Published:Updated:

`மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை’ - நீதிமன்ற தீர்ப்பு விபரமும் மருத்துவர்கள் கருத்தும்

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்திய மருத்துவர்களை, பணியிட மாற்றம் செய்த தமிழக அரசின் நடவடிக்கையை ரத்து செய்துள்ளது உயர் நீதிமன்றம். இதுகுறித்து `நீதிமன்ற ஆணை கிடைத்தபிறகே விரிவான பதில் அளிக்க முடியும்' என்கிறது அமைச்சர் தரப்பு.

`அரசு, மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை!' என்ற அதிரடி தீர்ப்பை அளித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்!

`பதவி உயர்வு, சம்பள உயர்வு, மருத்துவர் எண்ணிக்கையை உயர்த்துவது' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.

மருத்துவர்களின் கோரிக்கைகளை ஏற்கமறுத்த தமிழக அரசு, `போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும்' என்று அறிவித்தது. ஆனாலும் அரசின் அறிவிப்பை அலட்சியம் செய்த பெரும்பான்மை மருத்துவர்கள், தொடர் வேலை நிறுத்தத்தில் தீவிரம் காட்டவே, `புதிய மருத்துவர்களை நியமிப்பதற்கான பணியாணை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களுக்கு பணியிட மாறுதல்' என அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்தது தமிழக அரசு!

`` `கப் முக்கியம் அக்கா'னு மீம் போட்டாங்க; அப்பதான் யோசிச்சேன்!" - `குக் வித் கோமாளி' வனிதா
மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர்கள் போராட்டம்

இதையடுத்து, `தமிழக அரசு, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக முடிவு காண வேண்டும்' என்ற கோரிக்கையோடு தற்காலிகமாக போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர் மருத்துவர்கள். ஆனாலும் தமிழக அரசு மேற்கொண்ட குற்றச்சாட்டு குறிப்பாணை (சார்ச் மெமோ) மற்றும் பணியிட மாறுதல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள், `அரசின் பழிவாங்கும் நடவடிக்கை'களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

சென்னை, உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கு விசாரணையில், `போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு எதிராக பணி மாறுதல், குற்றச்சாட்டு குறிப்பாணை' என தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை ரத்து செய்து தீர்ப்பளித்தது. அதே தீர்ப்பில், 'அரசு மருத்துவர்கள் போராட்டம் செய்ய உரிமை இல்லை' என்றும் நீதிமன்றம் கூறியிருப்பது, பலத்த விவாத அலைகளை எழுப்பி வருகிறது.

உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கைத் தொடுத்த, ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன், தீர்ப்பு குறித்துப் பேசியபோது, ``அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்ப்பின் அம்சம் வரவேற்கத்தக்கது. தமிழக அரசும், எந்தவித கௌரவமும் பாராமல், பெருந்தன்மையோடு உடனடியாக தீர்ப்பை அமல்படுத்துவதோடு, மருத்துவர்களது நியாயமான நீண்ட நாள் கோரிக்கையையும் பரிவோடு பரிசீலித்து சுமுகத் தீர்வு காண வேண்டும்.

ஏனெனில், மருத்துவர்களுக்கும் அரசை எதிர்த்துப் போராடுகிற எண்ணம் எதுவும் இல்லை. அரசோடு சுமுகமாகப் பேசி, கோரிக்கையை நிறைவேற்றுகிற எண்ணத்தில்தான் இருக்கிறோம். எனவே, நீதிமன்ற ஆணை கிடைத்ததும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் செயலரை சந்தித்து நீதிமன்ற ஆணையையும் எங்கள் கோரிக்கை மனுவையும் கொடுத்து நிறைவேற்றச் சொல்லிப் பேசவிருக்கிறோம்.

பிப்ரவரிக்கு ஒரு நாள் போனஸாய் வழங்கும் லீப் ஆண்டு... தெரிந்ததும் தெரியாததும்!
டாக்டர் பாலகிருஷ்ணன்
டாக்டர் பாலகிருஷ்ணன்

`அரசு மருத்துவர்கள் போராடுவதற்கு உரிமை இல்லை' என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. எனவே, நீதிமன்ற ஆணையை நாங்கள் மீறமாட்டோம். அதேசமயம், எங்களின் தார்மீக கோரிக்கைகளை ஜனநாயக முறைப்படி, மக்களைப் பாதிக்காத வண்ணம் போராட்டம் நடத்திக்கொள்வதற்கு நீதிமன்றம் தடையேதும் விதிக்கவில்லை. எனவே, எங்களை நாங்களே வருத்திக்கொள்கிற உண்ணாவிரதம், தர்ணா போராட்டங்களில் ஈடுபடுவதற்கு சட்டப்படி வழிகள் உள்ளதா என்பதையெல்லாம், நீதிமன்ற ஆணை எங்களுக்குக் கிடைத்து படித்துப் பார்த்த பிறகுதான் சொல்லமுடியும்'' என்றார்.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்,

`` `மருத்துவர்கள் பணியிட மாற்ற உத்தரவுகளை தமிழக அரசு, ரத்து செய்ய வேண்டும்' என்ற தீர்ப்பின் அம்சம் நறுக்கென்று உள்ளது. அதேநேரம், `அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை' என்று உயர் நீதிமன்றம் தெரிவித்திருப்பது அவசியமே இல்லாதது; வருத்தமளிக்கக்கூடியது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மருத்துவர்களுக்குப் போராட்டம் நடத்த முழு உரிமை உள்ளது. அதனால்தான் `மருத்துவர்களும் போராட்டம் நடத்த உரிமை உள்ளது' என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மருத்துவர்களும் தொழிலாளர்கள்தான். எனவே, அவர்களும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். சேவைத் துறையில் உள்ளவர்கள் அனைவருமே போராடக் கூடாது என்று முடிவெடுத்தால், அது ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கையாகிவிடும்.

டாக்டர் ரவீந்திரநாத்
டாக்டர் ரவீந்திரநாத்

மருத்துவர்கள் போராட்டக் களத்துக்கு வராத அளவுக்கு, அவர்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமான சூழலை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு, அரசுக்கும் இருக்கிறது. ஆனால், கடந்த காலங்களில் தமிழக அரசு, அப்படியான சூழலை ஏற்படுத்தாமல், வேலைநிறுத்தப் போராட்டத்தையே மருத்துவர்கள் மேல் நிர்பந்தப்படுத்திவிட்டார்கள்.

எங்களது போராட்டக் கோரிக்கைகள் அனைத்தும் இப்போதும் அப்படியே நிறைவேற்றப்படாமல் உள்ளது. அவைகளை நிறைவேற்றுவதோடு, நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதும் தமிழக அரசின் கடமை.

ஏனெனில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களைப் பழிவாங்கும் விதமாக அரசு எடுத்த தவறான பணியிட மாறுதல் நடவடிக்கைகளால், மருத்துவர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது, சிறுநீரகவியல் போன்ற சூப்பர் ஸ்பெஷாலிட்டி படித்த மருத்துவர்களைக்கூட, `போராட்டத்தில் ஈடுபட்டார்' என்ற குற்றத்துக்காக சூப்பர் ஸ்பெஷாலிட்டி வசதியே இல்லாத மருத்துவமனைகளுக்கு பணியிட மாறுதல் செய்து பழி தீர்த்திருக்கிறார்கள்.

தமிழக அரசின் இந்தப் பழிவாங்கல் நடவடிக்கையால், சிறப்பு சிகிச்சை பெறவேண்டிய மக்களும் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கமுடியாத வருத்தத்தில் மருத்துவர்களும் தவித்துவருகின்றனர். எனவே, இரு தரப்பையும் மகிழ்விக்கும் விதமாக தமிழக அரசு, உடனே நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்றார்.

மருத்துவர்கள் போராட்டம்
மருத்துவர்கள் போராட்டம்

இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், தீர்ப்பு குறித்தும் அரசு மருத்துவ சங்கங்களின் கோரிக்கை குறித்தும் விளக்கம் கேட்டு, அமைச்சரைத் தொடர்புகொண்டோம். மீட்டிங்கில் இருப்பதாக தகவல்கூறிய அமைச்சரின் உதவியாளர், சிறிது நேரத்துக்குப் பின்னர் நம்மைத் தொடர்புகொண்டு, `நீதிமன்ற ஆணை கிடைத்தப்பிறகுதான் இவ்விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கமுடியும்' என அமைச்சர் தெரிவித்ததாகச் சொல்லி `சுருக்'கமாக முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு