Published:Updated:

காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டதா...தற்போதைய நிலை என்ன?

இரா.வாஞ்சிநாதன்

மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம், தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டதுதான்

காஷ்மீர்
காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை முடக்கி அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இருவேறு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து 20 நாள்களுக்கு மேலாகிவிட்டது. இருப்பினும் இன்று வரையிலும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை என்கின்றன அங்கிருந்து வரும் தகவல்கள்.

ஆகஸ்ட் 5ஆம் தேதியிலிருந்து தற்போதுவரை அலைபேசி, இணையம் முதலிய எல்லாவிதமான தகவல்தொடர்புகளும் அங்கே முடக்கப்பட்ட நிலையே இருந்துவருகிறது. காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதாக மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டாலும் நிதர்சனம் அவ்வாறாக இல்லையென மக்கள் தரப்பில் கூறி வருகின்றனர்.

காஷ்மீர்
காஷ்மீர்

கடந்த திங்கட்கிழமை முதல் சில அரசுப்பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஸ்ரீநகரில் 190 தனியார் பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பி.டி.ஐ தெரிவித்திருக்கிறது. திறக்கப்பட்ட பல அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் வருவதில்லை எனவும் பணியில் உள்ள சில ஆசிரியர்கள் மட்டும் வந்து செல்வதாகவும் அந்தச் செய்தியில் பதிவிடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், பாரமுல்லா, புட்கம், கண்டர்பால், பந்திப்பூர் முதலிய ஐந்து மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 26 பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளது தேசிய ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரஸ். ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 26 பள்ளிகளிலும் மாணவர் வருகைப்பதிவேடு பூஜ்ஜியமாகத்தான் இருந்தது என்று சொல்கிறது எக்ஸ்பிரஸ் செய்தி.

``என் குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பாதுகாப்பாக இருக்கிறதா எனத் தெரியாமல் பயந்து வாழ முடியாது. எனவே என் குழந்தைகளை நான் தற்போது பள்ளிகளுக்கு அனுப்பவில்லை" என்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகச் சர்வதேச ஊடகம் ஒரு வாக்குமூலத்தைப் பதிவு செய்திருக்கிறது. ஸ்ரீநகரில் வசிக்கும் அய்ஜாஸ் அகமது என்பவரின் வீடு அவர் குழந்தை படிக்கும் பள்ளியிலிருந்து 50மீட்டர் தொலைவில்தான் இருக்கிறது. எனினும் தன்பிள்ளையை அவர் பள்ளிக்கு அனுப்பவில்லை.

``மாநிலத்தின் நிலவரம் மிகவும் மோசமாகவும் எப்போது வேண்டுமானாலும் கலவரம் உண்டாகும் நிலை இருக்கையில் என்குழந்தையின் பாதுகாப்புக்கு ஸ்ரீநகர் துணை ஆணையர் உத்திரவாதம் கொடுக்க முடியுமா...காவல்துறையில் உள்ளவர்களே தங்கள் குழந்தைகளை அனுப்ப பயப்படுகிறார்கள்." என்று அவர் அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம், தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டதுதான்
காஷ்மீர்
காஷ்மீர்

மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டதுதான் என்பதை அங்கே நேரில் சென்று கள ஆய்வு செய்த பல்வேறு தேசிய, சர்வதேச ஊடக நிருபர்களும் சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்ட பின் அவர்களை தொடர்புகொள்ள முடியாது போய்விடும். எனவே அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இயலாது என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் பொதுக்கருத்தாக இருக்கிறது. ஸ்ரீநகரில் உள்ள பர்ன்ஹால் பள்ளி நிர்வாகம், ``எங்களிடம் 25 பள்ளிப்பேருந்துகள் இருந்தும், எந்த ஓட்டுனரையும் தொடர்புகொள்ள இயலாததால் ஒரு பள்ளிப்பேருந்தைக்கூட இயக்கமுடியவில்லை" என்று தெரிவித்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் கல்வி இயக்குநர் முகமது யூசஃப் மாலிக், தகவல்தொடர்பு இயக்குநர் சையத் செரிஷ் அஸ்கர் மற்றும் டி.ஐ.ஜி. வி.கே.பேர்டி ஆகியோர் சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தென் காஷ்மீரில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் வருகை 2 முதல் 3 சதவிகிதமாகவும், வட காஷ்மீரில் 50 சதவிகிதம் வரை பள்ளிகளில் மாணவர் வருகை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இவை எந்த அளவுக்கு உண்மையென்பது இன்னும் தெரியவரவில்லை. காஷ்மீரின் முக்கிய ஊடகங்களான `தி ரைசிங் காஷ்மீர்', `தி கிரேட்டர் காஷ்மீர்' போன்ற முன்ணனி ஊடகங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு செயல்படவில்லை. இருப்பினும் சிற்சில அச்சு ஊடகப் பிரதிகள் ஆங்காங்கே அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இதுவரை 4,000 பேர் ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்புச் சட்டம் 1978இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அரசாங்கத்தரப்பிலிருந்து ``இத்தனையாயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சொல்வது உண்மைக்குப் புறம்பானது" என்று அரசு தரப்பு மறுத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்களான ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் தற்போதுவரை தடுப்புக்காவலில் உள்ளனர். ``இவர்கள் உட்பட தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளோர் அனைவரின் விடுதலையும் ஜம்மு காஷ்மீரின் உள்ளூர் நிர்வாகத்தால் மட்டுமே முடிவு செய்யப்படும்" என மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஆங்காங்கே சில இடங்களில் கல்வீச்சு போன்ற போராட்டங்கள் நடக்கின்றன எனவும் அவற்றை கண்ணீர் புகைகுண்டுகள், பெல்ட் குண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு ராணுவம் அடக்கியுள்ளதாக சர்வதேச ஊடகமான கார்டியன் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்
காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்

கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி உட்பட சிலர், காஷ்மீர் பள்ளத்தாக்கை பார்வையிடச் சென்றபோது அரசாங்கத்தாரால் வெளியேற்றப்பட்டு டெல்லிக்குத் திருப்பியனுப்பப்பட்டனர். ``நிலைமை இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளதாக அரசாங்கம் கூறிவருகிறது. பார்வையிடச் சென்ற எங்களை ஏன் திருப்பியனுப்ப வேண்டும்?' என ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த ஜம்மு காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக், "சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாக நடந்த கலவரங்கள் மற்றும் அசம்பாவிதங்களில் 50 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பிருக்கிறது. எங்கள் நோக்கம் மக்கள் உயிரைப் பாதுகாப்பது. அதை நோக்கி எங்கள் செயல்பாடு இருக்கும்.10 நாளாக தொலைத்தொடர்பு வசதிகள் இல்லையெனில் என்ன? இருக்கட்டும். இவற்றை சீக்கிரம் சீர்செய்து விடுவோம்" என்று உறுதியளித்துள்ளார்.

அங்கே நான் அதிகம் கேட்ட வார்த்தை `ஸூல்ம்' (ஒடுக்குமுறை)

ராய்ட்டர்ஸ் நிருபர் செபா சித்திக் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து 9 நாள்களுக்குப் பின்னர் திரும்பியுள்ளேன். அங்கே நான் அதிகம் கேட்ட வார்த்தை 'ஸூல்ம்' (ஒடுக்குமுறை). 'இந்தியா ஏன் எங்கள் மீது இப்படிப்பட்ட ஒடுக்குமுறையை ஏவுகிறது?'எனக் கேட்டார்கள் அங்கிருந்தவர்கள்." என்று ட்வீட் செய்துள்ளார்.

'நிலைமை இயல்புநிலைக்கு திரும்பிவருகிறது' என மத்திய அரசு தெரிவித்தாலும், சர்வதேச, தேசிய ஊடகங்கள் அவற்றை உறுதிப்படுத்தவில்லை. மாறாக அவற்றுக்கு முற்றிலும் நேரெதிரான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலை எத்தனை நாள்களுக்கு இப்படியே நீடிக்கும், இயல்பு நிலை திரும்பாவிடில் அரசு என்ன செய்யும் என்பதெல்லாம் காலத்தால் மட்டுமே பதில் தரக்கூடிய கேள்விகள்.