Published:Updated:

`எங்களுக்கு ஓ.பி.எஸ்ஸைத் தெரியும்!' - மதுரை அரசுப் பெண் மருத்துவர் மீது தாக்குதல்?

``நாங்க யார் தெரியுமா, ஓ.பி.எஸ்ஸுக்குத் தெரிஞ்சவங்க'' என்று கூறி மிரட்டியிருக்கிறார். அத்தோடு அந்தப் பெண்ணும், கர்ப்பிணியின் மாமியாரும் சேர்ந்து அந்த டாக்டரைக் கடுமையாத் தாக்கியிருக்காங்க.

டாக்டர் போராட்டம்
டாக்டர் போராட்டம்

பெண் மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரும் திடீரென்று போராட்டத்தில் குதித்துள்ளதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டாக்டர் போராட்டம்
டாக்டர் போராட்டம்

மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண், அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை பிரசவ அறைக்குள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அப்போது அப்பெண்ணுடன் வந்த உறவுப்பெண்களுக்கும் பெண் மருத்துவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், பெண் மருத்துவர் மாலதி தாக்கப்பட்டதாகக் கூறி மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மருத்துவர்கள் சிலர், ``பிரசவ வார்டுக்குள் மற்றவர்களை அனுமதிப்பதில்லை. ஆனால், தேவையில்லாமல் கர்ப்பிணியின் உறவுப்பெண் உள்ளே வந்து டாக்டரிடம் தகராறு செய்துள்ளார். செருப்புக் காலோடு உள்ளே வரக் கூடாது என்று டாக்டர் அவரிடம் சொல்லியிருக்கிறார்.

டாக்டர் போராட்டம்
டாக்டர் போராட்டம்

அதற்கு, ``உன்னைப் பார்த்தா டாக்டர் மாதிரி தெரியல. நீயெல்லாம் எங்களை, `செருப்பு போடக்கூடாது'ன்னு சொல்றியா. நாங்க யார் தெரியுமா, ஓ.பி.எஸ்ஸுக்குத் தெரிஞ்சவங்க'' என்று கூறி மிரட்டியிருக்கிறார். அத்தோடு அந்தப் பெண்ணும் கர்ப்பிணியின் மாமியாரும் சேர்ந்து அந்த டாக்டரைக் கடுமையாத் தாக்கியிருக்காங்க. செருப்பால் அடித்திருக்கின்றனர். இதை எப்படி அனுமதிக்க முடியும்?'' என்றனர்.

Vikatan

கர்ப்பிணி பெண்ணின் தரப்பிலோ, ``அந்தப் பெண் டாக்டர்தான் ரொம்ப அராஜகமாக நடந்துகொண்டார். கர்ப்பிணிப் பெண்ணின் கன்னத்தில் அறைந்துள்ளார். அதைப்பார்த்து பதறிப்போய் கேட்கப்போன எங்களை அசிங்கமாகத் திட்டினார். அவர்தான் எங்களைத் தாக்கினார்'' என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

டாக்டர் போராட்டம்
டாக்டர் போராட்டம்

இரண்டு தரப்பிலும் தவறு நடந்துள்ளது என்று காவல்துறையினர் கூறி வந்தனர். இந்தநிலையில், `சம்பந்தப்பட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது மருத்துவர்கள் பாதுகாப்புச் சட்டப்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும்' என்ற கோரிக்கையுடன் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தை அனைத்து டாக்டர்களும் நடத்தி வருகிறார்கள். தற்போது அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.