Election bannerElection banner
Published:Updated:

`முடிக்கப்படாத பாதாளச் சாக்கடை திட்டம்’ - சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ!

எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி
எம்.எல்.ஏ கே.ஆர்.ராமசாமி

தீர்வு காணப்படாத பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்கக் கோரி காரைக்குடி எம்.எல்.ஏ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் பாதாளச் சாக்கடை பணி, சாலை வசதித் திட்டம் முடிவடையவில்லை. இந்தப் பணி இழுத்தடிக்கப்படுகிறது. இதனால், காரைக்குடி பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். காரைக்குடி நகர் முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால் விபத்துக்கள் மட்டுமல்லாமல், உயிர் பலியும் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதனால், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவருமான கே.ஆர்.ராமசாமி பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ
கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ

இந்நிலையில், இன்று காரைக்குடி ரஸ்தா பகுதியில் இருந்து மோசமாக உள்ள சாலைகளை பார்வையிட்டு வந்தவர், திடீரென காரைக்குடி அண்ணாசிலை அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அதிகாரிகளின் சமாதானப் பேச்சை ஏற்காமல் 1 மணி நேரத்துக்கு மேலாக சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அதிகாரிகள் சுமார் ஒருமாத காலத்தில் பணிகளை விரைந்து முடிப்பதாக ஒப்புக்கொண்டதால், அங்கிருந்து கிளம்பினார். காரைக்குடி எம்.எல்.ஏ.வும் காங்கிரஸ் மூத்த அரசியல்வாதியுமான கே.ஆர்.ராமசாமி சாலை மறியலில் ஈடுபட்டது காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவாரூர் - காரைக்குடி ரயில்; கேட் கீப்பர்களை நியமிக்காமல் சேவையை நிறுத்துவதா? - வலுக்கும் கோரிக்கை

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மக்கள் மன்றம் தலைவர் ச.மீ.இராசகுமார், ``பாரம்பரிய நகரமான காரைக்குடி மிகப்பெரிய சுற்றுலாத்தளமாக இருப்பதால் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். ஆனால், இப்போது இங்கு பாதாளச் சாக்கடைப் பணி நடைபெற்று வருவதால் காரைக்குடியின் அனைத்து சாலைகளும் சேறும் சகதியுமாக பயணிக்க முடியாதபடி இருக்கின்றன. குண்டும் குழியுமான சாலைகளால் தினம்தோறும் விபத்துகளும் உயிர்ப் பலியும் ஏற்பட்டு வருகிறது. இங்கு தற்போது சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியினராக இருப்பதால் காரைக்குடியை தமிழக அரசு புறக்கணிக்கிறது.

சாலையில் அமர்ந்த கே.ஆர்.ராமசாமி
சாலையில் அமர்ந்த கே.ஆர்.ராமசாமி

மேலும், காரைக்குடியின் வளர்ச்சிக்கு எந்த நிதியும் ஒதுக்காமல் பாதாளச் சாக்கடைத் திட்டத்திற்கும் நிதியினை உடனடியாக வழங்காமல் மூன்றாண்டுகளாக காரைக்குடியில் இந்தத் திட்டத்தின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. எனவே காரைக்குடியில் அனைத்து சாலைகளையும் சீரமைப்பதோடு, மழைநீர் கால்வாய்கள், சாக்கடைக் கால்வாய்கள், எல்.இ.டி தெருவிளக்குகள், சந்தைகள் மேம்பாடு, நகருக்குள் கழிவறை என காரைக்குடி நகர மேம்பாட்டுக்காக உடனடியாக காரைக்குடியினைச் சீர்படுத்த ரூ.500 கோடி சிறப்பு நிதியினை வழங்கி காரைக்குடியைச் சீரமைக்க வேண்டும். உடனடியாக காரைக்குடியினை மாநகராட்சியாகவும், தனி மாவட்டமாகவும் அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கையோடு முடித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு