Published:Updated:

`48 கட்ட பேச்சுவார்த்தை; கேட்பது 17 ரூபாய்; தருவதாகச் சொல்வதோ ரூ.2' - கலங்கும் ரப்பர் தொழிலாளர்கள்

பால் வடிக்கப்படாத ரப்பர் மரங்கள்
பால் வடிக்கப்படாத ரப்பர் மரங்கள்

`இப்போது நாங்கள் 17 ரூபாய் அதிகரித்துத் தாருங்கள் என கேட்கிறோம். அதற்கு அதிகாரிகளோ இரண்டு ரூபாய் அதிகரித்துத் தருவதாகச் சொல்கிறார்கள்'.

கன்னியாகுமரி மாவட்டத்தில், சுமார் 10,000 ஏக்கரில் ரப்பர் பயிரிட்டுள்ளது அரசு. அதற்காக அரசு ரப்பர் கழகம் ஏற்படுத்தப்பட்டு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு, அரசுத் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்த நிலையில், அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திவந்தனர். அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை நாகர்கோவிலிலும் சென்னையிலும் 47 முறை பேச்சுவார்த்தை நடந்து முடிந்துவிட்டது.

தொழிலாளர்களின் பிரச்னை முடிவுக்கு வராததால், நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்பது கோட்டங்களிலும் சுமார் 3,000 தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். இதனால் ரப்பர் பால் வெட்டுதல், பால் வடித்தல், புல் வெட்டுதல் போன்ற அனைத்துப் பணிகளும் முடங்கின.

ரப்பர் மரம்
ரப்பர் மரம்

இதையடுத்து, நேற்று மாலை அனைத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் நாகர்கோவில் உள்ள தொழிலாளர் நல துணைஆணையர் அலுவலகத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர் நல துணை ஆணையர் சுபைதார் முன்னிலையில், அரசு ரப்பர் தோட்ட அனைத்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் அரசு ரப்பர் கழக நிர்வாகிகளுக்கும் இடையேயான 48-வது பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில், அதிகாரிகள் தரப்பில் ஊதிய உயர்வுகுறித்த தொழிலாளர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டதால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும், அரசிடம் பேசி 49-வது கட்ட பேச்சுவார்த்தையை வரும் 20-ம் தேதி நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனந்த கிருஷ்ணன்
அனந்த கிருஷ்ணன்

இதுகுறித்து ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க மாவட்ட தலைவர் அனந்த கிருஷ்ணன் கூறுகையில், ``ஊதிய உயர்வு கேட்டு ஏற்கெனவே 47 முறை பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு நடந்த ஒரு பேச்சுவார்த்தையில், இடைக்கால நிதி என்ற அடிப்படையில் 23 ரூபாய் ஊதியத்தை அதிகரித்துக் கொடுத்தனர். அதன்பிறகு அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு ரூபாய்கூட ஊதியத்தை உயர்த்தவில்லை. எனவே, இப்போது நாங்கள் 17 ரூபாய் அதிகரித்துத் தாருங்கள் எனக் கேட்கிறோம். அதற்கு அதிகாரிகள், இரண்டு ரூபாய் அதிகரித்துத் தருவதாகச் சொல்கிறார்கள். அதற்கு நாங்கள் உடன்படாததால், அதிகாரிகள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு 20-ம் தேதி அழைத்துள்ளனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு