காவலர்கள் ஜன்னல்கள், கதவுகள், இதரப் பொருள்களை உடைக்கும் காட்சிகளெல்லாம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது”என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

போராட்டம்
போராட்டம்

போலீஸாரின் வன்முறைக்கு சாட்சியாக நிற்கிறது அப்துல் கரீம் மசூதி. ``குஜராத்திலிருந்து வந்திருந்த மதரஸா மாணவர்கள் மசூதியில் தங்கியிருந்தனர். வழிபாடு நடக்கும் இடத்தில்தான் உறங்கிக்கொண்டிருந்தனர். கண்ணாடிகள் உடைக்கப்படும் சத்தம் கேட்டு அவர்கள் விழித்துக்கொண்டனர். போலீஸார் மசூதிக்குள் நுழைந்த போது அவர்கள் எல்லாம் பயத்தில் மாடிப்படிகளுக்குக் கீழே மறைந்துகொண்டனர்” என்றார் இமாம்.

`வெட்டப்பட்ட விரல்கள்; அமிலத்தில் கரைக்கப்பட்ட உடல்!’- கஷோகி கொலையில் சவுதியின் தீர்ப்பு
அடுத்த கட்டுரைக்கு